நிரல்
ஒக். 31 10:02

இருபத்து இரண்டாவது திருத்தச் சட்டமூலம் இன்று முதல் அமுல்

(வவுனியா, ஈழம்) இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாதென்பது உள்ளிட்ட இலங்கை ஒற்றையாட்சியை நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன அறிவித்துள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் செய்யப்பட்ட இந்த திருத்தச் சட்டமூலம் கடந்த 21 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன் இன்று கையொப்பமிட்டார்.
ஒக். 30 10:26

கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையினால் இலங்கை வான்வழிச் சேவைகளை வெளிநாடுகள் பொறுப்பேற்கும் அபாயம்

இலங்கைத்தீவின் விமான சேவைக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பல்வேறு தாக்கங்களில் ஒன்றாகவே விமான சேவைக்கான நெருக்கடியையும் எதிர்நோக்க வேண்டிய இருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது நிலவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையால், இலங்கை வான் வழியாகச் செல்லும் சர்வதேச விமானங்களுக்கான வான்வெளிச் சேவையை வெளிநாட்டு நிறுவனங்கள் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி எடுப்பதாகக் கூறப்படுகின்றது. பணியாட்கள் தட்டுப்பபாடு என்றும் புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டாலும் பயிற்சி இல்லாமல் அவர்களை உடனடியாகப் பணியில் அமர்தத முடியாதெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒக். 29 13:02

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா

(வவுனியா, ஈழம்) ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள கடும் முயற்சிகளுக்கு மத்தியில், சீனா தனித்து நின்று ரசியாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றது. ஆனால் இதுவரையும் சீனா ரசியாவுக்கு ஆயுதங்கள் எதனையும் வழங்காத சூழலில், ரசியாவை ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் முன்னிலையில் தனித்துவம் மிக்கதாகக் காண்பிக்கவே சீனா முற்படுகின்றது. அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உலக அரசியல் ஒழுங்கில் மாற்றத்தைக் காண முற்படும் சீனா, முடிந்தவரை அமெரிக்காவுடன் இணங்கிச் செல்லும் காய்நகர்த்தல்களிலும் ஈடுபடுகின்றது. முன்னர் அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த அதே அணுகுமுறையைச் சீனா தற்போது கன கச்சிதமாகக் கையாள ஆரம்பித்துள்ளது.
ஒக். 28 22:26

கடன் வழங்கும் நாடுகளுடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சு

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு கடன் வழங்கும் தரப்பினருக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக். 27 21:48

அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிக்க ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பதின் நான்காம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஒக். 26 22:08

ரணில் - மகிந்த அணி கூட்டு- ரவி, பிரசன்ன ரணதுங்க பேச்சு

(யாழ்ப்பாணம், ஈழம்) ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் முரண்பாடுகள் வலுவடைந்து வருகின்றன. டளஸ் அழகபெருமா தலைமையில் ஏற்கனவே பன்னிரெண்டு உறுப்பினர்கள் கொண்ட அணி பிரிந்து சென்று தேசிய சுதந்திர சபை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் மற்றுமொரு அணி பிரிந்து சென்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக். 25 21:24

அமெரிக்க உதவிகளை மேலும் அதிகரிக்க முடிவு

(வவுனியா, ஈழம்) அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் கொழும்புக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கொழும்புக்கு வருகை தந்த அவர் இன்று பல சந்திப்புக்களில் கலந்துகொண்டார். ரொபர்ட் கப்ரோத்தின் கொழும்புப் பயணம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படுமென அமெரிக்கா எற்கனவே கூறியிருந்த நிலையில் இருவாரத்துக்குள் இரண்டு அமெரிக்க இராஜதந்திரிகள் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.
ஒக். 23 09:32

சுயாதீன ஆணைக் குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் இருபத்து இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது செயற்படும் அனைத்துச் சுயாதீன ஆணைக் குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். சபாநாயகர் அனுமதி வழங்கியதன் பின்னர், குறித்த திருத்தம் அமுலுக்கு வரும் என்று கூறிய அமைச்சர் புதிய ஆணையாளர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதைய ஆணையாளர்கள் இடைக்கால ஆணையாளர்களாக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஒக். 22 11:01

சீன நகர்வுக்குள் முடங்கும் இந்தியா- சுயமரியாதையையும் இழந்தது

உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய நாடுகளிடையே ஏற்படுகின்ற போட்டிகள் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துத் தமது புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டு வந்த காய் நகர்த்தல்களைத் தற்போது சீனா தனதாக்கி வருகின்றது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் சமர்கண்ட் நகரில் செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் (State of the Shanghai Cooperation Organisation - SCO) சீனாவின் நுட்பமான அணுகுமுறை வெளிப்பட்டுள்ளது. ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலினால், மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கை மேலும் தனக்குச் சாதகமாக வகைப்படுத்த இம் மாநாட்டைச் சீனா கன கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளதெனலாம்.
ஒக். 20 09:20

இலங்கைக்குத் தொடர்ந்து உதவியளிக்க அமெரிக்கா உறுதி

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற கடன் திட்டங்களுக்கு மேலதிகமாக அமெரிக்க நிதியுதவி இலங்கைக்கு நேரடியாகக் கிடைக்குமென தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமாகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை புதன்கிழமை மாலை சந்தித்தார். கொள்பிட்டி காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.