நிரல்
நவ. 23 22:08

மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்காகப் போராட்டம் நடத்தினால் முப்படைகளையும் பயன்படுத்தி அடக்குவேன்- ரணில்

(வவுனியா, ஈழம்) அடுத்த ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முயற்சி எடுத்தால், முப்படைகளைப் பயன்படுத்தி அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து அடக்குவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தும் தொனியில் கூறினார். நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நவ. 22 21:03

வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

(மட்டக்களப்பு, ஈழம்) அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முப்பத்து ஏழு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தார். இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் புறக்கணித்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிராக வாக்களித்தது. தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
நவ. 21 07:59

சஜித் - மைத்திரி அணி மற்றும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்க முடிவு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
நவ. 20 22:14

ஒற்றுமையில்லை என்பதன் பின்னால் உள்ள அரசியல்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களை முடிந்தவரை இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் இணைந்து வாழக்கூடிய அளவுக்குச் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக்சொல்கேய்ம் போன்றவர்கள் மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஊடாக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்களுக்கு பின்னால் இலங்கை அரசாங்கம் மிக நுட்பமாகச் செயற்பட்டு வருகின்றது. 2009 போருக்கு முன்னர் கையாளப்பட்ட அதே அணுகுமுறைகள் தற்போது மீண்டும் வெவ்வேறு அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் ஊடாகக் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.
நவ. 19 09:38

ரணில் அரசாங்கத்தில் சஜித் அணி உறுப்பினர் ராஜித சேனரட்ன இணைவார்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ராஜித சேனரட்ன. சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்பட்டிருந்தார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளது.
நவ. 18 09:15

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கவே கூடாதென்கிறார் சரத் வீரசேகரா

(வவுனியா, ஈழம்) அரசியல் யாப்புக்கு அமைவாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாதென இலங்கை இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரியும், ராஜபக்ச் குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிக்காக்கும் படையைத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பித் தோல்வியடைந்ததாலேயே இந்தியா இலங்கையில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது என்றும் அவர் கூறினார். வியாழக்கிழமை இடம்பெற்ற வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.
நவ. 17 10:32

உதவி வழங்கும் நாடுகள் கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக இணக்கம் வெளியிடவில்லை என்கிறாா் அமைச்சா்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடித் தீர்வுக்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் அரச ஊழியர் மட்டத்தில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ள நிலையில், இறுதி ஒப்பந்தம் அரசாங்கத்துடன் செய்யப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் செய்யப்படும் ஒப்பந்தமே அதிகாரபூர்வமானது என்றும் அமைச்சர் கூறினார். அரச ஊழியர்மட்ட ஒப்பந்தத்தில் பல பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது. அவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயக்கம் காண்பித்து வந்த நிலையில். அரசாங்கம் அதிகாரபூர்வமான ஒப்பந்தத்தைச் செய்யவுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
நவ. 16 09:36

இந்தியா ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதை நுட்பமாகக் கையாளும் சிங்கள ஆட்சியாளர்கள்

(முல்லைத்தீவு) 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை அறவழியில் தொடர்ந்து முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைக்குச் சென்றிருந்தது. ஆனால் அதனை ஒழுங்குமுறையில் கொண்டு செல்ல முடியாமல், சிதறவைத்துக் கையாளப்படும் சக்திகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பங்களிப்பு வழங்க வேண்டுமெனச் சம்பந்தன் கேட்டிருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அருகில் இருந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தாமல், கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் வெளியேறிய நிலையில், தற்போது ஐ.நாவை நாடுகிறார் சம்பந்தன்.
நவ. 14 08:25

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி

(வவுனியா, ஈழம்) வரவுசெலவுத் திட்டத்தின் மொத்தத் தொகையில் பத்து வீதம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இவ்வளவு தொகை எனவும் அவர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்குக் கிழக்கில் மீள் குடியேற்றம் மற்றும் உதவிகள் தொடர்பான விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நவ. 13 09:24

விடுதலையின் பின்னால் அரசியல் இல்லை- சட்டம் தன் வழி சென்றிருக்கிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட அன்றைய தினமே நளினி உள்ளிட்ட ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய உயர் நீதிமன்றத்தினால் வெள்ளிக்கிழமை ஆறுபேரும் விடுதலை செய்யப்பட்ட பின்னணியில் எந்தவொரு அரசியலும் இல்லை என்பது பகிரங்கம். இந்த விடுதலைக்கு மோடி அரசாங்கமோ, தமிழகத்தில் தி.மு.க.அரசாங்கமோ உரிமை கோரவும் முடியாது முப்பது ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தைச் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளனை மே மாதம் 18 ஆம் திகதி விடுதலை செய்தது.