நிரல்
செப். 05 15:11

ஆர்ப்பாட்டத்தின்போது மஹிந்த, கோட்டபய அணியின் மக்கள் பலத்தைக் கண்டு அமெரிக்கா அச்சமடைந்ததா அல்லது ஆதரவா?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதை கொழும்பில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கத் தூதரகம் தமது ரூவீற்றர் தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. பாரிய அளவில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் மூலம் மஹிந்த ராஜபக்ச அணிக்கு அதிகளவு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை அமெரிக்கா உலகத்துக்கு காண்பிக்க விரும்புகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.
செப். 05 09:18

கிளிநொச்சி நீரேந்துப் பகுதியிலும் இரத்தினபுரம் பாலத்திற்கு அருகிலும் அத்துமீறிய குடியேற்றங்கள்- மக்கள் முறைப்பாடு

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும், அதனை நிறுத்த மைத்திரி- ரணில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் வெவ்வேறு வடிங்களில் மேலும் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தனியார் காணிகள். தரிசு நிலங்களில் வடக்கு- கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து வரும் பலர் கொட்டில்களை அமைத்து குடியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்திற்கு அருகாகவுள்ள காணிகளிலும் சில நபர்கள் அத்துமீறி கொட்டில்களை அமைத்து குடியிருக்கின்றனர்.
செப். 04 23:41

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் புத்தார் சிலை அமைக்க முயற்சி - இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர்

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசத்தில், தென்பகுதியில் இருந்து சென்ற பௌத்த பிக்குமார் சிலர், அங்கு புத்தர்சிலை ஒன்றை அமைப்பதற்கு முற்பட்டனர். ஆனால் விடயத்தை அறிந்த பிரதேச இளைர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்கு வந்த இளைஞர்கள் இது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்றும் இங்கு பௌத்த சமயத்தைப் பின்பற்றும் மக்கள் எவரும் வாழவில்லை எனவும் ஆகவே புத்தர் சிலை வைத்து இன மோதலை ஏற்படுத்த வேண்டாம் எனவும் எடுத்துரைத்தனர். குமுழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் உள்ள குருந்தூர் மலைக்கு பௌத்த பிக்குமார் சிலர் சென்று கொண்டிருந்தபோது, பிரதேச இளைஞர்கள் பின்தொடர்ந்து வருவதை அறிந்து தப்பிச் செல்ல முற்பட்டனர்.
செப். 04 16:02

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை கொழும்பில் உள்ள பிரித்தானிய பிரதித் துாதுவரும் உயர் அதிகாரிகளும் பார்வையிட்டனர்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் சீன அரசின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரசின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவர் டிம்பேர்ன் (Tom Burn) தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட குழவினர் அம்பாந்தோட்டைத் துறைமகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தற்போது நிர்வகிக்கும் இலங்கை, சீன அதிகாரிகள் பிரித்தானியாவின் பிரதித் தூதுவரையும் அவருடன் சென்ற குழுவினரையும் வரவேற்று உரையாடியுள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
செப். 04 10:23

மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் சிங்களக் குடியேற்றங்கள்- கொழும்பு நிர்வாகத்தின் கீழ் திட்டங்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) நல்லாட்சி என தம்மைத்தாமே கூறிக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேதான் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மிக மிக வேகமாகத் தீவிரமடைந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் முல்லைத்தீவு. வவுனியா மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த ரவிகரன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேன என்றும் குறிப்பிட்டார்.
செப். 03 23:22

யாழ் மாவட்டத்தில் நான்காயிரத்தி 500 ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்திடம்- நிதிக்குழுக் கூட்டத்தில் மேலதி அரச அதிபர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் முதன் முறையாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று யாழப்பாணத்தில் நடபெற்றுள்ளது. நிதிக்குழுவின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கொழும்பில் இருந்து சென்ற சிங்கள உயர் அதிகாரிகள் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விடயங்களுக்கு நிதி ஒதுக்குவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவையான நிதிகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
செப். 03 20:15

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது- இதுவரை 97 எலும்புக்கூடுகள் மீட்பு

(மன்னார், ஈழம்) மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலைய வளாகத்தில் போர்க்கல மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை 62 ஆவது நாளாகவும் இடம்பெற்றன. இதுவரை நூற்றிப் பதினொரு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எலும்புக் கூடுகள் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பொதியிடப்பட்டுள்ளன. அதேவேளை அகழ்வுப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எலும்புக் கூடுகளில் அதிகளவு மண்டையோடுகள் காணப்படுவதால் அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பெண்கள் பயன்படுத்தும் காப்புகள், மாலை, போன்ற மனித எச்சங்கள் மாத்திரமே தடயப் பொருட்ளாக மீட்கப்பட்டுள்ளன.
செப். 03 15:15

வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான ஏழு கட்டடங்கள் இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில்- தவிசாளர் முறைப்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான ஏழு கட்டடங்கள் இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் அரச கட்டங்கள் பலவற்றை இலங்கை இராணும் பயன்படுத்துவதாகவும் அவற்றை பொதுமக்களிடமும் வலி வடக்கு பிரதேச சபையிடமும் கையளிக்க வேண்டும் என சுகிர்த்ன் வலியுறுத்தயுள்ளார். வலி வடக்கு பிரதேச சபையின் தலைமைக் கட்டடம் இதுவரை கையளிக்கப்படவில்லை. சபையின் காங்கேசன்துறை அலுவலகத்திற்குரிய நூல் நிலையம், சிறுவர் பூங்கா, வாடிவீடு ஆகியவற்றில் இலங்கைப் படையினர் தங்கியுள்ளனர். அத்துடன் குரும்பசிட்டி, வசாவிளான், காங்கேசன்துறை ஆகிய மூன்று மைதானங்களும் இலங்கைப் படையினரின் பாவனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப். 02 23:00

ஜப்பான் அமைச்சர்களின் வருகையின் பின்னர் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றக்குழு இந்தியாவுக்குப் பயணம்

(வவுனியா, ஈழம் ) தமிழ்ததேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் குழு ஒன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளது. அதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்திய ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமனியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். இந்தியாவுக்குச் செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்றக்குழு எதிர்வரும் ஒன்பதாம் திகதியில் இருந்து பத்தாம் திகதி வரை இந்தியாவில் தங்கி நிற்கவுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் பயணமும் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றக் குழுவின் பயனமும் வெவ்வேறானவை என இலங்கை நாடாளுமன்றச் செயலாளர் கூறுகின்றார்.
செப். 02 14:58

காஞ்சூர மோட்டைக் கிராமத்தில் மீளக்குடியேற இலங்கை வன இலாகா திணைக்களம் தடை- மக்கள் முறைப்பாடு

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமங்களான காஞ்சூர மோட்டை, காட்டுப் பூவரசங்குளம், நாவலர் பாம் ஆகிய பூர்வீக நிலங்களில் தமிழ் மக்கள் மீளக் குடியேறுவதற்கு இலங்கை வன இலாகா அதிகாரிகளும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக தடையேற்படுத்தி வருவதாக மக்கள் முறையிட்டுள்ளனர். இந்த நிலங்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் என்றும் இங்கு வாழந்த நூற்றுக்கனக்கான குடும்பங்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்நததாகவும் கிராம அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் பிரதேசங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் ஏலவே தமது நிலங்களில் குடியேறியுள்ளனார். ஆனாலும் பல குடும்பங்கள் சொந்த நிலங்ளில் மீளக்குடியேற முடியாமல் தவிப்பதாகவும் இலங்கை இராணுவப் புலானாய்வுப் பிரிவினர் தடுத்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.