நிரல்
நவ. 17 13:51

கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு தொழில்சார் நெருக்கடி

(கிளிநொச்சி, ஈழம்) கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் கடற்தொழில்களில் ஈடுபட்டு வரும் 3 ஆயிரத்து 389 வரையான மீனவர்கள் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 70 வீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்ற போதும் மொத்தமாகவுள்ள குடும்பங்களில் 4 ஆயிரத்து 205 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
நவ. 16 22:09

சபாநாயகர் கரு ஜயசூரியவின் கடிதத்தை நிராகரித்தார் மைத்திரி - ரணிலை பிரதமராக ஏற்க முடியதெனவும் தெரிவிப்பு

(வவுனியா, ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடுமையான தீர்மானங்களினால் அரசியல் நெருக்கடி நீடித்துச் செல்கின்றது. மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருப்பதற்குரிய பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்றும் ஆகவே புதிய அரசாங்கத்தை அமைக்குமாறும் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் எழுதிய கடிதத்தையும் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இன்றிரவு கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், நாடாளுமன்றம் ஒழுங்கான முறையில் நடைபெறாமல் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாதென மைத்திரி கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஒருபோதும் ஏற்க முடியாதனவும் மைத்திரி கூறியுள்ளார்.
நவ. 16 14:10

நாடாளுமன்றத்தைக் கூட்டவிடாமல் மகிந்த தரப்பு அட்டகாசம்- பொலிஸாரின் பாதுகாப்புடன் சபைக்குள் சபாநாயகர்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை 1.30க்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்கள் சபைக்குள் முன்னதாகவே சென்று சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடியுள்ள நிலையிலேயே மகிந்த ராஜபக்ச தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய அமா்வின்போது நாடாளுமன்றத்திற்குள் கத்தியோடு வந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பாலித தெவரப்பெருமவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியே மகிந்த ராஜபக்ச தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நவ. 16 10:57

இன்று மதியம் கூடுகின்றது நாடாளுமன்றம் - மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அடிதடி மோதலையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று இலங்கை நேரப்படி மதியம் 1.30க்கு கூடவுள்ளது. இன்றைய இந்த அமர்வில் நாடாளுமன்ற சபாநாயகர் கருஜயசூரியவால் நேற்றைய சம்பவம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்களும் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் பிரதமர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், இன்று அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நவ. 15 22:54

கஜா சூறாவளி- வடமாகாணத்தை ஊடுருவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் வடக்கே காங்கேசன்துறையிலிருந்து சுமார் 325 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலை கொண்டுள்ள கஜா சூறாவளி மேற்கு சார்ந்து தென்மேற்கு திசையினூடாக நகர்ந்து செல்லவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் இது வடக்கு கரையிலிருந்து சுமார் 120 கிலோமீற்றர் தொலைவுக்கு அப்பால் நகர்ந்து தமிழ் நாட்டின் தென் கரையை ஊடறுத்து செல்லும். இதன் தாக்கத்தினால் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும், அத்துடன் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யக் கூடும்.
நவ. 15 21:50

பிரதான அரசியல் கட்சிகளுடன் மைத்திரி - மகிந்த சந்திப்பு, ரணில் ஆதரவாளர்கள் கொழும்பில் பேரணி

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை அரசியல் நெருக்கடி நீடித்துச் செல்லும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான அரசியல் கட்சித் தலைவர்களோடு கலந்துரையாடி வருகின்றார். இன்று மாலை இடம்பெற்ற இரண்டு சந்திப்புக்களிலும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஜே.வி.பி, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான சிறிய கட்சிகள் கலந்துகொண்ட சந்திப்பில், நாடாளுமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட விடயங்கள் எதனையும் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களும் ஊடகங்களுக்கு கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
நவ. 15 13:51

நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்- கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின் சபாநாயகர் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய நாடாளுமன்றம் நாளை 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30க்கு கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற களோபரத்தை அடுத்து எதுவித அறிவித்தலுமின்றி சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றிருந்தார். இதன் பின்னர் கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவ. 15 11:19

நாடாளுமன்றத்தில் வாய்த்தர்க்கம், கைகலப்பு - உறுப்பினர்கள் சிலருக்கு காயம், தானே பிரதமர் என்கிறார் மகிந்த

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அடிதடி மோதலையடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவை சுற்றிவளைத்த மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். கைகலப்பும் ஏற்பட்டதால் உறுப்பினர்கள் சிலர் காயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றம் கூடியதும் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஏற்க முடியது என்று கூறிவிட்டார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும் அதனையும் மீறி மகிந்த ராஜபக்ச பிரதமர் ஆசனத்தில் இருந்தவாறு சிறப்புரையாற்றினார். அந்த உரையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்தது.
நவ. 15 04:50

"தமிழீழம் சிவக்கிறது" நூலை அழித்துவிடுங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

(சென்னை, தமிழ்நாடு) தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களால் 1993 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, தமிழக காவல்துறையால் 2002 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட "தமிழீழம் சிவக்கிறது" என்ற நூலை அழித்துவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 1989 காலகட்ட ஈழப் போர் நிலவரம், தமிழீழத்தின் போராட்டம் மற்றும் அரசியல் வரலாறு, உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டே பழ.நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதியிருந்தார். 'இது தமிழீழம் குறித்தான வரலாற்று பொக்கிஷம்' என்று அன்றைய கால ஈழ ஆதரவாளர்களால் புகழப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் நாட்டில் வெளியிட அனுப்ப இருந்த தருவாயிலேயே அன்றையக் காலக்கட்டத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவ. 14 15:36

அமெரிக்காவின் உதவியைக் கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் உள்ள சிங்கள கடும்போக்குவாதிகளிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு தாயகத்துக்கு அமெரிக்கா வர வேண்டும் என தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையின்போதும் அதற்குப் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் கடந்த 1 வருடத்துக்கும் மேலாக கண்டனப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.