நிரல்
டிச. 10 12:29

நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் மக்கள் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீர்மானத்திற்கு அமைய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீர்வின்றித் தொடர்ந்து செல்லும் நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தின் ஹட்டனில் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் இளைஞர் அமைப்புகளின் ஏற்பாட்டில், இன்று முற்பகல் 11 மணியளவில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
டிச. 10 11:41

கிராமசேவகர் இடமாற்றப்பட்டதைக் கண்டித்து புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக அரசியல் நெருக்கடி தொடர்கின்ற நிலையில், அரசாங்க அதிகாரிகளது இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் –புன்னாலைக்கட்டுவன் (208) பகுதி கிராமசேவகர் இடமாற்றம் செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் நவடிக்கை எனத் தெரிவித்து கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமசேவகருக்கு வழங்கப்பட்ட இமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று காலை 9 மணியவில் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் அலுவலகத்தின் முன்னால் ஒன்றுகூடிய கிராம மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
டிச. 09 20:32

முல்லைத்தீவில் கோட்டையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இங்கு இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர் தாம் நினைத்தவாறு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக மக்கள் குற்றம்சுமத்திவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்துள் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமை ஏன் என்று பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டிச. 09 12:55

கிளிநொச்சியில் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொது தொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தொழில் புரியும் இடங்களில் ஆண் பெண் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இன்று காலை 9 மணிக்கு தொழில் புரியும் இடங்களில் ஊழியர்கள் மீதான வன்முறையை நிறுத்து எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
டிச. 09 00:08

மூன்று இலட்சம் மக்களை அழைத்து கொழும்பில் மூன்று நாள் தொடர் பேரணி நடத்த ரணில் தரப்பு திட்டம்

(அம்பாறை, ஈழம்) மைத்திரி - மகிந்தவின் செயற்பாடுகளை கண்டித்தும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மக்கள் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களை கொழும்பு நகருக்குள் வரவழைத்து பேரணியை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. கொள்ளுப்பிட்டி காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிட்டு பேரணி நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து உயர் நீதிமன்றம் எந்தவகையான தீர்ப்பை வழங்கினாலும் பேரணி தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
டிச. 08 14:30

வடக்கு மாகாணத்தில் 660 பேருக்கு முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு சம்பவங்களாலும் 660 பேருக்கு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் இனஅழிப்பு நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பராமரித்துவரும் உயிரிழை என்ற தனியார் அமைப்பின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை பாரிய அளவில் வேறுபடுகின்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் பயன்படுத்தி கூர்மைச் செய்தித் தளம் எழுப்பிய கேள்விக்கு சமூகசேவைகள் திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தகவலில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
டிச. 08 13:33

தமிழ் மக்களது பிரச்சனைகள் மூடிமறைக்கப்படுகின்றன - மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் வாய்திறக்கவில்லை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் அனைவரும் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்றார்களே தவிர மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் வாய் திறக்கவில்லை என அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருட்தந்தை ம.சக்திவேல் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தின் ஊடாக இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதில்லை என சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் குழப்ப நிலையினால் தமிழ் மக்களது அரசியல் கைதிகள் விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி உரிமை தொடர்பான பிரச்சனை மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்றவை மூடிமறைக்கப்படுவதாக அவர் விசனம் வெளியிட்டார்.
டிச. 08 11:54

மட்டக்களப்பில் தொடரும் சட்டவிரோத மணல் கடத்தல் - வீதிகள் சேதமடைந்துள்ளதால் விபத்துக்கள் அதிகரிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுவருவதனால் பொதுமக்கள் பயணம் செய்யும் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் தற்போது தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழையினால் வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், அதனால் வீதிவிபத்துக்கள் ஏற்படுவதாகவும் ஆலங்குளம் கமக்கார அமைப்பின் தலைவர் சி.மதியழகன் கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டினார். கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்கும், குகனேசபுரம், மேவான்டவன் கிராமம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பிரதான பாதையில் சுமார் ஐந்து அடிக்கு மேல் நீர்தேங்கிக் காணப்படுவதனால் பொதுமக்கள் தமது கிராமங்களுக்குச் செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டிச. 08 11:24

சர்வதேச நாடுகள் இலங்கை அரசியல் பிரதிநிதிகளுக்கு அழுத்தம்- இணக்கத்துக்கு வருமாறும் வலியுறுத்தல்

(வவுனியா, ஈழம் ) இலங்கையில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் 49 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் கொழும்பில் உள்ள அமைச்சுக்களின் அதிகாரபூர்வமான செயலாளர்களுடன் மாத்திரமே கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதனை அமெரிக்கா வரவேற்றுகும் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம் கடந்த வாரம் கூறியிருந்தார்.
டிச. 07 23:25

வடக்கின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளம் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு

(கிளிநொச்சி, ஈழம்) நீர்வளம் நிலவளம் உட்பட அனைத்து வளங்களையும் கொண்ட தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளம் புனரமைப்பு பணிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றமை இதுவே முதற் தடவையாகும். நீர்த்தேக்கம் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்முறையாக இன்று முற்பகல் நீர்மட்டம் வான் கதவு மட்டத்தை அடைந்ததுடன், நீர்த்தேக்க வளாகத்திற்கு சென்ற இலங்கை ஜனாதிபதி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறந்து வைத்தார்.