நிரல்
ஜன. 18 10:01

ஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில்லியன் டொலர்களை வழங்கியது - சீன வங்கியும் உதவியளிக்க இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் இதனால் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தாக்கங்கள் ஏறப்டும் எனவும் இலங்கை நிதியமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான அரச செலவீனங்கள் உள்ளிட்ட நிதித் தேவைக்காக அரச திறைசேரிக்கு இலங்கை மத்திய வங்கியில் இருந்து ஒன்பாதாயிரம் கோடி ரூபாய்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த உயர் அதிகாரி கூறினார்.
ஜன. 18 09:46

வவுனியா - நொச்சிகுளத்தில் உள்ள பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் - மாணவி வைத்தியசாலையில் அனுமதி

(வவுனியா, ஈழம்) வவுனியா - நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி மீது அதே பாடசாலையின் அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் காயங்களுக்குள்ளான மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். நேற்று முன்தினம் 16 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற போதிலும் குறித்த பாடசாலை அதிபரின் மீது எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஜன. 17 15:10

அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் - முன்னாள் போராளிகள் இருவருக்கு சிறைத்தண்டனை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவத்தின் அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், இராணுவத்தைக் கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு, அனுராதபுர மேல்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் 24 பேர் கொண்ட கரும்புலிகள் அணி கொமாண்டோ தாக்குதலை நடத்தியிருந்தது.
ஜன. 17 12:28

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது - நீதிக்கான பெண்கள் அமைப்பு

(கிளிநொச்சி, ஈழம்) மாகாணசபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவது சாத்தியமற்றதாக காணப்படுமாயின் பழைய தேர்தல் முறையிலேயே மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் எனவும் புதிய தேர்தல் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையினுள் இணைத்துக் கொள்ள வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது. சமூக, மதத்திற்கான கேந்திர மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சாவித்ரி குணசேகர இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஜன. 16 09:56

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட வரைபை நடைமுறைப்படுத்தவும்- பேராசிரியர் திஸ்ஸவிதாரன

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய சர்வகட்சிக்குழுவினால் தாயரிக்கப்பட்டிருந்த தீர்வு யோசனைகளை நடைமுறைப்படுத்தியிருந்தால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கான தேவை எழுந்திருக்காது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் மகிந்த ராஜபக்ச தரப்பின் ஆதரவாளருமான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக கொழும்பில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் திஸ்ஸவிதாரன, அதற்கு ஆதரவு வழங்க முடியாதெனக் கூறியுள்ளார்.
ஜன. 15 23:04

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போர்தான் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு- மகாநாயகத் தேரர்களிடம் விளக்கம்

(மன்னார், ஈழம்) புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிய அரசியல் யாப்பின் மூலம் அதிகாரப்பரவலாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பெரும்பான்மை சிங்கள மக்களின் விரும்பங்களுக்கு மாறாக அரசாங்கம் செயற்பட முடியாதெனவும் மகாநாயக்கத் தேரர்கள் கூறியுள்ளனர். இலங்கை அரசாங்க உயர்மட்டத்திடம் மகாநாயக்கத் தேரர்கள் இவ்வாறு கூறியதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சமீபத்தில் சந்தித்தபோதும் மகாநாயக்கத் தேரர்கள் இவ்வாறு வலியுறுத்திருந்தனர். ஒற்றையாட்சியும் பௌத்த சமய முன்னுரிமையையும் மேலும் உறுதிப்படுத்துமாறும் மகாநாயக்கத் தேரர்கள் கூறியுள்ளனர்.
ஜன. 15 16:11

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

(வவுனியா, ஈழம் ) வடக்கு- கிழ்கு தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ- 9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். பின்னர் சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்பதற்கு சர்வதேச சமூகம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தினர்.
ஜன. 14 21:12

முல்லைத்தீவு - செம்மலைப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழாவைக் குழப்பிய பௌத்த பிக்குமார்

(முல்லைத்தீவு, ஈழம்) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்படும் இலங்கையைப் பாதுகாப்போம் என்ற பௌத்த அமைப்பு ஒன்றைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர், முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலயப்பகுதியில் நடைபெறவிருந்த தைப்பொங்கல் விழாவை நடத்தவிடாமல் குழப்பம் விளைவித்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். தமிழர் தாயகமான வடமாகாணம் - முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை தைப்பொங்கல் விழா நடைபெறும் என ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜன. 14 10:44

மகிந்தவை மையப்படுத்திய பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு- பசில் ராஜபக்ச

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே கூடுதல் சபைகளை கைப்பற்றியதாகவும் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி மூன்றாவது இடத்தையே பெற்றிருந்ததாகவும் பசில் ராஜபக்ச கூறினார்.
ஜன. 13 15:27

ரணில் அரசாங்கம் மூன்று ஆண்டுகளில் நான்கு ரில்லியன் ரூபாய்கள் கடன் பெற்றுள்ளதாக மகிந்த தரப்பு குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரி ரணில் அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலதட்தில் நான்கு ரில்லியன் ரூபாய்கள் கடன்களைப் பெற்றுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் 10 வருட கால ஆட்சியில் ஏழு ரில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் பெறப்பட்டிருந்ததாகவும் ஆனால் ரணில் அரசாங்கம் இவ்வளவு கடன்களை பெற்றதன் நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் ப்ந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டார்.