நிரல்
மார்ச் 15 11:15

இலங்கை அரச கட்டமைப்பைக் காப்பாற்ற முற்படும் சந்திரிகாவும் ரணில் அரசாங்கமும் - ஜெனீவா ஒத்துழைப்பு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை கூறுகின்ற அனைத்து விடயங்களையும் இலங்கை அரசாங்கம் அப்படியே ஏற்றுக்கொள்ளாதென இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இலங்கையின் இறைமை தன்னாதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் அரசாங்கம் இணைந்து செயற்படும் என்றும் திலக மாரப்பன தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் பொதுமக்களிடம் கையளிக்கப்படவில்லையென மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளதை இலங்கை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை என்றும் திலக் மாரப்பன கூறியுள்ளார். இலங்கையின் உள்ளகப் பிரச்சினையை இலங்கை மக்களுடன் இலங்கை அரசாங்கம் பேசித் தீர்க்கும்.
மார்ச் 14 23:33

இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதனை சர்வதேச ஆதரவுடன் பாதுகாப்பதே சிங்களக் கட்சிகளின் நோக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை சிங்கள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனக் கோரினார். இலங்கை இராணுவத்தை உள்ளநாட்டில் விசாரணை செய்யலாம் என்றவொரு அத்தியாயம் ஜெனீவா பிரேரணையில் உள்ளது. பிரித்தானிய அரசு அந்த அத்தியாயத்தை பிரதானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 14 10:34

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இழுபறி - கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்தார் மகிந்த ராஜபக்ச

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பபடுகின்றது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன் மகிந்த ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, பசில் ராஜபக்ச கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மார்ச் 13 22:58

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் 4 ஆயிரம் பேர் கொழும்பில் பேரணி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த சுமார் நான்காயிரம் மாணவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். கொழும்புப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்திற்கு அருகில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் அங்கிருந்து பேரணியாக நாடாளுமன்ற வளாகம் வரை சென்றது. அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இலஙகைப் பொலிஸார் மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை, மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். இதனால் மாணவர்கள் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. பல்கலை மாணவர்கள் ஒருங்கிணைப்பாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக வேறொரு சட்டமூலத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மார்ச் 13 07:02

யாழ்.பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் எழுச்சிப் பேரணி - தமிழினப் படுகொலையைக் காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி ஆரம்பம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த தமிழின அழிப்புக்கு சர்வதேசம் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி ஈழத்தமிழ் காத்திருக்கின்ற போதும் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வருகின்றது. இவ்வாறான நிலையில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினால் பாரிய மக்கள் எழுச்சிப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழினப் படுகொலையைக் காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13 06:32

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள் - விக்னேஸ்வரன் சாடல்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால், அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம் கொடுத்தால் தமக்கு அது வரை நல்ல காலம் என்ற நோக்கில் கால அவகாசத்தை சிபார்சு செய்யலாம். தேர்தலில் நிற்காமலேயே அவர்கள் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் காத்திருக்கின்றன. எம்மால் அது முடியாது. தமிழர்களை இனியும் ஏமாற்றிக்கொண்டிருக்க எம்மால் முடியவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 12 22:12

நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம் - கூட்டமைப்பு ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஜக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மகிந்த ராஜபக்ச தரப்பினால் தோற்கடிக்கப்படுமென்ற எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் 43 மேலதிக வாக்குகளினால் அது இன்று செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக76 வாக்குகளும் பெறப்பட்டன. அரசாங்கத் தரப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மார்ச் 12 10:06

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் நஷ்டஈடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) போருக்கு முன்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலிலும் வடக்கு - கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இந்த உதவி தொடர்பாக கூறியுள்ளார். ஆனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
மார்ச் 11 23:32

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெறும் நிலையில் இலங்கைப் படையினர் மீது விசாரணை

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கைப் படையினர் மீதான உள்ளக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்றது. ஆனாலும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கைதுசெய்ய வேண்டாம் என இலங்கை உயர் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும் விசாரணைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. இதனால் இன்று திங்கட்கிழமை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் எட்டு மணி நேர விசாரணை இடம்பெற்றது. கொழும்பில் பதினொரு இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவே அட்மிரல் கரன்னகொடவிடம் விசாரணை இடம்பெற்றது.
மார்ச் 11 07:13

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் உண்ணாவிரதம்- தொடர்ந்து போராடவுள்ளதாகவும் எச்சரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் யாழ்ப்பாணம் மருதங்கேணி வைத்தியசாலையில் இருபத்து நான்கு மணி நேரமும் வைத்தியர்கள் கடமையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீரப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிரசாந்தன் என்பவரால் மருதங்கேணி வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழைமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.