செய்தி: நிரல்
மே 17 09:41

இலங்கையின் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு- சந்திப்பில் இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து அமெரிக்க - இலங்கை உயர்மட்டப் பிரதிநிதிகள் அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வொஷிங்டன் நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோரும் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் சந்திப்பில் பங்குபற்றினர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நடத்திய முதலாவது சந்திப்பில், பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கு அமைச்சர் திலக் மாரப்பன, இலங்கையின் சார்பில் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மே 16 15:19

குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் புலனாய்வுத்துறை அதிகாரி பிரபாத் புலத்வட்டே மீண்டும் இராணுவத்தில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களை விடுதலை செய்ய வேண்டுமென சிங்கள இனவாத அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இலங்கைப் புலனாய்வுத்துறை பலவீனமடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புள்ள சந்தேகநபரான இலங்கைப் புலனாய்வுத்துறை அதிகாரி பிரபாத் புலத்வட்டே (Prabath Bulathwatte) மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மே 16 10:20

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை அரசின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான மாணவர் ஒன்றிய தலைவர் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 15 21:49

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணை - மகிந்த மௌனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகள் நடத்தவில்லையென எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை கொழும்பில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, விசாரணை சரியான முறையில் நடத்தப்படாமையினால் எதிர்க்கட்சி என்ற முறையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனவும் கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச எதுவுமே கூறவில்லை.
மே 15 11:25

கைதுசெய்யப்பட்டுள்ள சக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் மருத்துபீட சிற்றுண்டிச்சாலை ஊழியர் ஆகிய மூவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மே 14 21:49

இலங்கையின் தேசிய பாதுகாப்பு - சீனா உத்தரவாதம், ஒப்பந்தம் கைச்சாத்து

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான சூழலில் பயங்கரவாதத் தாக்குதல்களை இல்லாதொழித்து இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இலங்கை முப்படையினரின் வினைத்திறனை ஊக்குவிப்பதற்காக 260 கோடி ரூபாய்களை வழங்கவும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இணக்கம் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இவ்வாறு உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 14 10:56

ரஷியாவிடம் இலங்கை ஆலோசனை - அமைச்சர் ஒலேக், தூதுவர் தயான் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து இஸ்லாமியவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உதவியளித்து வரும் நிலையில், ரஷிய அரசுடனும் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலமை குறித்து ரஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ் - இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில் ரஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ், ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மே 14 07:07

வடக்கில் 8 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுர கிலோமீற்றர் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றல்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்னிவெடிகளை அகற்கும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதற்கமைய 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சர்வதேச மற்றும் உள்ளுர் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான சார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 8 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுர கிலோமீற்றர் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 13 23:01

முஸ்லிம் கிராமங்களில் 24 மணிநேரத் தாக்குதல் - சிங்கள இளைஞர்கள் கைவரிசை

(வவுனியா, ஈழம் ) ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தற்கொலைத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வட மேல் மாகாணம் குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டி, நிக்கவரட்டிய ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் கிராமங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று திங்கட்கிழமை மாலை வரை இடம்பெற்ற தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இரண்டு பிரதேசங்களையும் மையப்படுத்திய சுமார் முப்பது முஸ்லிம் கிராமங்களில் இன்றிரவு 7 மணிவரை சுமார் 24 மணிநேர தாக்குதல் சிங்கள இளைஞர் குழுக்களினால் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதே கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மே 13 15:21

அமெரிக்கப் போர்க் கப்பல் கொழும்பில் - இலங்கைக் கடலில் பணிகள் ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) அமெரிக்க அரசினால் சென்ற ஆண்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட யுஎஸ்சிஜிசி ஷேர்மன் (USCGC Sherman) என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. இந்தக் கப்பலோடு இலங்கைக் கடற்படையின் இருபத்தியிரண்டு உயரதிகாரிகளும் இரண்டாம் நிலை அதிகாரிகள் நூற்றிப் பதினொரு பேரும் வருகை தந்துள்ளனர். கப்டன் றோகித அபேசிங்கவின் தலைமையில் யுஎஸ்சிஜிசி ஷேர்மன் என்ற போர்க் கப்பலை ஆழ்கடலில் கையாள்வதற்கான பயிற்சிகளையும் அமெரிக்காவில் முடித்துக் கொண்டே இவர்கள் அனைவரும் அந்தக் கப்பலுடன் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர். இலங்கைக் கடற்படை அதிகாரிகள் இவர்களை வரவேற்றனர். விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக் கடற்படையிடம் இந்தக் கப்பலைக் கையளிப்பார்.