நிரல்
மே 18 11:48

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் ஒரு தசாப்த நினைவு

(முல்லைத்தீவு, ஈழம்) ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டு ஒரு தசாப்தம் நிறைவடைந்துள்ள நிலையில், 10 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்பூர்வமாக இடம்பெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் ஓரங்கட்டப்பட்டு சர்வதேச நாடுகளின் துணையுடன் இலங்கையின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து, மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் அஞ்சலி வணக்கம் இடம்பெற்றது.
மே 17 23:47

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் - ஏற்பாட்டுக் குழு அழைப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை அரசினால் நடத்தப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ள நினைவேந்தலில் அனைத்து மக்களையும் சமுகமளிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கிய ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வில் சமயத் தலைவர்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள், பிரமுகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பங்குகொள்ளவரென ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இலங்கைப் படையினரின் சோதனைக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
மே 17 14:35

இலங்கை இராணுவத் தளபதி கூறியதை மறுக்கிறார் ரிஷாட்

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பு தெஹிவளைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் பாதியுதீன் மூன்று தடவைகள் தொலைபேசியில் கேட்டிருந்தாக இலங்கை இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு எவரையும் விடுதலை செய்யுமாறு கோரவில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மறுத்துள்ளார். இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்காவுடன் தொலைபேசியில் உரையாடியது உண்மை. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எவரையும் விடுதலை செய்யுமாறு கோரவில்லையெனக் கூறியுள்ளார்.
மே 17 09:41

இலங்கையின் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு- சந்திப்பில் இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து அமெரிக்க - இலங்கை உயர்மட்டப் பிரதிநிதிகள் அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வொஷிங்டன் நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோரும் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் சந்திப்பில் பங்குபற்றினர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நடத்திய முதலாவது சந்திப்பில், பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கு அமைச்சர் திலக் மாரப்பன, இலங்கையின் சார்பில் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மே 16 15:19

குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் புலனாய்வுத்துறை அதிகாரி பிரபாத் புலத்வட்டே மீண்டும் இராணுவத்தில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களை விடுதலை செய்ய வேண்டுமென சிங்கள இனவாத அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இலங்கைப் புலனாய்வுத்துறை பலவீனமடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புள்ள சந்தேகநபரான இலங்கைப் புலனாய்வுத்துறை அதிகாரி பிரபாத் புலத்வட்டே (Prabath Bulathwatte) மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மே 16 10:20

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை அரசின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான மாணவர் ஒன்றிய தலைவர் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 15 21:49

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணை - மகிந்த மௌனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகள் நடத்தவில்லையென எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை கொழும்பில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, விசாரணை சரியான முறையில் நடத்தப்படாமையினால் எதிர்க்கட்சி என்ற முறையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனவும் கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச எதுவுமே கூறவில்லை.
மே 15 11:25

கைதுசெய்யப்பட்டுள்ள சக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் மருத்துபீட சிற்றுண்டிச்சாலை ஊழியர் ஆகிய மூவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மே 14 21:49

இலங்கையின் தேசிய பாதுகாப்பு - சீனா உத்தரவாதம், ஒப்பந்தம் கைச்சாத்து

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான சூழலில் பயங்கரவாதத் தாக்குதல்களை இல்லாதொழித்து இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இலங்கை முப்படையினரின் வினைத்திறனை ஊக்குவிப்பதற்காக 260 கோடி ரூபாய்களை வழங்கவும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இணக்கம் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இவ்வாறு உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 14 10:56

ரஷியாவிடம் இலங்கை ஆலோசனை - அமைச்சர் ஒலேக், தூதுவர் தயான் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து இஸ்லாமியவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உதவியளித்து வரும் நிலையில், ரஷிய அரசுடனும் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலமை குறித்து ரஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ் - இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில் ரஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ், ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.