(மட்டக்களப்பு, ஈழம்)
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசியல் உத்திகள் நுட்பமாக வகுக்கப்பட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் மெது மெதுவாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், தமிழ்த்தேசியச் சிந்தனையை மேலும் மடைமாற்றக்கூடிய முறையில் சமயக் கோட்பாடுகள் மிகைப்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் ஈழத்தமிழ் அறிஞர்களான கா.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்றோர் வள்ளுவம் ஊடாகத் தமிழினத்தை ஒன்றுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய மீள் பார்வை அவசியமாகிறது. 'குறள் ஆய்வுச் செம்மல்' 'உலகத் தமிழர் செம்மல்' ஆகிய பல பட்டங்களைப் பெற்ற ஈழத்தமிழ் அறிஞர் கா.பொ. இரத்தினம், வள்ளுவரை சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று வரைவு செய்திருக்கின்றார்.