கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
பெப். 25 15:39

இலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்திய மத்திய அரசு கையில் எடுக்குமானால், சிங்கள ஆட்சியாளர்கள் அடங்கிப்போவதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்காது. ஆனால் இந்தியா எப்போதுமே இலங்கையின் பக்கம் சார்ந்து செயற்படுவதால். இந்தியா ஒரு வல்லாதிக்க நாடு என்பதையும் கடந்து சிங்கள ஆட்சியாளர்கள் தன்னிச்சையாகவே செயற்படுகின்றனர். அவ்வப்போது இராஜதந்திர ரீதியாக அவமானப்படுத்தியுமிருக்கின்றனர். உதாரணங்கள் பல இருந்தும் கொழும்பில் இந்திய அப்பலோ மருத்துவமனை 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இலங்கை தனதாக்கிக் கொண்டதைப் பிரதானமாகக் கூறலாம். இந்தியாவோடு செய்யப்பட்ட பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டமை பற்றிய உதாரணங்களும் உண்டு.
பெப். 15 11:03

ஐ.நாவின் தோல்விக்கு இணைத் தலைமை நாடுகளே காரணம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றபோது இணைத்தலைமை நாடுகள் ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் நடத்திய மாநாடுதான், விடுதலைப் புலிகள் பேச்சில் இருந்து வெளியேற்றப்படுவதற்குப் பிரதான காரணமாக இருந்தது. அந்த மாநாடுதான் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கும் வாய்ப்பாக இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கே சாதகமாகவும் இருந்தது என்பது வெளிப்படை. இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய நாடுகள் முன்னாள் உதவிச் செயலாளர் சாரலஸ் பெட்ரி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையை நம்ப வேண்டாமெனக் கூறுகின்றார்.
பெப். 12 15:15

சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறுகிறார் பேராயர் மல்க்கம் ரஞ்சித்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்குக் கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையா்கள் ஆதரித்தும் பங்குபற்றியும் வந்திருக்கின்றனர். இதனால் அருட்தந்தையர்கள் பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கைது செய்யப்பட்டுமிருந்தனர். ஆனால் அப்போதெல்லாம் பேராயர்கள் இலங்கை அரசாங்கத்தை கண்டித்திருந்தாலும் உரிய முறையில் அழுத்தம் கொடுத்திருக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்த்தியன் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தாா். 1999 ஆம் ஆண்டு மடு தேவாலயம் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கும் அதிகமானேர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர்.
ஜன. 16 11:17

இன அழிப்பை உள்ளடக்கி சர்வதேசப் பொறுப்புக்கூறலை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கோருகின்றன

(யாழ்ப்பாணம், ஈழம்) நீண்ட இழுபறிக்கும் பலத்த அழுத்தங்களுக்கும் மத்தியில் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் மூன்று தேர்தற் கட்சி அணிகளும் ஒருங்கிணைந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக் குற்றம், போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்களை ஐ.நா.வின் உச்சபட்சப் பொறுப்புக்கூறல் மற்றும் விசாரணைப் பொறிமுறைகளுக்குள் விரைந்து செலுத்துமாறு ஒரு கூட்டு வேண்டுகோளை சனிக்கிழமையன்று விடுத்துள்ளன. இன அழிப்புக்கான சர்வதேச நீதியை வேண்டிநிற்கும் கோரிக்கையில் சம்பந்தனும் கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் இணைந்து கையொப்பமிட்டுள்ளமை ஒரு முக்கிய மைல்கல்லாக நோக்கப்படும் அளவுக்கு இந்தக் கூட்டு முயற்சிக்குப் பின்னால் ஆழமான தமிழ்த்தேசியச் சக்திகள் பல முனைகளில் இருந்தும் தீவிரமாகக் களமிறங்கிச் செயற்பட்டுள்ளன.
ஜன. 08 23:47

இந்தியாவும் 13 ஆவது திருத்தச் சட்டமும்

(வவுனியா, ஈழம்) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness--MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கின்றார். இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 13ஆவது திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதே சிறந்தது என்றும் ஜெய்சங்கர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் கூறியிருக்கிறார்.
டிச. 22 20:55

ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள்

(மட்டக்களப்பு, ஈழம் ) கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு குற்றம் சுமத்தியுமிருந்தனர். இந்த அமைப்புகள் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அணுசரனை வழங்குவதற்கும் (co-sponsorship) ஆதரவளித்தவை என்பதும் தெரிந்ததே.
நவ. 29 20:26

நினைவுத் திறத்தை நிலைநாட்ட ஈழத் தமிழர்களுக்கு வினைத்திறன் தேவை

(வவுனியா, ஈழம்) மாவீரர் நாளைப் பகிரங்கக் கூட்டு நினைவெழுச்சியாக இல்லாது மாற்றிவிடவேண்டும் என்று இலங்கை ஒற்றையாட்சி அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. நினைவேந்தலை நீர்த்துப்போகச்செய்யும் இந்தச் செயற்பாட்டில் உலக, பிராந்திய வல்லாதிக்கங்களும் இணைந்துள்ளன. பல தரப்புகளால் பல அடுக்குகளில் நகர்த்தப்படும் இந்த நகர்வுகளை ஈழத்தமிழர்கள் உணர்வுரீதியான முனைப்புகளூடாக மட்டும் முறியடித்துவிடமுடியாது. தர்க்கீக அடிப்படையில் நினைவுத்திறத்தை (memorialisation) முன்னெடுக்கவேண்டும். இதைச் செய்வதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. இந்தப் பொறுப்பை மாவீரர் நினைவு நாளில் இவர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதை உணர்வுத் தளத்துக்கு அப்பால் அறிவுரீதியாக ஆராயவேண்டியிருக்கிறது.
நவ. 24 00:58

ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ

(வவுனியா, ஈழம்) அமெரிக்கா தம் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கடந்த புதன்கிழமை கூறிய நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை இரகசியமாக ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன. சவுதி உயர்மட்டம் உத்தியோகபூர்வமாக இதை மறுத்துள்ளபோதும் இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். பதவி முடிவை எதிர்நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரின் இராஜாங்கச் செயலர் பொம்பியோவும் விட்டுச்செல்லும் வெளியுறவுத் தெரிவுகள் பாலஸ்தீனர்களையும் ஈழத்தமிழர்களையும் எவ்வாறு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் பாதிக்கப்போகின்றன என்ற கேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமானதே.
ஒக். 24 22:19

பேரம் பேசும் அரசியலைக் கூடச் செய்ய முடியாத கையறு நிலை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இருபது தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். வடக்குக் கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்களே இந்த 28 உறுப்பினர்களும். கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் யோசைனக்கு இந்த 28 உறுப்பினர்களில் 19பேர் எதிராக வாக்களித்தனர்.
ஒக். 11 22:30

பௌத்தம் இலங்கைத் தீவுக்கு தமிழகம் ஊடாக வரவில்லையா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழகத்தின் வைகை நதிக்கரை நாகரிகம் தொடர்பான கீழடி தொல்லியல் ஆய்வில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டபோது குறித்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதில் முக்கிய பங்காற்றிய தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா புலம்பெயர் தமிழர் வலையமைப்பு ஒன்று ஒழுங்குபடுத்திய இணையவழிக் கூட்டம் ஒன்றில் சனிக்கிழமையன்று கலந்துகொண்டு விளக்கமளித்தார். தமிழகம், புலம்பெயர் சமூகம், ஈழம் ஆகிய மூன்று முனைகளில் இருந்து பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளடங்கலான பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வைகை நதிக்கரையில் வழக்கில் இருந்த எழுத்துமொழிக்கும் ஈழத்தில் வெளிப்பட்டிருக்கும் தொல்லியல் சான்றுகளுக்கும் இடையிலான காலம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான ஒற்றுமைகளை அறிவதில் ஈடுபாடு காட்டினர்.