கட்டுரை: நிரல்
ஜன. 13 22:42

ஆவணத்தைப் பெற முன்னர் இலங்கைக்கான நிதியுதவியை உறுதிப்படுத்தியது இந்தியா

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேரில் சந்தித்து உறுதிப்படுத்தினார். மோடிக்குக் கடிதம் அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட அன்றைய நாளே தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
ஜன. 09 07:30

பிளவுபட்டுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளை இணைந்து கையாளும் வெளிச் சக்திகள்

(முல்லைத்தீவு) பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் பின்னால் இலங்கையின் திட்டமிடலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தமிழர்கள் 13 ஐ மாத்திரம் கேட்டால் போதும் என்ற மன நிலை இலங்கையிடம் உண்டு. இதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறுபட்ட தமிழ்த்தரப்புகளைக் கையாண்டு எடுக்கப்பட்டிருந்த பல முயற்சிகள் தோல்வி கண்டதன் பின்னணியில், புதிய முயற்சியின் மூலம் இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தக்கூடிய இந்த அணுகுமுறையைச் செயற்படுத்தியிருக்க வாய்பில்லாமில்லை. தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடாமல் தமிழ்த்தேசியக் கட்சிகள் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளமையும், குறித்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற வேண்டுமென்ற அவசரத்தையும் காண்பித்திருக்கிறது.
ஜன. 06 22:32

பொது ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் கைச்சாத்திட்டவேளை, திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பு

(முல்லைத்தீவு) மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. அதேநேரம், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெயக் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே இந்திய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜன. 05 08:21

வடக்குக் கிழக்கில் தமிழ்- முஸ்லிம் உறவில் சாணக்கியத்தை இழந்த சாணக்கியர்கள்

(முல்லைத்தீவு) வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த்தேசியம் என்பதற்கும், தமிழ்-பேசும் மக்களிடையே அகில இலங்கை ரீதியில் இருக்கவேண்டிய குறைந்தபட்சப் புரிந்துணர்வு என்பதற்குமிடையில், ஒன்றை ஒன்று குழப்பாத வகையில் உருவாக்கப்பட வேண்டிய அரசியல் புரிந்துணர்வு, எவ்வாறு இருக்கவேண்டும் என்ற விளக்கங்கள் எதிர்வரும் காலங்களில் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த விடயம் தொடர்பான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஜன. 02 21:49

சிறிதரன், சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும், ஒருசேரக் கொடுத்த தமிழ்த் தேசியப் பாடம்

(கிளிநொச்சி, ஈழம்) பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தித் தருமாறு இந்தியாவிடம் கோருவதை எதிர்த்தால் போதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்காமல் இருக்கிறோம் என்று பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் மதியாபரணம் சுமந்திரனும் தத்தமது நிலைப்பாட்டை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள். கடந்த வருடம் ஜனவரியில் இன அழிப்பு விசாரணை கோருவதை விட ஜெனீவாவில் இருந்து பொறுப்புக்கூறலை வெளியே எடுத்தாற்போதும் என்று ஆரம்பத்தில் கொழும்பில் பாக்கியசோதி சரவணமுத்துவின் ஒழுங்கில் சந்தித்தபோது உடன்பட்டது போல அன்றி, இம்முறை சற்று வித்தியாசமாக, இவ்விருவரும் ஒரே நிலைப்பாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல், முரண்பட்டவாறு உடன்பட்ட விநோதம் நடந்திருக்கிறது.
டிச. 31 22:15

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் 'பல்லின சமூகம்' என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம் இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால், அது ஒரு பல்லின சமூகமாக நில அடையாளத்தையும் அர்த்தமற்ற அதிகாரப்பகிர்வினூடாக ஈழத்தமிழர்கள் இழப்பதற்கும் பயன்படக்கூடிய சொற்பிரயோகமே. இதே ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சிலர் எண்ணுவது வேடிக்கையானது.
டிச. 22 22:40

'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்'

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிகள் இழுபறியில் இருப்பதாகத் தமிழத்தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன. ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் மூன்று கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஐந்து பக்கம் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது தொடர்பாக மீள் ஆய்வு செய்வதென நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் முடிவெடுக்கப்பட்டன. இன்று அல்லது நாளை வியாழக்கிழமை குறித்த ஆவணத்தில் கையொப்பமிடப்படுமென நேற்றைய கூட்டத்தின் முடிவின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
டிச. 22 20:23

மண் கவ்வியது ரெலோ, புளொட், ஈபிஆரெலெவ்வின் பதின்மூன்றாம் திருத்தக்கோரிக்கை

பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதையே பிரதான கோரிக்கையாக முன்வைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் விடுதி விடுதியாய்க் களம் புகுந்த ரெலோ அணியோடு சேர்ந்து களமாடிய புளொட், ஈபிஆரெலெவ் நிலைப்பாடு சம்பந்தன், சுமந்திரன் தலைமையிலான அணியினரால் சாதுரியமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நகர்வு புதனன்று நடந்தேறியுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தான் அணிந்துகொண்ட சிறிய கச்சைத்துண்டையும் கழற்றியெறிந்த ரெலோவினை மேவி, முழுமையான கச்சையணிந்த சுமந்திரன் அணி களம் இறங்கியுள்ளது. விக்னேஸ்வரன் தனது நிலைப்பாடு இரண்டுக்கும் இடையானது என்று பெருமைப்படக்கூடிய அவலமும் நடந்தேறுகிறது. தமது தோல்வியால் திம்புக் கோட்பாட்டைச் சிதைத்த அவப்பெயரை ரெலோ அணியினர் சிறுமையோடு தழுவிக்கொள்கிறார்கள்.
டிச. 19 13:47

தமிழ்த் தேசியத்தை நீர்த்துப்போகச் செய்ய நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் சுமந்திரன்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம். தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் போயுள்ளன.
டிச. 12 23:15

தேசம், சுயநிர்ணய உரிமை நீக்கம்- பிரித்தாளும் தந்திரத்திற்குள் தமிழர் அரசியல்

(முல்லைத்தீவு) அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிடம் ஒருமித்த குரலில் கோரவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் ஆனால் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இன்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை தாங்கினார்.