இ்ந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் முக்கியத்துவம் பெறத்துடிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள்- சீனாவைப் பகைக்காமல்

இந்தியாவைக் கடந்து அமெரிக்காவோடு நெருக்கமாக முயற்சி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் எச்சரிக்கை
பதிப்பு: 2019 ஜூன் 18 11:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 11 00:24
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் கைவிடக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. 2016 ஆம் ஆண்டு இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல்களைக் குறைந்த பட்சம் இந்த ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ச்சியாக ஐம்பத்தொரு நாட்கள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியவில்லை.
 
ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னரான சூழல், அந்த நிலையை மேலும் மோசமாக்கியது.

இலங்கையின் தற்போதைய இந்த வியூகம், இந்திய மத்திய அரசுக்கு கடுப்பாகவுள்ளது. எனவே எழுபது ஆண்டுகள் அரசியல் போராட்டம் நடத்திய தமிழ்த்தரப்பும், தமிழர் தாயக அங்கீகாரத்துக்கான முக்கியத்துவத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினால், தனது பிராந்திய நலனுக்காகவேணும் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ அதனைப் பரிசீலிக்கக் கூடும்

இந்த நிலையில் இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்குமிடையே தொடருகின்ற அதிகாரப் பனிப்போர் காரணமாகவும் ஜனாதிபதித் தேர்தலா நாடாளுமன்றத் தேர்தலா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமானால் குறைந்தது நான்கு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் நிறைவடைந்திருக்க வேண்டும்.

சம்பந்தன்
13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத்தடியாலும் தொட்டுப் பார்க்கமாட்டேன் என்று 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றில் சம்பந்தன் கூறியிருந்தார். ஆனால் இலங்கை ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பரவலாக்கலை மாத்திரமே சம்பந்தன் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கோரி நின்றார். தற்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைகளை அப்படியே கைவிட சிங்கள ஆட்சியாளர்கள் முற்படுவதுகூட அவருக்குப் புரியவில்லை. மோடியின் அழைப்பை ஏற்று புதுடில்லி செல்லவுள்ள நிலையில், அங்கு என்ன பேசுவது என்ற தயாரிப்புகளும் இல்லை. டில்லிக்குச் செல்ல முன்னர் ஒப்பாசாரத்துக்காகவேனும் விக்னேஸ்வரன், கஜேந்திரக்குமார் ஆகியோரோடு உரையாட வேண்டுமென்ற பெருந்தன்மைகூட சம்பந்தனிடம் இருப்பதாகத் தெரியவுமில்லை. இந்த இருவரோடும் கலந்துரையாடத் தேவையில்லையென்ற முடிவுக்கே சம்பந்தன் வந்துவிட்டார் போலும். இந்திரா காந்தி காலத்தில் இருந்து நரேந்திர மோடிவரை சந்திப்புகள் நடக்கின்றன. ஆனால் இந்த மிதவாதத் தமிழ்த் தலைமைகளால் இந்தியா சொல்வதை மாத்திரமே கேட்க முடிகின்றது. மாகாண சபை முறை கூட ஆயுதப் போராட்டத்தினாலேயே 1987இல் பெறப்பட்டது.

ஆனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடனேயே நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆகவே மேலும் ஆறு மாதங்களின் பின்னரே அதாவது அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமே தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

ஆகவே அதற்கு முன்னர் கலைப்பதற்காக மக்கள் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி, அதில் வெற்றிபெற்று நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரிபால சிறிசேன திட்டம் தீட்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன சென்ற சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

அதேவேளை, இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு வலியுறுத்துகின்றது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியோடு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதால், டிசம்பர் மாதம் தேர்தலை நடத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்பார்க்கின்றது.

அரபுநாடுகளில் கட்டார் சிறிய நாடாக இருந்தாலும் பிராந்தியத்தில் அதன் முக்கியத்துவம் அதிகமாகும். ஆசியாவில் சிங்கப்பூர் சிறிய நாடு. எனினும் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளது. அவ்வாறே இலங்கையும் பிராந்தியத்தில் சிறிய நாடாக இருந்தாலும் தனித்துவம் மிக்க நாடாக விளங்க வேண்டும் என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் குறியாகவே இருக்கின்றனர்

இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முயற்சிக்கு ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரும் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

எனவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென்ற நோக்கம் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு இல்லையென்பதையே இது காட்டுகின்றது.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை மேலும் வழங்க வேண்டுமென மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது கூறியிருந்தார். இந்திய மத்திய அரசும் அவ்வாறு ஏற்கனவே கூறியிருந்தது. நரரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தோடு மாத்திரம் மட்டுப்படுத்தி இலங்கையை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற இந்திய அரசின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் ஏற்றிருந்த நிலையிலேதான் 13 பிளஸ் என்ற கருத்துக்கள் மேலோங்கி வந்தன. ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது.

இதனால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளையும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலையும் பயன்படுத்தி மாகாண சபை முறையை அப்படியே கைவிட்டு, இலங்கையின் ஒற்றையாட்சி முறையை மேலும் உறுதிப்படுத்த சிங்கள ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர் என்ற தகவல் வெளிப்படுகின்றது.

சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை இலங்கையுடன் செய்ய முற்படும் அமெரிக்காவும், இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பையும் இறைமை தன்னாதிக்கத்தையும் கண்டி மாகாநாயக்கத் தேரர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தேரர்களிடம் நேரடியாகவே அதனைக் கூறியுமுள்ளார்.

இந்தவொரு சூழலிலேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை டில்லிக்கு வருமாறு நரேந்திரமோடி கொழும்பில் வைத்து அழைப்பு விடுத்திருந்தார். ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய நிலைப்பாட்டை அமெரிக்காவும் அமெரிக்க நிலைப்பாட்டை இந்தியாவும் சமாந்தரமாக ஏற்றுள்ள நிலையில், டில்லிக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சி முறைமைக்குள்ளான அரசியல் தீர்வு ஒன்றையே ஏற்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படலாமென்பது கண்கூடு.

எனவே, முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழிக்க உதவியளித்த அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின், ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களையே கொழும்பு தன்வசப்படுத்தக் கூடிய ஏது நிலை உண்டு என்பதும் இங்கு வெளிப்படை.

எனவே டில்லிக்குச் செல்வதற்கு முன்னர் வடக்கு - கிழக்கு இணைந்த தன்னாட்சி அதிகாரங்களும் தேசத்துக்கான அங்கீகாரத்தையும் பெறக்கூடிய இறுக்கமான வழிமுறைகளில் தமிழ்த் தரப்பு ஈடுபட வேண்டும். ஆனால் அழைப்பு கூட்டமைப்புக்கு மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தன் அந்தப் பொறுப்பை ஏற்றுச் செயற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழிக்க உதவியளித்த அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின், ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களையே கொழும்பு தம்வசப்படுத்தக் கூடிய ஏது நிலை.

தமிழர் தேச அங்கீகாரம், சுயாட்சி என்பது தமிழரசுக் கட்சியின் கோரிக்கை. 1951 ஆம் ஆண்டு திருகோணமலைப் பிரகடனத்தில் அது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த அடிப்படையின் கீழ் டில்லிக்குச் செல்ல முன்னர் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டியது சம்பந்தனின் கடமை.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பூகோள அரசியலின் தாக்கம் இந்தியாவுக்கும் மெதுவான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக இந்துமா சமுத்திரத்தில் இந்தியாவுக்கு எந்தளவு முக்கியத்துவத்தை அமெரிக்கா கொடுத்துள்ளதோ அதேயளவு முக்கியத்துவம் இலங்கைக்கும் வழங்கப்பட வேண்டுமென்பது சிங்கள ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்.

இலங்கையின் இந்த அணுகுமுறைதான், இந்திய மத்திய அரசுக்கும் தற்போது பிரச்சினையாகவுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் (R. Clarke Cooper) கொழும்புக்கு வந்து சென்றதையும் நரேந்திர மோடி அரசு சந்தேகமாகவே பார்க்கிறது.

இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவை தங்கள் பக்கம் நேரடியாக ஈர்ப்பதற்காகவே சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கான தயார்ப்படுத்தல் உடன்படிக்கை ஒன்றை மைத்திரிபால சிறிசேன, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் கடந்த மாதம் 14 ஆம் திகதி பீஜிங்கில் கைச்சாத்திட்டிருந்தார்.

ஆனாலும் சீனாவைப் பகைத்துக் கொள்ளாமல் இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவுடனான நேரடி உறவுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர் என்பதையே இந்த நகர்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இலங்கையின் இந்த நகர்வுகளுக்கான எச்சரிக்கையாகவே மோடியின் கொழும்பு வருகையும் அமைந்திருந்தது.

வடக்குக் - கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இந்துத்துவா அமைப்பின் கிளைகளை நிறுவி தமிழ் மக்களிடையே மதப் பிரிவினைகளை இந்தியா தூண்டுகின்றது. இந்தச் செயற்பாடுகள் இலங்கைக்கு மேலும் சாதகமான நிலையை தோற்றுவிக்கும் என்பதை இந்தியா அறியாமலில்லை

எனவே இவ்வாறான பூகோள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் தமிழ்த் தரப்பும் தங்கள் நியாயத்தை வலியுறுத்திப் பேரம் பேச வேண்டிய தருணம் இது. அரபுநாடுகளில் கட்டார் சிறிய நாடாக இருந்தாலும் பிராந்தியத்தில் அதன் முக்கியத்துவம் அதிகமாகும். ஆசியாவில் சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளது. அவ்வாறே இலங்கையும் பிராந்தியத்தில் சிறிய நாடாக இருந்தாலும் தனித்துவம் மிக்க நாடாக விளங்க வேண்டும் என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் குறியாகவே இருக்கின்றனர்.

குறைந்தபட்சம் தென் இந்தியாவிற்குள்ளேனும் இலங்கை முக்கியத்துவம் மிக்க சிங்கள பௌத்த நாடாக இருக்க வேண்டுமென்பது சிங்கள ஆட்சியாளர்களின் தற்போதைய வியூகமாகவுள்ளது.

இலங்கையின் தற்போதைய இந்த வியூகம், இந்திய மத்திய அரசுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஈழத் தமிழர்களின் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இந்துத்துவா அமைப்பின் கிளைகளை நிறுவி தமிழ் மக்களிடையே மதப்பிரிவினைகளை இந்தியா தூண்டுகின்றது. இந்தச் செயற்பாடுகள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு மேலும் சாதகமான நிலையை தோற்றுவிக்கிறது என்பதை இந்தியா அறியாமலில்லை.

எனவே எழுபது ஆண்டுகள் அரசியல் போராட்டம் நடத்திய தமிழ்த் தரப்பு, தமிழர் தாயகத்துக்கான முக்கியத்துவத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி இடித்துரைத்தால், குறைந்தபட்சம் தனது பிராந்திய நலனுக்காகவேணும் இந்திய அரசு விரும்பியோ விரும்பாமலோ அதனைப் பரிசீலிக்கக் கூடும்.

இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு வழங்கப்படுகின்ற அங்கீகாரமே அமெரிக்கா போன்ற மேற்குலகத்திற்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தங்கள் நலன்களை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என்ற செய்தியை தமிழ்த் தரப்பு வெளிப்படுத்த வேண்டிய இறுதிச் சந்தர்ப்பம் என்றே அவதானிகள் கருதுகின்றனர்.