செய்தி: நிரல்
மே 08 22:38

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் நீடித்துச் செல்லுகின்றன. கொவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக கட்சியின் முக்கியமான கூட்டங்களை நடத்த முடியாத நிலையிலும் முரண்பாடுகள் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் தனித்தனியாகப் பேச்சுக்கள் நடப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திரமுன்னணி ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர் திஸ்ஸவிதாரன, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடி வருவதாகவும் ஆனாலும் இணக்கம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மே 07 22:34

வேகமாகப் பரவும் கொவிட் 19- தற்காலிக வைத்தியசாலைகள் அமைக்கப்படுகின்றன

(வவுனியா, ஈழம்) இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொவிட்- 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதி தீவிர நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் இராணுவத்தைப் பயன்படுத்தி கொவிட் சிகிச்சைக்கான புதிய வைத்திய நிலையங்களையும் இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. திருமண வைபவங்கள், விருந்து உபசாரங்கள் மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்துவதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளதாக இலங்கை இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மே 06 22:24

சட்டமா அதிபர் அரசியலில் ஈடுபட விருப்பம்

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியதை ஏற்க மறுத்த இலங்கைச் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, விரைவில் அரசியலில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வாரென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
மே 04 23:03

சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் மீது புலனாய்வுப் பொலிஸார் விசாரணை

(வவுனியா, ஈழம்) மலையகத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாழும் மாற்றுச் சிந்தனை கொண்ட இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் என பலரும் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவ்வாறான விசாரணைகள், கண்காணிப்புகளினால் தாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைச் சட்டத்தரணிகளிடம் முறையிட்டுள்ளனர்.
மே 03 17:05

மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கை தொடர்பாக உரையாடல்

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் 2020 மற்றும் 2021 வருடத்திற்கான பெரும்போக நெற்செய்கையின் அறுவடைப் பணிகள் அனைத்தும் விவசாயிகளினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுபோக நெற்செய்கைக்கு அவர்கள் தயாராகி வருவதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கமநல சேவை அபிவிருத்தித் திணைக்களம் மன்னார் மாவட்டத்தில் உள்ள அதன் 12 கமநல சேவை நிலையங்கள் ஊடாக மேற்கொண்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
மே 01 23:25

தமிழ் அரசியல் கைதியின் தந்தை மரணம்

(வவுனியா, ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில்கூட மகன் கலந்து கொள்ள முடியாததால் உறவுகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த 79 வயதான எஸ்.இராசவல்லவன் என்பவரே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
ஏப். 30 14:53

வேகமாகப் பரவிவரும் கொரோனா- பொது முடக்கம் வருமா?

(வவுனியா, ஈழம்) இலங்கையின் பல மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தொற்று நோய் சிகிச்சைக்கான பல வைத்தியசாலைகள் கொவிட் தொற்றாளர்களினால் நிரம்பி வழிகின்றது. கொழும்பு. களுத்துறை, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களில் புதிய கொவிட் நோய் தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்படும் நிலையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துச் செல்கின்றது. இந்த நிலையில் கொவிட் - 19 ன் மூன்றாவது அலையில் இலங்கை நாடு சிக்கித் தவிக்கும் சூழ்நிலையில் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
ஏப். 26 23:31

ரிஷாட் பதியுதீன் 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணையில்

(வவுனியா, ஈழம்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் என்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அவருக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லையெனக் கூறி 2019 ஆம் ஆண்டு டிசம்பர மாதம் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் எவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட முடியுமெனவும் அதுவும் நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்ய முடியுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப். 24 13:37

ரிஷாட் பதியுதீன் அதிகாலை கொழும்பில் திடீரெனக் கைது

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் கைத்தொழில் வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது இளைய சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கை பொலிஸாரின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டைச் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
ஏப். 23 21:56

சிங்கள மீனவர்களை விடுவிப்பதுபோன்று, தமிழ் மீனவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை

(மன்னார், ஈழம் ) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதாகும் தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களை இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு துரிதமாக விடுதலை செய்யும் இலங்கை அரசாங்கம், இந்தியக் கடற்படையினரால் கைதாகும் வட மாகாண மீனவர்களின் விடுதலை தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என வட மாகாணக் கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என். முகம்மது ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.