நோக்கில் நேர்மை, சொல்லில் வாய்மை, செயலில் சீர்மை, பார்வையில்...

கூர்மை பற்றி...

மெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி
பதிப்பு: 2018 மே 18 11:31
புதுப்பிப்பு: மே 27 12:10
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஊடக மரபாலும் கொள்கைத்தெளிவாலும் சங்கமிக்கக்கூடிய பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் சுயாதீனமான ஓர் அலைவரிசையில் இயங்குவதற்கான ஒரு முயற்சி கூர்மையாக வடிவெடுக்கிறது. இந்தச் செய்தித்தளம் ஈழத்தின் வட கிழக்கில் இருந்து 2018 மே மாதம் 18ம் நாளில் ஆரம்பிக்கப்படுகிறது. இதன் செயற்பாடு குறுகிய காலத்திற்குள் தெற்கு, தென்கிழக்கு ஆசியாவின் தமிழர் தாயகப்புலங்களை மையப்படுத்தியதாக பரிணமிக்கவேண்டும் என்பது கூர்மையின் எதிர்பார்ப்பு.
 
சரிபார்க்கப்படக்கூடிய தகவல்களையும் சிரத்தை கொள்ளவேண்டிய கருத்துக்களையும் நம்பகமான முறையில் வெளிக்கொணர வேண்டும். அதேவேளை, ஊடக நெறிகளுக்கு உட்பட்டுச் சுயாதீனமாகச் சிந்தித்துச் செயலாற்றவல்ல ஓர் ஊடகமாகக் கூர்ப்படையவேண்டும் என்பது கூர்மையின் விருப்பு.

தமிழ் கூறு நல்லுலகின் தாயகப் புலங்கள் தொடர்பான வரலாற்றுப் பிரக்ஞையும் கொள்கைத் தெளிவும் கூர்மையின் வழிகாட்டிகள்.

தமிழர் தாயகப் புலங்களில் வேரூன்றியிருக்கும் அதேவேளை பன்னாட்டுத் தளத்தைத் துல்லியமாக மதிப்பீடு செய்யும் ஆற்றல் இதன் சிறப்பியல்பாக வெளிப்படும் என்று கூர்மை நம்புகிறது.

எந்த ஒரு கட்சியாலோ குழுவாலோ அல்லது பொருளாதாரப் பின்புலத்தோடு இயங்கும் அமைப்பாலோ கட்டுப்படுத்தப்படாத ஓர் ஊடகமாகக் கூர்மை விளங்கும்.

சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பங்கேற்போடும், பட்டறிவு மிக்க பத்திரிகை, இணையத்தள ஆசிரியர்களின் கண்காணிப்போடும் கூர்மையின் பார்வை வெளிப்படும்.

"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற," என்ற மனத்துணிவோடு இந்த இணையம் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

"மெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி," என்ற ஒரு வரியில் கூர்மையின் அலைவரிசையை விளங்கிக்கொள்ளலாம்.

நோக்கில் நேர்மை, சொல்லில் வாய்மை, செயலில் சீர்மை, பார்வையில் கூர்மை எனும் தன்மைகளுக்கு எடுத்துக்காட்டாக கூர்மையின் நிருபர்களும் எழுத்தாளர்களும் ஆசிரியர்களும் இயங்குவர், பங்களிப்பர்.

இதன் தேவையையும் பணியையும் நன்குணரும் வாசகர்கள் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்குமான ஊட்டச்சத்துக்களான ஆதரவையும் அறிவுரைகளையும் நிதியுதவியையும் நல்குவார்கள் என்ற நம்பிக்கையோடு கூர்மை ஒரு குழந்தையாக ஊடகப்பரப்பில் தவழத் தொடங்குகிறது.

2018 செப்ரம்பர் வரையான மூன்று மாதங்கள் பரீட்சார்த்த காலமாகும்.

கூர்மை தனக்கான நிர்வாகக் கட்டமைப்பை உரிய முறையில் அமைத்துக்கொள்வதற்கும் தனது மரபுக்கான ஆரம்ப வழிகாட்டல்களை வகுத்துக்கொள்ளவும் நுட்பத் தேர்ச்சியைப் பெறுவதற்கும் இந்தப் பரீட்சார்த்த காலம் பயன்படும்.

பரீட்சார்த்த கால முடிவிலிருந்து தனது புலங்களுக்கான ஆசிரியர்களுடனும் நிர்வாக ஆசிரியருடனும் வாசகர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் கூர்மை வெளிப்படைத்தன்மையோடு இயங்கும்.

கூர்மையுடன் தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல்: [email protected]