தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள், எனவே அமைச்சரவைப் பத்திரத்திற்கு எதிர்ப்பின்றி அனுமதியளிக்குமாறு அனைத்து அமைச்சர்களின் ஆதரவையும் கோரவுள்ளதாக மனோ கணேசன் உறுதியளித்தர்.
அத்துடன் இலங்கை நீதியமைச்சர் தலா அத்துக்கோரளவுடன் பேசி கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு கோரவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இரண்டு தன்டனைகளுக்கு எதிராகவும் மீண்டும் மேன் முறையீடு செய்வதற்குரிய வசதிகளைச் செய்துதருமாறு கோரியே தேவதாசன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
மகசீன் சிறைச்சாலைக் காவலர்கள் அச்சறுத்தல் விடுத்திருந்த நிலையிலும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடத்தியிருந்தார்.
போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியதும் மகசீன் சிறைச்சாலைக்குள் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது. தேவதாசன் யாழ்ப்பாணம் கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இடதுசாரி இயக்க முன்னோடியான இவர், புலிகளுடன் தொடர்புள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் ஒன்றில் ஆயுள்த் தண்டனையும் மற்யை வழக்கில் இருபது வருட சிறைத் தண்டனையும் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்தது.
அறுபது தமிழ் அரசியல் கைதிகள் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மகசீன் சிறைச்சாலை உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் மொத்தமாக நூற்றி இருபது தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
