வடமாகாணம் கிளிநொச்சி

பளை வைத்தியசாலை வைத்தியர் இலங்கை இராணுவத்தால் கைது- மக்கள் போராட்டம்

விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 20 11:39
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 20 20:15
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Palaidivisionalhospital
#tamils
#srilanka
#lka
கிளிநொச்சி பளை பிரதேச வைத்தியசாலை வைத்தியர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் பதில் வைத்தியரை நியமிக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை வைத்தியசாலைக்கு முன்னால் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பளை பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த வைத்தியர் சின்னையா சிவரூபன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
 
கைதுசெய்யப்பட்ட வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

right photo Palai
வைத்தியர் சின்னையா சிவரூபன் இலங்கை இராணுவத்தினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கிளிநொச்சி பளைப் பிரதேச வைத்தியசாலைப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படம் இது. குறித்த வைத்தியர் முன்னாள் போராளிகளுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு வகையான உதவிகளை முன் நின்று செய்பவர் என்று மக்கள் கூறுகின்றனர். கைது செய்யப்பட்டமைக்கான காரணம் உறவினர்களுக்குக் கூறப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். சிவரூபன் கைது செய்யப்பட்டதால். கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிந்து வரும் அதிகாரிகள், பொது நிலையினர் அச்சமடைந்துள்ளதாகப் பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திடம் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்றுகூடிய மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

இதன்போது பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் சட்ட வைத்திய அதிகாரியுமான சின்னையா சிவரூபன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் வைத்தியர் கைது செய்யப்பட்டதால் இன்று மாதாந்த சிகிச்சைக்காக வருகைதந்த நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தனர்.

சட்ட வைத்தியர் என்ற காரணத்தின் அடிப்படையிலும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச அரங்கில் மூடி மறைக்கும் நோக்கிலும் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டிருக்கலாமென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறியுள்ளார்.

வைத்தியர் சிவரூபனை சட்டத்தின் முன் நிறுத்தி விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தும் கைதான வைத்தியரின் இடத்துக்கு வேறு வைத்தியர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

பளை வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்களும் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்தி்ற்குத் தெரிவித்தனர்.