இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

வேட்பாளர் தெரிவு குறித்து ரணில் உரையாடல்- கூட்டமைப்போடும் சந்திப்பு

சஜித் வேட்பாளர் அல்ல என்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதி
பதிப்பு: 2019 செப். 05 10:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 01:29
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#SajithPremadasa
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது இல்லையென ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைதீவுக்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க கொழும்புக்குத் திரும்பிய நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களை நேற்றுப் புதன்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். கட்சிக்குள் பிளவுகள் எதுவுமே இல்லை என்றும் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் நேற்றுப் புதன்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஆனால் வேட்பாளர் யார் என்று அவர் கூறவில்லை.
 
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபடுமென சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான கட்சியின் மூத்த உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வேறொரு புதிய அரசியல் அணியாகச் செயற்பட முடியும் என்றும் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்தார். அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவாரென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட முன்னர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படுமென கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியலெ்ல கண்டியில் செய்தியாளரிடம் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெறவுள்ள பேரணி ஐக்கிய தேசியக் கட்சியினுடையதல்ல. அது அமைச்சர் சஜித் பிரேமதாச தனிப்பட்ட முறையில் நடத்தும் மக்கள் பேரணி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறுகின்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள், மலையகத் தமிழ்க் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களோடும் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவா் இரா.சம்பந்தன். கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ள ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளார்.