அரச அதிகாரிகளின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில்

ஊடகவியலாளர் நிலாந்தன் நீதிமன்றத்தில் முன்னிலையாகிப் பிணையில் விடுதலை

28.02.2020 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு
பதிப்பு: 2020 ஜன. 09 11:22
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 02:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#journalist
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை செய்தியாக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையான சுதந்திர ஊடகவியலாளர் செ.நிலாந்தன் நேற்று இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார். செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டிருந்த குற்றச்சாட்டிலேயே நிலாந்தன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தன் மீது கடந்த வருடம் 26.02.2019 அன்று செங்கலடி பிரதேச செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய ஏறாவூர் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பாக கடந்த பத்து மாதங்களாக ஊடகவியலாளருக்கு அழைப்பு கடிதமோ, அழைப்பாணையோ வழங்கப்படாத நிலையில் கடந்த 02.01.2020 அன்று இரவு 9 மணியளவில் ஏறாவூர் பொலிஸார் ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டிற்கு சென்று அவரை பொலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில்  ஊடகவியலாளர் நிலாந்தன் சட்டத்தரணி ஊடாகக நேற்று முந்தினம் 08.01.2020 புதன் கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலையானபோது நீதிபதி கருப்பையா ஊடகவியலாளர் நிலாந்தனை இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதி உத்தரவிட்டார். அத்துடன், ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறும் எதிர்வரும் 28.02.2020 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் ஊழல்கள் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொழும்பு அரசியல் செல்வாக்குடன் சில தமிழ் அதிகாரிகள் செயற்படுவதாக ஏற்கனவே குற்றச் சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.