ஆனால் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டும் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் காரணத்தினாலும் நாடாளுமன்றத் தேர்தலை ஓகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் அரசாங்கம் உரையாடியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து விவாதங்கள் நடைபெறும் போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சமூகமளிக்க வேண்டிய தேவை இருப்பதாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாதென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
எனவேதான் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில் கூறப்பட்ட மாற்றங்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்பதால் தேர்தலைப் பிற்போட தீர்மானித்துள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
எனினும் ஜே.வி.பியைத் தவிர பிரதான அரசியல் கட்சிகள் தோ்தலை செப்ரெம்பர் மாதம் நடத்த இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஆனாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் தேர்தலை ஓகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க வேண்டுமெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் பிற்போடப்படுவதால் நாடாளுமன்றத் தேர்தலை ஏப்பிரல் மாதம் நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேப்பிரிய கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.