கொரோனா வைரஸ் பரவியுள்ள அவசரகால நிலமையில் நாடாளுமன்ற அமர்வைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் முதலில் 14 நாட்களுக்கும் பின்னர் மற்றுமொரு 14 நாட்களுக்கும் அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அல்லது குறைந்தது இரண்டு வாரங்களேனும் பாராளுமன்றததை ஜனாதிபதி ஒத்திவைக்கலாமென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு நாடாளுமன்றத்தில் சென்ற 22ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்து.
ஆனால் அந்த வரைபுக்கு எதிராக 39 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுக் கடந்த ஒரு வாரமாக ஐந்து நீதியரசர்களினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. நாளை செவ்வாய்க்கிழமையும் அந்த மனுக்கள் மீதான பரிசீலனை இடம்பெறவுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் இன்று திங்கட்கிழமை தொடக்கம் 20ஆவது திருத்த வரைப்புக்கு எதிராகத் தொடர் போராடடங்களை கொழும்பில் நடத்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் பொது அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் போராட்டங்களையும் மக்கள் விழிப்புணர்வுக் கூடடங்களையும் நடத்தத் தீர்மானித்திருந்தன.
ஆனால் கொரோன வைரஸ் தாக்கம் அதிகரித்ததையடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையிலான அந்தப் போராட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்படவில்லை. நிலமை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை போராட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்தவொரு நிலையிலேயே நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்திருப்பதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் டிசம்பர் மாதம் வரையுமான நான்கு மாதங்களுக்குரிய கணக்கு வாக்கெடுப்பு ஒன்றை கடந்த ஓகஸ்ட் மாதம் பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதியமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
ஆகவே 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக கணக்கு வாக்கெடுப்பு ஒன்றை சமர்ப்பித்திருந்தால், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒத்தவைக்க முடியாதென சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனாலும் 20ஆவது திருத்த வரைப்புக்கு எதிரான மற்றும் வேறுபல அரசியல் காரணங்களின் அடிப்படையிலும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் அதிகரிப்பினால் எழுந்துள்ள அவசர அவசியமான நிலைமைகளின் படியும் நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைக்க முடியுமெனக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

 
                            
                             
                            
                             
                            
                             
                            
                             
                            
                            

