தமிழ் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ன?

பௌத்தம் இலங்கைத் தீவுக்கு தமிழகம் ஊடாக வரவில்லையா?

ஈழத் தமிழர் என்று தமிழர் தேசம் தன்னை அடையாளம் செய்வதில் என்ன தயக்கம்?
பதிப்பு: 2020 ஒக். 11 22:30
புதுப்பிப்பு: ஒக். 15 12:18
Amarnath & Siva Thiagarajah
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழகத்தின் வைகை நதிக்கரை நாகரிகம் தொடர்பான கீழடி தொல்லியல் ஆய்வில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டபோது குறித்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதில் முக்கிய பங்காற்றிய தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா புலம்பெயர் தமிழர் வலையமைப்பு ஒன்று ஒழுங்குபடுத்திய இணையவழிக் கூட்டம் ஒன்றில் சனிக்கிழமையன்று கலந்துகொண்டு விளக்கமளித்தார். தமிழகம், புலம்பெயர் சமூகம், ஈழம் ஆகிய மூன்று முனைகளில் இருந்து பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளடங்கலான பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வைகை நதிக்கரையில் வழக்கில் இருந்த எழுத்துமொழிக்கும் ஈழத்தில் வெளிப்பட்டிருக்கும் தொல்லியல் சான்றுகளுக்கும் இடையிலான காலம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான ஒற்றுமைகளை அறிவதில் ஈடுபாடு காட்டினர்.
 
கூட்டத்தை ஒழுங்குபடுத்தியோரின் நோக்கம் நல்லதாகவே இருந்தது. பங்குபெற்றோரின் நோக்கும் அப்படியே. ஆயினும், குறித்த கூட்டம் சில முக்கியமான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தொல்லியல் ஆய்வுகள் வெளிக்கொணரும் பிராமி எழுத்துக்கள் ஒரே மாதிரியாக ஈழத்திலும் தமிழகத்திலும் கிடைத்திருக்கின்றன என்ற தரவு முக்கியமானதொன்று.

ஆதிகாலத்தில் நிலத்தால் பிணைந்திருந்த ஈழத்திலும் தமிழகத்திலும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் மனித வருகை இருந்திருக்கும் என்பது மட்டுமல்ல, ஒரே பண்பாட்டு அடிப்படையும் இருந்திருக்கும் என்பதற்குமான இன்னும் ஓர் அறிகுறியாகவும் இது இருக்கிறது.

தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா
தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா
அதேவேளை பௌத்தம் இலங்கைத்தீவுக்கு இந்தியாவின் ஒரிசா பிரதேசத்தில் இருந்து (கடல்மார்க்கமாக) வந்திருப்பதாகவும், பிராமி எழுத்துமுறை கூட இலங்கை ஊடாகவே ஒரிசாவுக்குப் பரவியிருக்கலாம் என்றும் தான் கருதுவதாகவும் அமர்நாத் தனது உரையின் இறுதிப்பாகத்தில் தெரிவித்தார்.

அதாவது, வைகை நதிக்கரையில் இருந்த நாகரிகத்தின் ஒரு நீட்சியே இலங்கைத் தீவில் இருந்திருக்கவேண்டும் என்றும் அதன் எழுத்துவடிவம் பௌத்தம் இலங்கைக்கு வந்த திசைவழியாக வடக்கு நோக்கிப் பயணித்திருக்கவேண்டும் என்றும் அவர் கருத முற்படுகிறார்.

இந்தச் சிந்தனை, கௌதம புத்தர் வாழ்ந்த சமகாலத்திலேயே பௌத்தம் இலங்கைத் தீவுக்கு வந்துவிட்டதாக தமது சமய நூல்களை வைத்துக்கொண்டு வாதாடுகிற சிங்கள தேரவாத பௌத்தவாதிகளுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் அல்லவா இருக்கும்?

எந்த ஒரு கருத்துநிலையையும் ஆய்வுசார்ந்த ஆதாரங்களின்றி ஆய்வாளர்கள் அவசரப்பட்டு முன்வைப்பது ஆபத்தானது.

அதேவேளை, இந்தியத் தொல்லியலும், இலங்கை ஒற்றையாட்சியின் இனவாதத் தொல்லியலும் இணைந்த வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் ஈழத்தமிழர்கள் எதிர் நோக்கவேண்டிய ஆபத்தும் தென்படுகிறது.

அரசியலையும் தொல்லியல் ஆய்வையும் கலக்கக்கூடாது என்ற அடிப்படையில் பார்த்தாற்கூட ஒரு நன்மதிப்புக்குரிய ஆய்வாளர் இவ்வாறான விபரீதமான கருத்தை முன்வைக்கும் போது அதன் சமகால அரசியல் தாக்கத்தைச் சிந்திக்காமல் முன்வைப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது.

அடுத்தது, ஈழத்தமிழர்களின் தேச அடையாளம் சார்ந்த விடயம்.

இது அரசியல்-பண்பாட்டு அடையாளம் சார்ந்த ஒரு கேள்வியாக குறித்த இணையவழிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக, ஈழத்தமிழர், தமிழீழம் என்ற சொற்பதங்களின் ஆரம்பம் என்ன என்பதே அந்தக் கேள்வி.

ஆனால், இந்தக் கேள்விக்குக் கிடைத்த பதில்கள் வழுவற்போக்கில் இருந்தன.

கொழும்பில் இருந்து இயங்கும் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன். இவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து செயற்படும் ஓர் அரசியற் செயற்பாட்டாளர். முன்னணியின் சட்ட ஆலோசகர். இவரிடம் கூர்மை இணையம் இதே கேள்வியை ஞாயிற்றுக்கிழமை எழுப்பியபோது தெளிவான சில தரவுகளையும் கருத்துகளையும் முன்வைத்தார்.

அதாவது 1948 இல் பிரித்தானியர் சிங்கள தேசத்திடம் எமது தலைவிதியைக் கையளிக்க முன்னரேயே, சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் 1922 இல் தமிழீழம் என்ற அடையாளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதாக அவர் ஒரு நூல் ஆதாரத்தை மேற்கோள் காட்டி தனது கருத்தைப் பதிவு செய்தார். அதுமட்டுமல்ல, ஆறுமுகநாவலரின் ஆலோசனையும் ஈழத்தமிழர் தேசம் தனித்துவமானது என்ற பிரக்ஞையின் உருவாக்கத்தில் இருந்ததையும் காண்டீபன் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், இணையவழிக் கூட்டத்தில் ஈழத் தமிழ்த் தேசியப் பிரக்ஞையும் தமிழீழம் என்ற பதமும் 1948க்குப் பிந்தியதாக ஆய்வாளர்களால் மட்டுமல்ல கூட்டத்தில் பங்கெடுத்த இலண்டனைச் சேர்ந்த வேறு சிலராலும் சித்தரிக்கப்பட்டது.

ஈழத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் தொல்லியல் மற்றும் மரபுரிமை இன அழிப்பு வேலைத்திட்டம் விசுவரூபமெடுத்துள்ள சூழலில், தமிழ் அறிவுச் சமூகம் தற்காலத்துக்கான, எதிர்காலத்துக்கான தீர்வுகளை நோக்கிய கருத்துநிலைகளை வெறும் 'அரசியல்' ஆக மட்டும் சித்தரித்துக்கொண்டு வாளாவிருத்தல் சரியா என்ற கேள்வியோடு சனிக்கிழமை நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் ஆய்வாளர்களிடம் கருத்துக் கோரப்பட்டிருந்தது.

தொல்லியலில் இருந்து அரசியலைப் பிரிக்கமுடியாத ஒரு சிக்கலை சிங்கள பௌத்த தேரவாத மேலாதிக்கம் உருவாக்கியுள்ள உச்சபட்சச் சூழலில், ஈழத்தமிழர்களின் அறிவுசார் சமூகம் தீவுக்கு உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுவது இயற்கையே.

பாராளுமன்ற உறுப்பினரும், முன்னைய வடமாகாண முதலமைச்சருமான நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் போன்ற ஒரு சிலரிடம் மட்டும் இந்தப் பாரிய சுமையைப் பொறுக்க விட்டுவிட்டு தமது அடையாளத்தையே வலியுறுத்தமுடியாது இந்த அறிவுச் சமூகம் தொலைந்துபோய்க்கொண்டிருக்கிறதா?

அதேபோல, எமக்கு 1948 இல் 'சுதந்திரம்' தந்துவிட்டதாகச் சொல்லி ஈழத்தமிழர் தேசியச் சிக்கல் தொடர்பான தனது பொறுப்புக்கூறலைத் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கும் பிரித்தானியாவிடமிருந்து அங்கிருக்கும் எமது அறிவுசார் சமூகம் நீதியை ஏன் தட்டிக்கேட்கவில்லை, இதுதொடர்பாக தமிழர் சமூகம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்விகளும் எழுகின்றன.

இலண்டனில் இருந்து இயங்கும் தமிழர் தகவல் நடுவம் (Tamil Information Centre) என்ற அமைப்பினர் முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு நாளான மே 18, 2019 இல் தாம் நடத்திய நல்லதொரு கண்காட்சிக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் இட்டார்கள் தெரியுமா?

"லங்காவின் தமிழர்கள்" (Tamils of Lanka).

இதற்கு அவர்கள் கொடுத்த விளக்கத்துக்கு ஒன்றும் குறைவில்லை; அறிவுபூர்வமான தவறும் இல்லை. ஆனால், ஏன், எதற்காக, எப்போது, எந்த உள்நோக்கத்தோடு இவ்வாறான அடையாளங்கள் எமது தேசம் குறித்து, அதுவும் பிரித்தானியாவில் புகுத்தப்படுகின்றன என்ற கேள்வி இங்கே எழுவது தவிர்க்கமுடியாததே!

இதே இலண்டனில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் ஈழம் என்ற சொல்லை பயண வினா விடை ஒன்றில் "த கார்டியன்" (The Guardian) என்ற பத்திரிகை பிரசுரித்ததற்கு எதிரான அழுத்தத்தைப் பிரயோகித்து குறித்த பத்திரிகையில் இருந்து அந்தக் கேள்வியை அகற்றிவிட்டது.

இது நடந்து சில நாட்களில் ஈழம் என்ற சொற்பதம் பற்றிய நியாயத்தை குறித்த பத்திரிகைக்கு எடுத்தியம்புவதற்கு இதே தமிழர் தகவல் நடுவமும் கடிதம் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், நடைமுறையில் ஈழத்தமிழர் என்று தனது தேச அடையாளத்தை தானே, அதுவும் இன அழிப்பு நினைவுகூரல் எழுச்சி நாளில் கைக்கொள்ளத் தவறிவிட்டு, சமூகத்தோடு சேர்ந்து தானும் ஓடுவதாகக் காட்டிக்கொள்வதற்கு மட்டும் கடிதம் வரைவதில் என்ன தார்ப்பரியம் இருக்கிறது?

கலாநிதி சிவா தியாகராஜா
கலாநிதி சிவா தியாகராஜா
இதே அமைப்போடு சேர்ந்தியங்கும் மருத்துவர், நீண்டகாலமாக தொல்லியல் வரலாறு குறித்தும் மரபணு ஆய்வுகள் குறித்தும் நேர்மையான நாட்டம் காட்டிவருபவர் கலாநிதி சிவா தியாகராஜா.

இவரும் சனிக்கிழமை நடைபெற்ற இணையவழிக்கூட்டத்தில் வட இலங்கையின் தொல்லியல் குறித்து ஒரு சிறப்பான பறவைப் பார்வையை வழங்கியிருந்தார்.

ஆனால், அவரிடம் ஆர்வத்தோடு ஒரு கேள்வியை கூர்மை இணையம் முன்வைத்தபோது அவர் வழங்கிய பதில், மீண்டும் இந்தத் தகவல் நடுவத்தின் இரட்டை அணுகுமுறையையே வெளிப்படுத்தியது.

அதாவது ஈழத்தமிழர் (Eelam Tamils) என்ற அடையாளத்தை தற்காலத் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் பயன்படுத்தத் தயங்குவதாகத் தெரிகிறது. அது தொடர்பாக ஆய்வாளர்கள் அரசியலாருக்கு வழங்கக்கூடிய நியாயப்பாடு என்ன என்ற கேள்வியே அது.

அதற்கு அவர் சொன்ன பதில்: "அது தெரியவில்லை" என்பதாகும்.

ஆக, இன்றைய ஈழத்தமிழர் என்ற தேசம் தனது அடையாளத்தை தொல்லியலில் இருந்தோ வரலாற்றில் இருந்தோ தான் பெற்றுக்கொள்ள வேணடும் என்ற தேவையில்லை. தான் கொடுத்த அளப்பரிய அர்ப்பணிப்புகளில் இருந்து பெற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டால் அதுவே போதுமானது.