இதன் அடிப்படையில் மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த தமிழ் மீனவக்குடும்பங்கள் பலரும் தமது இருப்பிடங்களைக் கைவிட்டு வெளியேறியிருந்தனர்.
இச் சூழ்நிலையில் பள்ளிமுனை மேற்கு பகுதியில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள குறித்த இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வீடுகளையும் அவர்களின் காணிகளையும் 1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் கூட்டாக ஆக்கிரமித்து அங்கு பாரிய முகாமொன்றையும் அப்பகுதி எங்கும் பல காவலரண்களையும் அமைத்துகொண்டனர்.
இந்த நிலையில் பள்ளிமுனையில் முகாமிட்டிருந்த இலங்கை இராணுவம் பள்ளிமுனை பகுதியிலிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வெளியேற அப்பகுதியை இலங்கை கடற்படை ஆக்கிரமித்து தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில் கடற்படையுடன் முகாமிட்டிருந்த இலங்கை பொலிஸாரும் கடந்த 2012 ஏப்ரல் மாதமளவில் பள்ளிமுனையை விட்டு முற்றாக வெளியேறிய நிலையில் கடற்படையினர் அப்பகுதியை முழுமையாக தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அப்பகுதியைப் பாரிய கடற்படைத் தளமாகவும் மாற்றியமைத்துக் கொண்டனர்.
இந்தநிலையில் இடம்பெயர்ந்த பள்ளிமுனை மேற்கு தமிழ் மீனவக் குடும்பங்கள் காலங்காலமாக தாம் வாழ்ந்த பூர்வீக இடங்களை மீண்டும் தம்மிடம் கையளிக்குமாறு கடற்படையினரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.
மேலும் வன்னி மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அன்றைய மகிந்த ராஜபக்க்ஷ அரசின் அமைச்சர்களிடமும் தமது காணிகளை கடற்படையிடமிருந்து மீட்டுத்தருமாறு பல வேண்டுகோள்களையும் முன்வைத்தனர். எனினும் இதற்கு எவ்விதப் பலனும் கிடைக்காமல் கடற்படையினர் காணியை விடுவிக்க தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்தனர்.
மேலும் பொதுத் தேவைகளுக்காக காணிகளை சுவீகரிக்கும் சட்டத்தின் கீழ் குறித்த காணியை இலங்கை கடற்படையின் கஜாபா படையணிக்கு நிரந்தரமாக கையகப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளையும் கடற்படையினர் மேற்கொண்டனர்.
இறுதியில் பள்ளிமுனை கடற்படையினருக்கு எதிராக பாதிக்கபட்ட 22 காணி உரிமையாளர்களும் இணைந்து மன்னார் மாவட்ட நீதிமன்றில் கடந்த 2013ம் ஆண்டுப்பகுதியில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணைகளும் இன்றுவரை சுமார் 7 வருடங்களாக நடைபெற்றுவரும் நிலையில் வழக்காளிகளான 22 காணி உரிமையாளர்களும் கடற்படையினரின் ஆளுகைக்குள் உள்ள தமது காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளையும் இழப்பீட்டையும் பெற்றுக்கொள்ள நீதிமன்றில் இணக்கம் தெரிவித்தனர்.
இத்தருணத்தில் மன்னார் நீதிமன்ற அனுமதியுடன் பொருத்தமான மாற்றுக் காணிகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டது.மேலும் இதற்கான அறிவுறுத்தல்கள் தொடர்புடைய மன்னார் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் குறித்த வழக்கில் எதிர்தரப்பு பிரதிவாதிகளில் ஒருவரான மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சார்பில், மன்னார் நீதிமன்றில் தொடர்ச்சியாக பிரசன்னம் ஆகும் மேற்படி மன்னார் பிரதேச செயலக காணி அதிகாரிகள் பள்ளிமுனை மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கும் விடயத்தில் அக்கறை கொள்ளாமல் நீண்ட காலமாக வீண்தாமதம் செய்ததுடன் கடும் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவர்களின் வினைத்திறன் அற்ற செயல்பாடுகள் காரணமாக மாற்றுக்காணிகள் வழங்கும் விடயத்தில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பள்ளிமுனை பொது மயானத்துக்கு அருகாமையில் சுமார் 15 ஏக்கர் விஸ்தீரணத்தில் அரச காணியொன்று உள்ளதை குறிப்பிட்டு அப்பகுதியிலாவது தமக்கு மாற்றுக்காணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிமுனை மக்கள் மன்னார் பிரதேச செயலகத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து மன்னார் பிரதேச செயலகம் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டவேளை அப்பகுதி அனைத்தும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஏலவே வங்காலைப் பறவைகள் சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி எனத் தெரியவந்துள்ளது.
மேலும் மன்னார் பிரதேச செயலக பிரிவில் செளத்பார், சிறுநாவற்குளம் உட்பட பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பள்ளிமுனை மக்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் அவர்கள் கடற்றொழிலைச் சார்ந்துள்ளதினால் அம்முயற்சிகள் எவையும் பலனளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் பள்ளிமுனை தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் விஸ்தீரணமுடைய குடிநிலக்காணிகளும் அதனோடுள்ள வீடுகளும் மற்றும் பயன் தரும் மரங்களும் இலங்கை கடற்படையினரால் முற்றுமுழுதாக கபளீகரம் செய்யப்பட்டு குறித்த மீனவர்கள் நிர்க்கதி நிலையை எதிர்கொண்ட சூழ்நிலையில் அவர்களுக்கு மாற்றுகாணிகளும் இழப்பீடும் வழங்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மாற்றுக் காணிகள் வழங்கும் விடயத்தில் அதிகாரிகள் முழு மன ஈடுபாடுடன் செயல்படவில்லை என்பதனை தாம் தொடர்ந்து அவதானித்து வருவதையும் இச்சந்தர்பத்தில் பள்ளிமுனை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில் மன்னார் நீதிமன்றில் கடற்படையினருக்கு எதிராக தாம் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து பள்ளிமுனை மேற்கு தமிழ் மீனவர்கள் தமது சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பள்ளிமுனை கடற்படை முகாமிற்கு எதிரான வழக்குகள் கடந்த வருடம் நவம்பர் 30 ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி குறித்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.