நேற்று நிகழ்ந்த தலைமன்னார் பியர் ரயில் - பஸ் விபத்தில் 16 பெண்களும் 9 ஆண்களும் என 25 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மாணவரான பாலச்சந்திரன் தருண் மரணமடைந்த நிலையில் காயமடைந்தவர்களில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் மாணவர் ஒருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 23 பேர்கள் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் பொது வைத்தியசாலை உயர் அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
இதேவேளை விபத்திற்குள்ளான தனியார் பஸ் சாரதியையும் ரயில்வே கடவைக் காப்பாளரையும் நேற்று மாலை தலைமன்னார் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் அவர்களிருவரும் இன்று புதன்கிழமை காலை மன்னார் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதையடுத்து குறித்த நபர்கள் இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.