அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழர் தாயகத்தின் உரிமை போராட்டத்திற்கு எதிராக யுத்தத்தை தொடுத்து பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்துத தாயகப்பகுதி எங்கும் பெரும் மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்களே தற்பொழுது இலங்கை ஆட்சிப் பீடத்திற்கு மீண்டும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்கள் மீதான யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அவர்களின் உறவுகளால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு முள்ளிவாய்கள் நினைவு முற்றத்தில் உள்ள தீபம் ஏற்றும் தூண்களை சேதப்படுத்தியதும் அங்கு நடுவதற்காக கொண்டு வரப்பட்ட நினைவுப் படிகம் இரவோடு இரவாக எடுத்துச் செல்லப்பட்டதும் தமிழ் இனத்தை தொடர்ந்து அடக்கி ஆள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் வன்மம் நிறைந்த மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மேலும் இலங்கையில் தமிழர் எனும் இனம் வாழ்ந்ததாக சிறிய சான்றுகள் கூட இருந்து விடக் கூடாதெனும் ஒரு நீண்ட காலத் திட்டமொன்றினை கச்சிதமாக வடிவமைத்துள்ள தற்போதைய இலங்கை அரசாங்கம் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் முதல் அங்கமாக தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து மேற்கொள்ளும் முள்ளிவாய்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை கொரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி இலங்கை அரசு நிறுத்துவதற்கு முற்படுகிறது.
மேலும் கடந்த புதன் இரவு முள்ளிவாய்கால் நினைவேந்தல் முன்றலில் நிறுவப்பட்டிருந்த தீபம் ஏற்றும் தூண்கள் அடித்து நொருக்கப்பட்டு தமிழ் மக்களின் மனங்கள் நோகடிக்கச் செய்யப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் பின்னரான காலங்களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் தமிழ் இனத்தை அதிக நோவினை செய்ததும் கருவருத்ததும் இந்த அரசாங்கமே ஆகும். சர்வதேச நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களுக்கு முரணான இவ்வாறான அரசாங்கத்தின் அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இலங்கையில் தமிழ் இனம் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் குறித்துத் தற்போது உலகளாவியரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக சர்வதேச நாடுகளிடம் முறையிட முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கையின் அடக்கு முறைகள் தொடர்பில் நாங்கள் விரைவில் சர்வதேசத்திற்கு அதனைத் தெரியப்படுத்துவோம்.
எமது மக்களை தொடர்ச்சியாக அடக்கு முறைக்குள் உட்படுத்துவதற்கு முழுமையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
எனினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெறும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.