இலங்கை நாடாளுமன்றத்தில்

ரணில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்க ராஜபக்ச அரசாங்கம் திரைமறைவில் ஏற்பாடா?

சஜித் அணிக்குச் சந்தேகம்-
பதிப்பு: 2021 ஜூன் 10 23:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 12 21:19
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராவதற்குரிய ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள நிலையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்ந்தும் செயற்படுவாரென்றும் செவ்வாய்க் கிழமை பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்வதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
 
சஜித் அணியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிய உறுப்பினர்களின் விபரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அந்த விபரங்களை மக்கள் முன்னிலையில் வெளியிடுவதெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக வருவது உறுதியென ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

செவ்வாய்க் கிழமைக்கு முன்னதாக சம்பந்தனை ரணில் விக்கிரமசிங்க சந்திக்கக் கூடிய அல்லது தொலைபேசியில் பேசக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எப்படி விமர்சித்தாலும் குற்றம் சுமத்தினாலும் இலங்கை மக்களின் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்கே நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக் கிழமை கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பழம் பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.

கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் பெறப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலமே ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.