வடமாகாணம்

மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் இந்திய மருத்துவக் கழிவுகள்

கடல் மாசடைகின்றது- மீனவர்களும் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 ஜூன் 19 21:13
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 01:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை வட மாகாணம் மன்னார் மாவட்டக் கடற்கரைகளில் இந்தியா நாட்டின் மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிற் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். ஏலவே கொழும்பில் தீ விபத்திற்கு உள்ளான எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV- X Press Pearl) சரக்கு கப்பலில் இருந்து கடலில் மூழ்கிய பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுடைய இரசாயனப் பொருட்கள் மன்னார் மாவட்டக் கடற்கரைகளின் பல இடங்களிலும் கரையொதுங்கி கடற்கரைகள் மாசடைந்து வரும் நிலையில் தற்போது இந்தியா நாட்டின் மருத்துவக் கழிவுகளும் கரையொதுங்கி மன்னார் மாவட்ட கடற்கரைப் பகுதிகளை மேலும் மாசடையச் செய்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
 
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசச் செயலக பிரிவில் உள்ள மீனவக் கிராமமான வங்காலை கடற்கரையிலேயே கடந்த வியாழன் தொடக்கம் மேற்படி இந்திய நாட்டின் மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக அந்தோணி பெனடிற் குரூஸ் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் அருகில் வத்தளைக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலில் எடுத்துவரப்பட்ட பல ஆயிரக்கணக்கான தொன் நிறையுடைய பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் மற்றும் அடையாளம் காணமுடியாத இரசாயனப் பதார்த்தங்கள் பல கடலில் மூழ்கியுள்ளன.

அவை அலைகளால் அடித்துவரப்பட்டு மன்னார் மாவட்ட கடற்கரைகளில் தினமும் கரையொதுங்கி வரும் நிலையில் இந்திய மருத்துவக் கழிவுகளும் மன்னார் மாவட்டத்தின் வங்காலை கடற்கரையில் கரையொதுங்குவதனால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய நாட்டில் பயன்படுத்தப்பட்ட மருந்து குளிசைகள், ஊசிகள், ஊசி மருந்துகள் பலவித மருந்து பக்கட்டுகள் மற்றும் வெற்று மருந்து கொள்கலன்கள் ஆகியனவே வங்காலை கடலில் கரையொதுங்கி வருவதாக அந்தோணி பெனடிற் குரூஸ் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் சரக்கு கப்பல் தீ விபத்திற்கு உள்ளான நிலையில் இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 50ற்கும் மேற்பட்ட அரிய இனக் கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகிறது. அத்துடன் டொல்பின் மீன் இனங்களும் இறந்து கரையொதுங்கி வருகிறது.

இந்தநிலையில் மன்னார் மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களிலும் உயிரிழந்த நிலையில் மூன்று கடல் ஆமைகளும் உயிரிழக்கும் தறுவாயில் ஒரு கடல் ஆமையும் அண்மையில் கரையொதுங்கியதாக மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் அந்தோணி பெனடிற் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.