இந்த நிலையில் மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான விஷேட பிரதேச சபை அமர்வு 29ஆம் திகதி புதன்கிழமை பேசாலையில் உள்ள மன்னார் பிரதேச சபைச் செயலகத்தில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெறவுள்ளது.
புதிய தவிசாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை தவிசாளராகத் தெரிவு செய்து மன்னார் பிரதேச சபையின் ஆட்சியை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றுவதற்கு மன்னார் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி சார்பான உறுப்பினர்களினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் தவிசாளர் பதவியைப் பெற்று மன்னார் பிரதேச சபை நிருவாகத்தை கைப்பற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் பிரதேச சபைக்கு வட்டார ரீதியிலும் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் மூலம் கிடைக்கப்பெற்ற போனாஸ் அடிப்படையிலும் 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 7 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு, முறையே 2 உறுப்பினர்களும், இலங்கை பொதுஜன பெரமுனை கட்சிக்கு 1 உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு( ஈபிடீபி) 1 ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 1 உறுப்பினரும் என 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதுக்குடியிருப்பு வட்டார உறுப்பினர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் கடந்த 2018ஆம் ஆண்டு மன்னார் பிரதேச சபை தவிசாளராகத் தெரிவாகினார்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஏழு உறுப்பினர்களும் ஈ. பி. டீ. பி கட்சியின் ஒரு உறுப்பினரும், இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு உறுப்பினர்களில் ஒருவரும், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் இணைந்து மொத்தம் 11 உறுப்பினர்கள் வாக்களித்ததன் மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மன்னார் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் தவிசாளராகத் தெரிவாகினார்.
இந்த நிலையில் குறித்த முகம்மது முஜாகீர் தவிசாளர் பதவி மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர் பதவி ஆகியவற்றில் இருந்து வட மாகாண ஆளுநரால் நீக்கம் செய்யப்பட்டுள்ளதினால் மன்னார் பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான ஏழு உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது ஆறாகக் குறைந்துள்ளது.
எனினும் நாளை நடைபெறும் தவிசாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு தெரிவான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆறு பிரதேச சபை உறுப்பினர்களில் ஒருவரை தவிசாளராகத் தெரிவு செய்வதற்கு பல காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக மன்னார் பிரதேச சபை வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கிய ஈ. பி . டீ .பி யின் ஒரு உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும் நாளை நடைபெறும் தவிசாளர் தெரிவில் மீண்டும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கடந்த 2018 ஆம் தவிசாளர் தெரிவின் பொழுது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய தற்பொழுது மன்னார் பிரதேச சபையின் பிரதித் தவிசாளரான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸ்ஸதீன் நாளை நடைபெறவுள்ள தவிசாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க மறுத்துவிட்டதாகத் மன்னார் பிரதேச சபை வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தன. அத்துடன் மன்னார் பிரதேச சபையின் தற்போதைய பிரதித் தவிசாளரான முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகத் தன்னை தெரிவு செய்வதற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்கள் மன்னார் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் நிலையில் அவர்களில் ஒருவரான பேசாலை தெற்கு வட்டாரத்தில் தெரிவான ஜஸ்டின் ஜூட் கொன்சால் குலாஸை மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்வதற்கு பகீரத பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இம்முறை மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கான தெரிவில் பேசாலை தெற்கு வட்டார உறுப்பினர் ஜஸ்டின் ஜூட் கொன்சால் குலாஸை நிறுத்தி அவரை தவிசாளராகத் தெரிவு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்களும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த திங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் நடைபெற்றதாகவும் இதில் மன்னார் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்களும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.