இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜெனீவாவைக் கையாளும் நகர்வு-

யாழ் திண்ணைச் சந்திப்பு, அமெரிக்கப் பேச்சுக்கள் குறித்து பசில் நாளை மோடியுடன் கலந்துரையாடுவார்

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் ஒன்றுக்குச் சம்பந்தன் அழைப்பு விடுவார்
பதிப்பு: 2021 டிச. 01 22:01
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 02 00:11
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
புதுடில்லிக்குச் சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய நிதியமைச்சர் சீத்தாராமனை இன்று புதன்கிழமை சந்தித்துள்ளார். இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ச இரு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து உரையாடினாரென, கொழும்பில் உள்ள நிதியமைச்சு இன்று புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ள அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய முதலீட்டாளர்கள், இந்தியாவின் பிரதான இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.
 
இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதியுதவிகள், மேலும் இந்தியா வழங்கவுள்ள உதவிகள் தொடர்பாகவே அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தப் பயணத்தின்போது கூடுதல் கவனம் செலுத்துவாரென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் யாழ் திண்ணைக் ஹேட்டேலில் இடம்பெற்ற சந்திப்பு மற்றும் சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான குழுவின் அமெரிக்கப் பயணம் தொடர்பாகவும் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவகாரங்கள் குறித்தும் பசில் ராஜபக்ச புதுடில்லியில் விரிவாக ஆராயவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு திரும்பியதும் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் கூட்டம் ஒன்றுக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுவாரென கொழும்புத் தகவல்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் விவகாரம் தொடர்பான அமெரிக்க- இந்திய அரசுகளின் நகர்வுகள் குறித்துச் சம்பந்தன் விளக்கமளிப்பாரெனவும், இரண்டு அரசுகளும் இணைந்து முன்வைக்கவுள்ள அரசியல் தீர்வு யோசனைகளை ஏற்க வேண்டிய கட்டாயச் சூழல் தொடர்பாகவும் சம்பந்தன் விளக்கமளிப்பாரெனத் தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுவதற்கு முன்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடல் ஒன்று இடம்பெறுமெனவும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூர்மை செய்தி இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளன.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான பேச்சுக்கள் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்கம் செய்யப்படும் வரை இலங்கை ஒற்றையாட்சி அரசு, அமெரிக்க- இந்திய அரசுகளின் பக்கமே நிற்குமென்றும், அதன் பின்னரான சூழலிலேயே சீனாவின் பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூர்மை செய்தி இணையத்தளத்தில் விளக்கக் கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருந்தன.

அதேபோன்று அமெரிக்க- இந்திய அரசுகளும் ஈழத்தமிழர்களின் விவகாரத்தை அவ்வப்போது ஆயுதமாக்கி இலங்கையை முடிந்தவரை முற்றாகச் சீனாவின் பக்கம் சாய்வதைத் தடுக்கும் உத்திகளை மாத்திரமே கையாண்டு வருகின்றமை தொடர்பாகவும் கூர்மைச் செய்தித் தளம் விரிவான கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.