இலங்கைத்தீவின்

வடமாகாணத்தில் நான்கு இளைஞர்கள் கொலை

போதைப்பொருள் பாவனையும் காரணமெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2021 டிச. 29 21:43
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 30 01:52
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஞாயிற்றுகிழமை ஆண்கள் நால்வரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியில் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 51 வயதுடைய அப்துல் ரசாக் முகம்மது கௌவ்ஸ் எனும் 3 பிள்ளைகளின் தந்தை என மன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். ஞாயிறு முற்பகல் 11.30க்கு மன்னார் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இரண்டு நபர்களால், இவர் வாள்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
மன்னார் புதுக்குடியிருப்பில் வசிக்கும் மேற்படி இரண்டு நபர்களும் ஞாயிறு காலை கொல்லப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று, அவரை வாகனம் ஒன்றில் , மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியில் உள்ள ரயில்வே கடவைக்கு அருகாமையில் அழைத்து வந்து, அவர் மீது சராமரியான வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடும் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான குறித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். இக்கொலைச் சம்பவத்தையடுத்து கொலையாளிகள் இருவரும் ஞாயிறு பிற்பகல் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும், மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் போதைவஸ்த்து மற்றும் சட்டவிரோதப் பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்ததாகவும், இந்த நிலையில் இவர்களால் கொல்லப்பட்ட முகம்மது கௌவ்ஸ், இவர்கள் பற்றி தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கொல்லப்பட்ட முகம்மது கௌவ்ஸ் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெறும் போதைவஸ்துக் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நபர் எனவும் கூறப்படுகிறது.

ஞாயிறு மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் கொல்லப்பட்டவரின் சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் பொலிஸாரிடம் சரணடைந்த இரண்டு சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கௌதாரிமுனை பகுதியில் இளைஞரொவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் இருந்து கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற குழுவினருக்கும், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கௌதாரிமுனை பகுதிக்கு படகு மூலம் சுற்றுலாவிற்காக வருகை தந்த பிரிதொரு குழுவினருக்கும் இடையில், நேற்று ஞாயிறு முற்பகல் நிகழ்ந்த மோதலிலேயே, மேற்படி இளைஞர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 22 வயதுடைய ரஞ்சன் நிரோசன் எனும் இளைஞரே கொல்லப்பட்டவர் என பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி கொலைச் சம்பவத்தையடுத்து குருநகரில் இருந்து படகு மூலம் பூநகரி கௌதாரிமுனைக்கு சுற்றுலாவிற்கு வருகை தந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகப் பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் எஸ். சிவபாலன் சுப்பிரமணியம், நேற்று ஞாயிறு மாலை சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, பூநகரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலத்தை நேற்று ஞாயிறு பொலிஸார் மீட்டுள்ளனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளச் சென்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் 32 வயதுடைய கிளரின் கொல்வின் என்பவரின் சடலமே இவ்விதம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . அத்துடன் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக இளவாலை பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கலாசியம்பலாவ தம்பனைக்குளத்தில் நீரில் மூழ்கிய நிலையில் ஆணொருவரின் சடலத்தை நேற்று 26ஆம் திகதி ஞாயிறு மாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இறந்தவர் அனுராதபுரம் மாவட்டம் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஹரிந்து வெத்தராச்சி எனும் சிங்கள இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.