கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் தற்போதைய தளம்பல் நிலையைச் சாதகமாக்கி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் தமக்கு வசதியாக அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையின் சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு மாற்றுவதிலும் ஜனாதிபதி ஆட்சி முறையைத் தொடர்ந்து பேணுவதிலுமே அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
ஆனாலும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிக்க வேண்டுமென்பதில் ரணில், சஜித் ஆகியோருக்கு முழு உடன்பாடு இல்லை. ஏனெனில் ஜனாதிபதிப் பதவி என்பது அவர்கள் இருவரின் இலக்கு.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிக்க வேண்டுமென ஜே.வி.பி விரும்பினாலும் ரணில், சஜித் ஆகியோருடைய அரசியல் பின்னணியைக் கடந்து. அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை. ஜே.வி.பியால் அரசியல் கோசங்களை மாத்திரமே பலமாக எழுப்ப முடியும்.
ஆகவே பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பயன்படுத்தி பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் அதிகாரங்களைப் பரிமாறும் சதுரங்க விளையாட்டாக மாறியுள்ளதே தவிர, மக்களின் பட்டினியைப் போக்குவதற்கானதாக இல்லை என்பது நாடாளுமன்ற விவாதங்கள் மூலம் பட்டவர்த்தனமாகிறது.
2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து ரணில்- மைத்திரி அரசாங்கம் பதவியேற்ற பின்னரும், இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுக்களைவிட, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை எப்படிக் காப்பாற்றுவது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது.
19 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதைத் தவிர மைத்திரி- ரணில் அரசாங்கம் எதனையுமே செய்யவில்லை. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்தால் மாத்திரமே இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தலாமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அப்போது கூறியிருந்தது.
கொழும்பில் இருந்த வெளிநாட்டுத் தூதரங்களும் அவ்வாறுதான் பொதுமக்களுக்கு குறிப்பாகத் தமிழ் மக்களுக்குக் கூறியிருந்தன. இதனை நம்பி 2015 ஆம் ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற தேர்தலில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள், அப்போது ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.
ஆனால் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும். நடந்ததென்ன? பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றினார். மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்கள். அவருக்கு ஆதரவான அமைச்சர்கள் மேற்கொண்ட ஊழல் மோடிசகள், அதிகாரத் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு உரிய முறையில் விசாரணைகளை நடத்தவுமில்லை.
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையின் வீரியம் குறைக்கப்பட்டு போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைகள் எல்லாமே உள்ளகப் பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதாவது இனப்பிரச்சினை விவகாரத்தை இலங்கையின் உள்ளக விவகாரமாக மாற்றுவதிலேயே மைத்திரி- ரணில் அரசு கவனம் செலுத்தியிருந்தது.
2015 இல் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி எதற்காகக் கவிழ்க்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல். இலங்கையின் இறைமை மற்றும் ஒற்றையாட்சி அரிசியல் யாப்பை பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. மாறாக முப்பது ஆண்டுகால போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குரிய தீர்வை ஏற்படுத்துவதோ, அல்லது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குரிய நிதியைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டங்களோ எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை.
ஆகவே சிங்கள மக்கள் பாதிக்கப்படும்போது ஏற்படுத்தப்படும் ஆட்சி மாற்றங்களில் சிங்கள மக்களுக்குச் சாதகமான வேலைகள் நடைபெறுமேதவிர தமிழ் மக்கள் சார்ந்த எந்தவொரு நலன்களும் கவனிக்கப்படுவதில்லை என்பது இங்கே பட்டவர்த்தனம்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகளினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடுகின்றனர். கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறும் கோருகின்றனர். இந்தப் போராட்டங்களின்போது ஆரம்பத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் நியாயப்படுத்தி வீதிக்கு இறங்கிய சிங்கள மக்கள், பின்னர், அது பற்றி எதுவுமே பேசவில்லை.
சிங்கள அரசியல் கட்சிகளின் பின்புலங்கள் எதுவுமேயின்றி வீதிக்கு இறங்கிப் போராடிய மக்கள், பின்னர் கொழும்பு காலிமுகத்திடலில் ஒன்றுகூடித் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்துவிலகினால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற கோசம் மாத்திரமே தற்போது போராட்டக்காரர்கள் முன்வைக்கும் வாதமாகும். ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் ராஜபக்ச அரசாங்கத்தில் அதிகரித்ததனாலேயே தற்போதைய அந்தியச் செலவாணிக் கையிருப்புக் குறைவடைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகச் சிங்கள அரசியல் கட்சிகள் சித்திரிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின்போது இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இவ்வாறுதான் காண்பிக்கின்றன.
ஆனால் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் எதுவுமே சிங்கள அரசியல் கட்சிகளினாலோ அல்லது சிங்கள ஊடகங்களினாலோ முன்வைக்கப்படவேயில்லை.
கோட்டாபயவினால் பாதிக்கப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களின் பெயர்கள் இளம் ஊடகவியலாளர் அமைப்பினால் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் தமிழ் ஊடகவியலாளர்களின் விபரங்கள் எதுவுமே அந்தப் பட்டியலில் இல்லை.
ஆகவே கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் பாதிக்கப்பட்டது சிங்கள மக்கள் மாத்திரமே என்ற தொனி கூடுதலாகச் சித்திரிக்கப்படுகின்றது. அவருடைய இரண்டு வருட ஆட்சியில் எற்பட்ட பிரச்சினைகள் மாத்திரமே பிரதானப்படுத்தப்படுகின்றன
கோட்டா பதவி விலகிலவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற கருத்துக்களை சிங்கள அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல. சிங்கள முற்போக்காளர்கள், சிங்கள இடதுசாரிகள் அனைவருமே முன்வைக்கின்றனர்.
ஏனெனில் இலங்கை ஒற்றையாட்சியின் இறைமையைப் பாதுகாப்பது மாத்திரமே அவர்களின் நோக்கம். 2015 ஆம் ஆண்டு மகிந்தவைக் கவிழ்த்ததுபோன்று 2022 இல் கோட்டாபய ராஜபக்வைக் கவிழ்த்துப் புதிய ஆட்சியைக் கொண்டுவந்தால், சர்வதேச அரங்கில் தற்போது பேசுபொருளாக இருக்கும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் முற்றாகவே ரத்துச் செய்துவிடலாமென சிங்கள அரசியல் கட்சிகளும் சிங்கள முற்போக்குவாதிகளும் நம்புகின்றனர்.
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் மாற்றங்களைச் செய்து, தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்தும் நிலையான தீர்வுக்குரிய எண்ணக் கருக்களைக் கோட்டாவுக்கு எதிராகத் தற்போது போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதும் பட்டவர்த்தனம்.
ஆகவே எரிபொருட்கள் கிடைத்ததும் வீதியில் நின்று போராடும் சிங்கள மக்கள் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இந்தப் போராட்டத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்களும் இணைந்து பங்களிக்க வேண்டுமெனக் கூறுவோர் சிங்கள மக்களின் இந்த மன நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
போராட்டத்திற்குத் தமிழர்கள் ஆதரவு கொடுக்கலாமே தவிர நேரடியாகப் பங்குகொள்ளக்கூடிய சூழல் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று- எரிபொருள் பிரச்சினைகள் மாத்திரமே சிங்கள மக்களின் போராட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன. கோட்டாபய வீட்டுக்குச் சென்றுவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்ற கருத்து ஏற்புடையதல்ல.
இரண்டாவது- சிங்கள அரசியல் கட்சிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை மாற்றியமைப்பது மற்றும் 19 ஆவது திருத்தத்தை அல்லது 20 ஐ ரத்துச் செய்து 21 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர மாத்திரமே முற்படுகின்றனர்.
பிரதானப்படுத்தப்படும் இந்த இரு காரணங்களும் சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது. ஆனால் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழத்தமிழர்களுக்கு அது தீர்வாக அமையாது. இந்தவொரு நிலையிலேதான் சிங்கள மக்களின் தொடர் போராட்டத்தில் ஈழத் தமிழ் மக்கள் பங்கெடுப்பதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்பது வெளிப்படையானது.
இந்தப் போராட்டம் தொடர்பாக அவதானம் செலுத்திவரும் கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதரகங்கள்கூட ஈழத்தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்கிறார்களா இல்லையா என்பதை உற்றுநோக்குகின்றனர். போராட்டத்தில் ஏன் பங்கொள்ளவில்லை என்றெல்லாம் வேறு நபர்கள் மூலமாக அறிந்து வருகின்றனர்.
அதற்கான உரிய காரணங்கள் சொல்லப்படும்போது, கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் அதனை மறுக்கவில்லை.
ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை மற்றும் 20 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து 19 ஐ நடைமுறைப்படுத்துவதற்காக 21 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் ஆர்வமாகவுள்ளமைக்கு வெளிநாட்டுத் தூதரகங்களும் ஒரு காரணம்.
இலங்கையில் யார் ஆட்சி செய்தாலும் பிரச்சினையில்லை. தமக்குரியவாறான ஆட்சியும், புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை சீனாவின் பக்கம் சென்றுவிடக்கூடாது என்ற கோணத்திலுமே அமெரிக்க, இந்திய அரசுகள் சிந்திக்கின்றன.
சீனாவும் தனக்குரிய ஆட்சியை அமைக்க இலங்கையின் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்துகின்றது என்பதும் உண்மையே. ஆகவே சிங்கள மக்களின் போராட்டத்தில் புவிசார் அரசியல் போட்டிகளும் உள் நுழைந்து விளையாடுவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த இடத்திலேதான் ஈழத்தமிழர்கள் விவகாரம் மேலும் பின்னோக்கியுள்ளது. சிங்கள மக்களினால் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சியைப் புதுப்பிப்பதற்கான மற்றொரு சிறிய ஏற்பாடு மாத்திரமே என்பதைச் சிங்களக் கட்சிகளின் கருத்துகள் எடுத்துக் காண்பிக்கின்றன