சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் பெறப்பட்டன. வாக்களிப்பில் 13 பேர் கலந்துகொள்ளவில்லை.
குறித்த சட்டமூலம் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச் சட்டமூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்துமாறு சஜித் அணி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரினார். இதனையடுத்தே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இலத்திரனியல் வாக்கெடுப்பில் சட்ட மூலத்துக்கு ஆதரவாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களிக்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
சஜித் அணியோடு சேர்ந்து செயற்படும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை மின்சார திருத்த சட்டமூலத்தில் சில திருத்தங்களையும் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது. அதாவது விலைமனு கோரியே பத்து மெகாவொட் அபிவிருத்தித் திட்டத்தை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரச தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் விவாதத்தின்போது கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இருந்தாலும் வாக்கெடுப்பில் அரசதரப்பு உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எதிர்தரப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.