பொருளாதார நெருக்கடி தொடர்கிறது

எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய ரசியாவுடன் பேச்சு- இரு அமைச்சர்கள் பயணம்

இலங்கைத்தீவு முற்றாக முடங்கும் அபாயம்- அமைச்சர் கஞ்சன விளக்கம்
பதிப்பு: 2022 ஜூன் 26 23:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 26 23:40
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் எரிபொருட்கள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரசியாவிடம் இருந்து குறைந்தவிலையில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரசியாவிடம் இருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமென, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தில் இருந்து முரண்பட்டுத் தனித்து இயங்கும் ஒன்பது சிறிய கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கையை முன் வைத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ரசியாவிடம் இருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், அரசாங்கத்தின் சார்பில் இரண்டு அமைச்சர்கள் ரசியாவுக்குச் சென்று கலந்துரையாடவுள்ளதாக எரிபொருள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரசியாவிடம் இருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்யவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவுவதால் அத்தியாவசிய சேவைகள் உட்பட பல சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொழும்பில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த வாரமும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படுமென கல்வி அமைச்சு ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்துள்ளது.

கொழும்பு தவிர்த்த வெளி மாவட்டங்களில் வாரத்துக்கு மூன்று நாட்கள் பாடசாலைகளை நடாத்துமாறு கல்வி அமைச்சு கேட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேயசேகர, இரண்டு அமைச்சர்கள் ரசியாவுக்கு விரைவில் பயணமாகவுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் ரசியாவுக்குப் பயணம் செய்யவுள்ள இரு அமைச்சர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.

ரசியாவுடன் இராஜதந்திர உறவை பேண வேண்டிய தேவையிருப்பதாகவும் அமைச்சர்களின் பயணத்தின்போது, இலங்கை – ரசிய உறவு குறித்து விரிவாக ஆராயப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேயசேகரா கூறினார்.