இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வடக்கு மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சரான திருமதி அனந்தி சசிதரன் உட்பட ஐவரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் (ஹேபியஸ் கார்பஸ் - Habeas Corpus) சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக விசாரணை செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு ஜூலை மாதம் முதலாம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்படவிருந்தது.
வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி (14.02.2022) நடைபெற்ற மேற்படி ஆட்கொணர்வு மனு தொடர்பான அமர்வின் போது, இந்த வருடம் ஜீன் மாதம் 17ஆம் திகதி குறித்த மனு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதன் பிரகாரம் இம்மாதம் ஜூன் 17ஆம் திகதி குறித்த மனுக்கள் தொடர்பில் வவுனியா நீதிமன்றில் நடைபெற்ற அமர்வில், தவிர்க்க முடியாத காரணங்களினால் குறித்த மனு மீதான தீர்ப்பு அன்றைய தினம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த ஐந்து மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வழங்கப்படும் என மனுதாரர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு பதவியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தினால் தமிழர் தாயகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தின் கடைசித் தருணங்களில், பெரும் எண்ணிக்கையான போராளிகளும், பொதுமக்களும் படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டதுடன், பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் விடுதலை புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரான எழிலன் என அழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும், தற்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் (கச்சேரி) அமைந்துள்ள செல்வபுரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவினரிடம் 2009 ஆம் ஆண்டு மே மாதப் பகுதியில் சரணடைந்திருந்தனர்.
எனினும் பின்னரான காலப்பகுதியில் குறித்த படைப் பிரிவினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில், எவ்விதத் தகவல்களும் வெளிவராத நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆகியன இவ்விடயத்தில் கேள்வி எழுப்பியதுடன், இலங்கை அரசிற்கு இது தொடர்பில் பெரும் அழுத்தங்களையும் பிரயோகித்தன.
எனினும் இலங்கை அரசாங்கமோ, அதன் படைத்தரப்போ போர்க்களத்தில் தம்மிடம் சரணடைந்த போராளிகள் மற்றும் கைதான பலர் தொடர்பான உரிய தகவல்கள் எவற்றையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இவ்வாறான சூழ்நிலையிலேயே திருமதி அனந்தி சசிதரன், இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவரான புலிகள் அமைப்பின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரான எழிலன் என அழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் தொடர்பாகக் கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் அக்காலகட்டத்தில் தமிழர் தாயகப்பகுதி எங்கும் கடத்தல் பயமுறுத்தல், அநாவசிய கைது மற்றும் உயிர் அச்சுறுத்தல், போன்ற கடுமையான கெடுபிடிகள் நிலவியதினால், வட மாகாணத்தில் பணியாற்றும் சட்டத்தரணிகள் எவரும் திருமதி அனந்தியின் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்வதற்கு முன்வரவில்லை.
அத்துடன் தனது கணவர் தொடர்பான குறித்த மனுவை தனித்துத் தாக்கல் செய்வதிலும், பல இடையூறுகளுக்கு அனந்தி சசிதரன் அச்சமயம் முகம் கொடுத்திருந்தார்.
எனினும் இவ்வாறான தருணத்தில் பல சவால்களை எதிர்கொண்டு பகீரதப் பிரயத்தனத்திற்கு மத்தியில், படையினரிடம் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, தனது கணவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மூத்த சட்டத்தரணி கே.எஸ். ரெட்ணவேல் ஊடாக கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதப்பகுதியில் வவுனியா மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்றை (ஹேபியஸ் கார்பஸ் - Habeas Corpus) அனந்தி சசிதரன் தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்ட அன்றைய தினத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட மேலும் நால்வரின் ஆட்கொணர்வு மனுக்களும், அவர்களின் உறவினர்களால் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரெட்ணவேல் ஊடாக வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்விதம் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி ஐந்து ஆட்கொணர்வு மனுக்களும் ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. எனினும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவமான, இராணுவத்தினரிடம் சரண் அடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயங்கள் யாவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் நடந்தேறி இருந்ததினால், குறித்த ஐந்து மனுக்களினதும், ஆரம்பகட்ட விசாரணைகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நடத்தி இறுதி அறிக்கையினை சமர்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் கட்டளையிட்டது.
இதனடிப்படையில் மேற்படி ஐந்து ஆட்கொணர்வு மனுக்களும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மேலும் குறித்த மனுக்கள் தொடர்பில் பல தவணைகள் இடப்பட்டு, பல சாட்சியங்களும் முல்லைத்தீவு நீதிமன்றினால் பதிவுசெய்யப்பட்டது.
அத்துடன் குறித்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த அனந்தி சசிதரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஜெயக்குமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா ஆகிய ஐவரும் நீதிமன்றில் தமது சாட்சியங்களை வழங்கினர்.
அத்துடன் 58ஆம் படைப்பிரிவிற்கு பொறுப்பான ஒரு மேஜர் ஜெனரல் உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் பலரும் குறித்த மனுக்கள் தொடர்பில் தமது சாட்சியங்களை நீதிமன்றில் வழங்கியிருந்தனர்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த ஆட்கொணர்வு மனு தொடர்பான ஒரு சில வழக்குத் தவணைகளின் போது மனுதாரரான அனந்தி சசிதரன் முல்லைத்தீவு நகருக்கு வரமுடியாத வகையில் அரச புலனாய்வு பிரிவினரால் தடங்கள் ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன் அன்றைய தினங்களில் இலங்கை படையினரால் பேருந்து மூலம் அழைத்து வரப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் சில வன்முறைக் கும்பலினால், அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்னாள் சிறிய ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான. நெருக்கடியான சூழ்நிலையில் குறித்த ஐந்து ஆட்கொணர்வு மனுக்களும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் விசாரணை செய்யப்பட்டு, விசாரணை அறிக்கைகள் யாவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலேயே, குறித்த விசாரணை அறிக்கைகள் தொடர்பான தனது தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்றம் ஜூலை மாதம் வழங்கவிருந்தது.
இந்த நிலையில் குறித்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களில் ஒருவரான திருமதி அனந்தி சசிதரன் கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலை முழுமையாகத் தருகின்றோம்.
தமிழ் இன அழிப்புத் தொடர்பான விசாரணைகளோ, ஈழத்தமிழர்கள் சார்பான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளோ எதுவுமே இலங்கை நீதிமன்றத்தில் நடத்தக்கூடிய நம்பகத் தன்மைகள் இல்லை. குறித்த ஆட்கொணர்வு மனுக்களுக்கான இறுதித் தீர்ப்புக்கூட பொருளாதார நெருக்கடிகளைக் காரணம் கூறிப் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.