எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை தீர்வு காணவில்லை என்று குற்றம் சுமத்திய முஜிபுர் ரகுமான், கோட்டா- ரணில் அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவார்கள் எனவும் முஜிபுர் ரகுமான் கூறினார்.
இதேவேளை, புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களினால் அப் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாகப் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மாளிகைக்குச் செல்லும் செத்தம் வீதியில் ஐக்கிய தேசிய சுயதொழில் வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸார் அவர்களுடன் தர்க்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் உள்ளிட்ட நான்கு பேரை கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கைத்தீவில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வு காணுமாறு கோரியே ஐக்கிய தேசிய சுயதொழில் வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, 480 மில்லியன் டொலர்களைப் பெறுவதற்கான அமெரிக்காவின் எம்.எம்.எம்.சி எனப்படும் மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதைத் தவிர்த்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளினால், அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவிகளைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து 37 மில்லியன்களைப் பெறுவதற்கான இரண்டு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சமூக ஒருமைப்பாட்டிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மூடப்பட்ட பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல் ஆகிய இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா இலங்கையுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளது.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள யோசனையில், யுஎஸ்எயிட் எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் மூலம் 57 மில்லியன் டொலர்கள் நிதியளிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.