இலங்கைத்தீவில் பொருளாதார நெருக்கடி

நான்கு கப்பல்களில் எரிபொருட்களை உடனடியாக அனுப்ப இந்தியா ஏற்பாடு, மிலிந்த - பூரி டில்லியில் சந்திப்பு

இலங்கைக்குத் தொடர்ந்து உதவியளிக்கும் திட்டங்கள் குறித்து இருவரும் உரையாடல்
பதிப்பு: 2022 ஜூன் 29 23:23
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 30 10:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
எரிபொருட்களைப் பெறுவதற்காக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரசியாவுக்கும், அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கும் சென்றுள்ள நிலையில், இரண்டு டீசல் கப்பல்களும், இரண்டு பெட்ரோல் கப்பல்களையும் இந்தியா உடனடியாக அனுப்பவுள்ளது. ஜூலை மாத ஆரம்பத்தில் இந்த எரிபொருட் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருமென கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட இந்திய பெற்றோலிய இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியைத் திங்கட்கிழமை புதுடில்லியில் சந்தித்துள்ளார்.
 
டில்லியில் உள்ள அமைச்சரவை அந்தஸ்த்துள்ள தூதுவர் மிலிந்த மொரகொட, இலங்கையின் அவசர தேவைகள் குறித்து இந்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளதாக இலங்கைத் தூதரகத்தை மேற்கோள் காண்பித்துக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் எரிபொருட் கப்பல்களை இந்தியா எப்போது அனுப்பும் என்று எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.

கடுமையான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தற்போது உதவி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 400,000 மெட்ரிக் தொன் எரிபொருட்களை இலங்கை பெற்றிருந்தது.

இலங்கைத்தீவில் தற்போது நிலவும் நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பெற்றோலியத் துறையில், இந்தியா இலங்கைக்குக் கூடுதல் ஒத்துழைப்பை வழங்கும் வழிகள் குறித்த திட்டம் ஒன்றை மிலிந்த மொறகொட முன்வைத்துள்ளார்.

2022 ஜனவரியில் இருந்து தற்போது வரை, இந்திய அரசு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு உதவியாக வழங்கியிருக்கிறது.

மூன்று பில்லியன்களை, 400 மில்லியன் டொலர் நாணய மாற்று ஒழுங்கு (currency swap), ஒரு பில்லியன் கடன் ஒத்திவைப்பு (deferred repayment of loans) மற்றும் அரை பில்லியன் கடன் வசதி (credit facility) என்று இந்தியா வழங்கியது மட்டுமன்றி, நானூறு மெற்றிக் தொன் எரிபொருட்களோடு அத்தியாவசிய மருந்துகளாகவும் அனுப்பியிருந்தது.

இந்தியாவின் இந்த உதவிகளை சீனா வரவேற்றிருந்தது. அதேவேளை, இலங்கைக்கு இருபது மில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜீ -7 மாநாட்டில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா இலங்கைக்கு உதவி செய்வதன் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கம் இருப்பதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கொழும்பில் செய்தியாளர்களிடம் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு முன்னர் இலங்கைக்கு இந்திய பிரதிநிதிகள் வருகை தந்தால், எதிர்கால உதவிகள் குறித்துப் பகிரங்கமாக அறிவிப்பர். ஆனால் இம்முறை இந்திய உயர்மட்ட குழு அவ்வாறு அறிவிப்பு எதனையும் செய்யாமல் கொழும்புக்கு வந்து சென்றதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.