மன்னார் முருங்கனில் இருந்து

தமிழகம் சென்ற வயோதிப் பெண் மரணம்- கணவர் ஆபத்தான நிலையில் மதுரை வைத்தியசாலையில் அனுமதி

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அவலமென உறவினர்கள் தகவல்
பதிப்பு: 2022 ஜூலை 03 20:11
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 03 22:40
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் முருங்கனைச் சேர்ந்த 71 வயதான பரமேஸ்வரி எனும் வயோதிபப் பெண் இரண்டாம் ஆம் திகதி சனிக்கிழமை மதுரை ராஜாஜி அரசினர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் கணவரான 74 வயதுடைய பெரியண்ணன் சிவன், குறித்த வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடுவதாகவும் தம்பதியினரின் மருமகளான மன்னார் முருங்கனில் வசிக்கும் 28 வயதுடைய நதிக்குமார் சாரதா கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
வயோதிபர்களான குறித்த கணவரும், மனைவியும் படகு மூலம் தமிழகம் சென்ற வேளை ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாகப் படகினுள் தூக்கி வீசப்பட்டு, சுயநினைவு இழந்த நிலையில், மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவுடன் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசினர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மருமகள் மேலும் தெரிவித்ததாவது-

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முருங்கன் கொள்ளர் சிறுக்குளத்தில் நான் வசித்து வருகிறேன்.எனது கணவரின் பெற்றோரான 74 வயதுடைய பெரியண்ணன் சிவன் மற்றும் 71 வயதுடைய சிவன் பரமேஸ்வரி ஆகிய இருவரும் என்னுடனேயே வசித்து வந்தனர்.

கடந்த 27ஆம் திகதி திங்கள் அதிகாலை தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்திற்கு செல்லும் வழியில் எனது மாமா மற்றும் மாமி ஆகியோர் குறித்த அவலத்திற்கு உள்ளாகியதை சமூகவலைத் தளங்கள் மூலமாகவே அறிந்தேன்.

தம்பதியினரின் இளைய மகனான சிவன் நதிக்குமார் என்பவரை நான் திருமணம் செய்துள்ளேன். எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் சவுதி அரேபியாவில் தொழில் புரிகின்றார்.

எனது கணவரின் தாய், தந்தையர் எனது வீட்டிற்கு அருகாமையில் சிறிய பெட்டிக்கடையொன்றை நடத்தி வந்தனர். எனினும் இலங்கையில் பரவிய கொவிட் தொற்றையடுத்து, ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இவர்களினால் தமது சிறிய கடையைத் தொடர்ந்தும் நடத்தமுடியவில்லை.

எனது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழில் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மாதாந்தம் பணம் அனுப்புவதிலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும் எனது பிள்ளைகளும் பெரும் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு தினமும் முகம் கொடுத்து வருகின்றோம்.

எனினும் எனது கணவரின் பெற்றோரான மேற்படி இருவரையும், நானே பல கஷ்டங்களுக்கு மத்தியில் கடந்த 26ஆம் திகதிவரை பராமரித்து வந்தேன்.

கடந்த 26ம் திகதி ஞாயிறு காலை வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக, நான் முருங்கன் நகருக்கு சென்றேன். எனது கணவரின் தந்தையும், தாயும் தாங்கள் ஒட்டுசுட்டானில் உள்ள தமது பேரப்பிள்ளைகளுடன் தங்கியிருந்து அங்கு நிலக்கடலை செய்கையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்து என்னுடன் முருங்கனுக்கு வந்தனர்.

அச்சமயம் நான், ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பணம் எடுத்து வருவதாகவும், பணம் எடுத்து வந்தவுடன், ஒட்டுசுட்டானுக்குச் செல்வதற்குப் பஸ் ஏற்றி விடுவதாகவும், அதுவரை அவர்கள் இருவரையும் காத்திருக்குமாறு கூறி ஏ.டி.எம் மையத்திற்குப் பணத்தை எடுக்கச் சென்றேன்.

பின்னர் நான் திரும்பியவேளை, மாமாவும், மாமியும் அங்கிருக்கவில்லை. எனது மாமா, மாமி ஆகிய இருவரும் ஒட்டுசுட்டான் செல்வதற்காக பஸ் ஏறி இருப்பார்கள் என்று கருதி, எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். எனினும் அவர்கள் அங்கு செல்லாது தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்றுள்ளதைப் பின்னர் அறிந்தேன்.

மாமா, மாமிக்குப் பத்து பிள்ளைகள். இவர்களின் பிள்ளைகளில் ஐவர் இறந்துவிட்டனர். ஏனைய ஐந்து பிள்ளைகளில் இரண்டு மகன்களும், ஒரு மகளும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.

எனது கணவரின் இளைய சகோதரி ஓருவரும் முருங்கன் கொல்லர் சிறுகுளத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றார்.

தமிழ் நாட்டில் வசிக்கும் தமது பிள்ளைகளுடன் வசிப்பதற்காக தலைமன்னாரில் இருந்து படகு மூலம் கடல் வழியாக தமிழகம் சென்றபோதே உயிரிழந்ததாக நதிக்குமார் சாரதா கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்