சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சு நடத்தியது. அந்தப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பாக அரசாங்கம் பரிசீலிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்குச் சமூகமளித்தமையினால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். பதவி விலகி கோட்டாபயவை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரக்கச் சத்தமிட்டனர்.
இதனால் நாடாளுமன்றத்தில் அமளி துமளி ஏற்பட்டது. கூச்சல் குழப்பத்திற்கு மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தார். எதிர்கட்சிகளின் எதிர்ப்புத் தொடர்ந்தமையினால் கோட்டாபய ராஜபக்ச சபையில் இருந்து வெளியேறினார்.
சபை நடவடிக்கைகளும் சிறிது நேரம் இடை நிறுத்தப்பட்டன.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் உரை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சா டி சில்வா, பிரதமர் உறுதியளித்த போதிலும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைத்தீவின் கடன்களை மறுசீரமைக்க முடியாதெனச் சுட்டிக்காட்டினார்.
ஓகஸ்ட் மாதத்திற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இந்த கடனை மூன்று வாரங்களில் மறுசீரமைக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மக்கள் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்குரிய திட்டம் கோட்டா, ரணில் அரசாங்கத்திடம் இல்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
பெட்ரோல் - டீசல் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தீர்வு எங்கே, தோட்டத் தொழிலாளர்களுக்கு தீர்வு எங்கே, ஏற்றுமதி துறையின் வீழ்ச்சிக்குத் தீர்வு என்ன என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.