இலங்கை ஒற்றையாட்சி அரசிற்கு ஏற்ற முறையில்

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரும்பும் இந்தியா - கொழும்புப் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பூச்சிய வரைபு

தமிழர்கள் ஒற்றையாட்சியை ஏற்பதற்கான பரிந்துரைகள்
பதிப்பு: 2022 செப். 26 06:23
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 26 06:24
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
காலிமுகத் திடலில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்களுடன் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றியதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் மாற்றங்கள் ஏற்படுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் பூச்சிய வரைபில் (zero draft) நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இக் கருத்தின் ஊடாக, ஈழத்தமிழர்களுடைய பிரதான அரசியல் நியாயப்பாடுகள் புறம் தள்ளப்பட்டுள்ளன. ஆணையாளர் மிச்சல் பச்லெட் பதவி விலகியுள்ள சூழலில், இந்த அறிக்கை ஜெனீவா மனித உரிமைச் சபையின் பணியாளர்கள் மட்டத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தமிழ் - முஸ்லிம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை என்று கூறப்படுகின்றதே தவிர தமிழர்களுடைய அரசியல் பிரச்சினையின் ஆழம் அறிக்கையில் தெளிவாக இல்லை.
 
மேற்கொள்ளப்படவிருந்த பணிகள் நிதி இல்லாமையினால் தடைப்பட்டமை தொடர்பாகப் பூச்சிய வரைபில் எதுவுமே கூறப்படவில்லை. மாறாகத் தங்கள் பக்கத்துப் பலவீனங்களையும், ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாத தங்கள் இயலாமைகளையும் மூடி மறைத்துப் பூச்சிய வரைபு தயாரிக்கப்பட்டிருக்கின்றது

இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகள் பற்றிய விவகாரங்களினால் அமெரிக்காவின் வெறுப்புக்கு உள்ளாகிய மிச்சல் பச்லெட் ஆணையாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பூச்சிய வரைபு, மேலும் சரிபார்க்கப்பட்டு இறுதி வடிமைப்புச் செய்யப்படுகின்றது.

இலங்கை விவகாரம் தொடர்பான உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இறுதி வரைபைச் சரிபார்க்கின்றனர்.

ஆணையாளர் விலகியுள்ள நிலையில் இந்தப் பூச்சிய வரைபு கொழும்பில் இருந்து செயற்படும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாடப்பட்டு ஜெனிவா மனித உரிமைச் சபை அலுவலகப் பணியாளர்களினாலேயே தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது.

போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான படுகொலைகள், மற்றும் சித்திரவதைகள் குறித்த சர்வதேச விசாரணை அதற்கான சாட்சியங்களைச் சேகரித்தல் ஆகிய விசாரணைப் பொறிமுறைகள் பூச்சிய வரைபில் மிக நுட்பமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

பூச்சிய வரைபை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்ததாகவே கணக்குக் காண்பிக்கப்படுகின்றது. ஆனால் அவர் வெளியேறிய பின்னரான சூழலில் இலங்கைக்கு ஏற்ற முறையிலும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் புவிசார் அரசியல் தேவைக்கு ஏற்றதாகவும், இந்தப் பூச்சிய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதை அதன் உள்ளடக்கம் காண்பிக்கிறது.

மிச்சல் பச்லெட் ஆணையாளராக இருந்தபோது வெளியான அறிக்கைகளில் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய பல விடயங்கள் குறைந்த பட்சம் நல்ல வீச்சாக அமைந்திருந்தன. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டும் என மனித உரமைச் சபையின் இலங்கை தொடர்பான கருக்குழு நாடுகளின் (Core Group) பிரநிதிநிதிகளிடம் மிச்சல் பச்லெட் கோரியுமிருந்தார்.

ஆகவே கடந்த அமர்வின் போது அவ்வாறான அறிக்கைகள் வெளி வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு வரையப்பட்ட பூச்சிய வரைபில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகள், குறிப்பாக போர்க்குற்ற விசாரணை மற்றும் இன அழிப்புக்கான கோரிக்கைகள் அனைத்தும் புறம்தள்ளப்பட்டு முழு இலங்கைக்தீவுக்கும் உரிய மனித உரிமைப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இப் பூச்சிய வரைபின் இறுதி வடிவத்தில் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்படலாம். குறிப்பாகப் புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் இலங்கை அரசாங்கத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான அரசியல் அழுத்தங்கள் முன்வைக்கப்படலாம்.

ஆகவே இப் பூச்சிய வரைபு மேலும் மென்படுத்தப்பட்டு மேலும் இலங்கைக்குச் சார்பான தீர்மானங்கள் நிறைவேறக்கூடிய ஏது நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

இறுதி வரைபை அமெரிக்காவும் பிரித்தானியா தலைமையிலான கருக்குழு நாடுகளும் மற்றும் இந்தியாவும் சேர்ந்து பூர்த்தி செய்யுமா, அல்லது அமெரிக்காவினதும் கருக்குழு நாடுகளினதும் பரிந்துரைகளோடு மட்டும் வரைபு முழுமை பெறுமா என்பது கூடக் கேள்வியாகவே உண்டு

ஆகவே சர்வதேச நீதி என்பது மறுக்கப்பட்டு, இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறையை ஊக்கப்படுத்தி, வேண்டுமானால் உள்ளக விசாரணைக்குரிய சர்வதேச தொழில் நுட்ப உதவிகளை மாத்திரம் வழங்குகின்ற ஒரு திட்டத்திற்கு ஜெனீவா மனித உரிமைச் சபை முன்வரக்கூடிய ஏற்பாடுகளே பூச்சிய வரைபில் அதிகமாக வெளிப்படுகின்றன.

ஆணையாளர் மிச்செல் பச்லெட் பரிந்துரைத்த சர்வதேச விசாரணைக்குரிய சாட்சியங்களைத் திரட்டும் பொறி முறைக்குப் போதிய நிதிவசதி ஜெனீவாவிடம் இல்லை. இதனாலேயே போர்க்குற்றங்கள், மனிதப் படுகொலைகளுக்கான உரிய சாட்சியங்களைத் திரட்டும் நடவடிக்கைகளை ஜெனீவா முன்னெடுக்கவில்லை. அதற்கான நிதி இந்த ஆண்டுதான் கிடைத்திருக்கின்றது.

ஆகவே மேற்கொள்ளப்படவிருந்த பணிகள் உரிய நிதி இல்லாமையினால் தடைப்பட்டமை தொடர்பாகப் பூச்சிய வரைபில் எதுவுமே கூறப்படவில்லை. மாறாகத் தங்கள் பக்கத்துப் பலவீனங்களையும், ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாத தங்கள் இயலாமைகளையும் மூடி மறைத்துப் பூச்சிய வரைபு தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்குக் கிழக்கில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் பற்றிக் கூறப்பட்டபோதும், தமிழர்கள் எதிர்நோக்கும் விரிவான பாதிப்புகள் தொடர்பாக எதுவுமே கூறப்படவில்லை. எல்லாமே மேலோட்டமான கூற்றுகள்.

இதன் காரணமாகவே இலங்கையின் போர்க்குற்றவாளிகள் என ஜெனீவாவினால் அடையாளமிடப்பட்டுள்ள இலங்கை இராணுவத் தளபதிகள், மூத்த படை உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது விசாரணை நடத்தப்படும் யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் (Universal Jurisdiction) என்ற புதிய பொறி முறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது போல் தெரிகின்றது.

ஆனாலும் இந்த யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் விசாரணைப் பொறிமுறையைக்கூட இலங்கை விரும்பவில்லை. ஜெனீவாவுடன் இலங்கை முரண்படுவதற்கும் அதுவும் ஒரு காரணம். அத்துடன் இந்தியாவும் இந்த விசாரணைப் பொறிமுறையை ஏற்கவில்லை. (இது குறித்து இப் பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது)

ஆனாலும் யுனிவேர்சல் விசாரணைப் பொறிமுறை அமுல்படுத்தக்கூடிய நிலைமைதான் காணப்படுகின்றது. ஆனால் இது சர்வதேச விசாரணை அல்ல. அந்த விசாரணைப் பொறிமுறை தமிழர்கள் எதிர்ப்பார்த்ததுமல்ல. இருந்தாலும் இதனைச் சர்வதேச விசாரணைப் பொறிமுறையாகவே ஜெனீவா காண்பிக்கின்றது.

இப் பூச்சிய வரைபு ஒட்டுமொத்தமாக உள்நாட்டுப் பொறிமுறையைத் தான் வலியுறுத்துகின்றது. அத்துடன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களினால், இலங்கையின் பொருளாதாரக் குற்றங்கள் என்ற புதிய விவகாரம் ஒன்றும் வரைபில் புகுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரக் குற்றங்களை விசாரணை செய்யும் பரிந்துரை ஊடாக ஜெனீவாவை எதிர்க்கும் பௌத்த சிங்கள மக்களைத் திருப்திப்டுத்தும் நோக்கம், உறுப்பு நாடுகளிடம் இருக்கலாம்.

இதனைப் பிரதானமாகக் கொண்டு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற விடயங்களும் வரைபில் உள்ளடங்கியிருக்கின்றன. இதன் மூலம் இலங்கை மக்களின் ஒட்டுமொத்த ஜனநாயகப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு மாத்தரமே பூச்சிய வரைபு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

சர்வதேச நீதியைக் கோருவதில், 2009 இற்குப் பின்னரான பதின்மூன்று ஆண்டுகளிலும் ஒருமித்த குரலுடன் கூடிய திட்டங்கள் எதுவுமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செயற்பட்டிருக்கின்றனா் என்பதையே பூச்சிய வரைபு பகிரங்கப்படுத்தியுள்ளது

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரையும் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இப் பூச்சிய வரைபின் உள்ளடக்கங்கள் தொடர்பாக அமெரிக்கா வேறாகவும் இந்தியா மற்றொரு பகுதியாகவும் சற்று மாறுபட்ட கோணங்களில் நின்றே ஆலோசனைகளை முன்வைத்திருக்கின்றன.

குறிப்பாக வரைபு தயாரிப்பில் கடந்த முறைபோலல்லாது, இம்முறை அமெரிக்க இந்திய அரசுகளுக்கிடையில் சற்று இடைவெளி காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஏனெனில் இறுதி வரைபு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பூச்சிய வரைபில், அரசியல் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டம் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் இறுதிநாள் அமர்வில் இந்தியா 13 ஐ வலியுறுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஏனெனில், மேற்குலக நாடுகளைவிடத் தமிழர்களைச் சமாளிக்க வேண்டியது இந்தியாவின் கடமை.

இம்முறை ஏனைய நாடுகளைவிடவும் இந்தியா மாத்திரமே அரசியல் தீர்வு பற்றி வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் தமிழ்தரப்பினால் நிராகரிக்கப்பட்ட 13 ஐ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டுதான் பரிந்துரை வெளிப்படுகின்றது.

இப் பின்புலத்தில் ஓவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் அறிக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டம் புகுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அறிக்கையில் மாத்திரம் 13 தவிர்க்கப்பட்டு இலங்கையின் ஒருமைப்பாடு பற்றிய அழுத்தங்களை முன்னிலைப்படுத்தி இலங்கையைத் திருப்திப்படுத்தியிருக்கிறது ஜெனீவா அலுவலகம்.

ஆனாலும் இறுதி வரைபை அமெரிக்காவும் பிரித்தானியா தலைமையிலான கருக்குழு நாடுகளும் மற்றும் இந்தியாவும் சேர்ந்து பூர்த்தி செய்யுமா, அல்லது அமெரிக்காவினதும் கருக்குழு நாடுகளினதும் பரிந்துரைகளோடு மட்டும் வரைபு முழுமை பெறுமா என்பது கூடக் கேள்வியாகவே உண்டு.

இருந்தாலும் மனித குலத்துக்கு எதிரான படுகொலைகள் பற்றிய சர்வதேச விசாரணைக்குச் சாட்சியங்களைத் திரட்டும் பொறிமுறைகள் தேவையில்லை என்ற இந்திய நிலைப்பாட்டை அமெரிக்கா போன்ற மேற்குலகமும், பிரித்தானியாவை மையமாகக் கொண்ட கருக்குழு நாடுகளும் ஏற்கும் நிலைமை வரலாம்.

அதாவது போர்க்குற்ற விசாரணைகளில் இலங்கையின் இறைமைக்குள் வேறு நாடுகள் தலையிடக் கூடாது என்ற இந்திய நிலைப்பாட்டை இம்முறை ஜெனீவா அறிக்கையில் முழுமைப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமல் இல்லை.

பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கையில் சிறுவர் நிலை தொடர்பாகச் சர்வதேச மட்டத்தில் பல குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜெனீவாவில் அது பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.

இதனால் முன்னாள் சிறுவர் போராளிகள் மற்றும் முன்னாள் போராளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற அல்லது கைது செய்யப்படக்கூடிய ஏற்பாடுகளும் கொண்டு வரப்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் ஆபத்துக்களும் உண்டு.

ஆகவே தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில், என்ன நடந்தது - நடந்து கொண்டிருப்பது என்ன என்ற விபரங்களைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தவில்லை என்பது இங்கே பட்டவர்த்தனமாகிறது.

தமிழர்கள் மத்தியில் உள்ள கட்சி அரசியலும், தனி நபர் அரசியல் வேலைத்திட்டங்களும், அதன் பலவீனங்களும், இலங்கை ஒற்றையாட்சி அரசின் தமிழர்களுக்கு எதிரான சர்வதேச வலைப் பின்னல் நகர்வுகளுக்கே வாய்ப்பாக அமைந்துள்ளன

அதாவது சர்வதேச நீதியைக் கோருவதில், 2009 இற்குப் பின்னரான பதின்மூன்று ஆண்டுகளிலும் ஒருமித்த குரலுடன் கூடிய திட்டங்கள் எதுவுமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செயற்பட்டிருக்கின்றனா் என்பதையே பகிரங்கப்படுத்தியுள்ளது.

கட்சிகளாக பிரிந்து செயற்பட்டாலும் தனிப்பட்ட நபர்கள் அல்லது கட்சிகளாகக் கூடச் சர்வதேச மட்டத்தில் செயற்படுத்த முற்பட்ட பல வேலைத்திட்டங்கள், வேறு சில தமிழ்த்தேசியக் கட்சிகளினால் அல்லது தமிழ்த் தேசியம் பேசுகின்ற சில தனி நபா்களினால் குழப்பப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது.

ஆகவே தமிழர்கள் மத்தியில் உள்ள கட்சி அரசியலும், தனி நபர் அரசியல் வேலைத்திட்டங்களும், அதன் பலவீனங்களும், இலங்கை ஒற்றையாட்சி அரசின் தமிழர்களுக்கு எதிரான சர்வதேச வலைப் பின்னல் நகர்வுகளுக்கே வாய்ப்பாக அமைந்துள்ளன.

அத்துடன் 2009 இற்குப் பின்னரான அரசியல் சூழலில் இலங்கை அரசை மட்டும் கையாண்டால் போதுமென்ற அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் தேவைக்கும் அது வசதியாக அமைந்துள்ளதெனலாம்.