இலங்கைத்தீவில்

தொழிற்சங்கப் போராட்டங்கள் தற்காலிக நிறுத்தம்

அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் இல்லையென்றால் போராட்டம் தொடருமென அறிவிப்பு
பதிப்பு: 2023 மார்ச் 17 17:36
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 21 06:40
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அரசாங்கத்தின் அடக்கு முறை நிறுத்தப்பட்டு அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் வரி நீக்கம் போன்றவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவிக்க மறுத்தால் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் உரிய பதில் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக தொழிற் சங்க நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் பங்கொள்ள வேண்டும் எனவும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
அதேவேளை, ஜனாதிபதி செயலகம் எழுத்துமூலம் தெரிவித்ததையடுத்து தாங்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கத்தின் பங்குதாரர்கள், தமது எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கும், அவர்களின் செயற்திட்டத்துக்கான காலவரையறையை நிர்ணயம் செய்வதற்கும் நாளை சனிக்கிழமை கூட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் அரச வைத்தியர் சங்கம் கூறியுள்ளது.

அதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது.

சுகாதாரம், மின்சாரம், எரிசக்தி, கல்வி, துறைமுகங்கள், தபால் சேவைகள் போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டமையால் பொதுமக்கள் இன்னல்களை எதிர் நோக்கியிருந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதால் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ரயில் பற்றாக்குறையால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.