ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த கட்ட வியூகம்

இந்திய இலங்கை வர்த்தக உறவைச் சீர்ப்படுத்தும் முயற்சி

சீனாவை விலக்கி வடக்குக் கிழக்கில் புதுடில்லிக்கு முன்னுரிமை
பதிப்பு: 2023 மே 21 08:09
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 22 09:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனை உணர்ந்துகொண்ட இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தயவுடன் இந்திய - இலங்கை வர்த்தக உறவுகளை மீளவும் புதுப்பிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கின்றது. வடக்குக் கிழக்கில் இந்தியத் திட்டங்களுக்கு முன்னுரிமை என்ற வியூகத்துடன் இந்தியாவுடனான வர்த்தக உறவை விரிவுபடுத்தும் ஏற்பாடுகள் வகுக்கப்படுகின்றன. ரணிலின் புதுடில்லிப் பயணம் இதற்குப் பதில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்தியா தொடர்பான சிங்கள மக்களின் அச்ச உணர்வுகள் குறித்தும் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளைக் குறிப்பாக தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற விடயங்களில் இலங்கைத் தொழிற் சங்கச் சங்கங்கள், இலங்கை மருத்துவர் சங்கம் ஆகியவற்றின் எதிர்ப்புகளைச் சமாளிப்பது அல்லது புரிய வைப்பது போன்ற அணுகுமுறைகளையும் கையாள சில உத்திகள் வகுக்கப்படுகின்றன

அதற்கேற்ப மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் பிரதி ஆணையாளர் டபிள்யு.ஏ.விஜயரட்ண, உள்ளிட்ட பொருளியல் நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் ஜனாதிபதி ரணில் இந்தியாவைக் கடந்து அமெரிக்க -சீன அரசுகளுடன் நேரடியாகக் கையாள முற்படும் நகர்வுகளில் புதுடில்லிக்கு அதிருப்தி உண்டு.

அத்துடன் கொழும்பு போட் சிற்றித் திடடத்தை மையமாகக் கொண்டு சீனாவுக்குரிய சில முக்கிய காரியம் ஒன்றை ரணில் கடந்த வாரம் செய்திருக்கிறார்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் முதுகெலும்பான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் இலங்கை வெளிப்படுத்தும் மறுதாக்கங்களும் இந்தியாவுக்கு ஒத்துவரக்கூடியதல்ல.

இதன் பின்னணியிலேயே இந்தியாவும் இலங்கையுடன் சில உத்திகளைக் கையாள ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக இலங்கையின் எதிர்பார்ப்புகள் விருப்பங்கள் போன்றவற்றுக்கு ஏற்ப வர்த்தகச் செயற்பாடுகளில் மீண்டும் சில இலகுவான நிபந்தணைகளை இந்தியா விதிப்பதற்குரிய ஏது நிலைகள் தென்படுகின்றன. அதனையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ரணில் முற்படுகிறார்.

2015 இல் பதவியில் இருந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் போது எட்கா (Economic and Technology Cooperative Agreement - ETCA) எனப்படும் முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை ரணில் தவிர்த்திருந்தார்.

மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது சீபா (Comprehensive Economic Partnership Agreement - CEPA) கைச்சாத்திடப்படவில்லை. 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கமும் அதனைப் புறக்கணித்திருந்தது.

இந்த இரு ஒப்பந்த விவகாரங்களில் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்தியா, 2020 இல் கோடாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அது குறித்த பேச்சுக்களை மீளவும் முன்னெடுத்திருந்தது. ஆனால் உரிய பயன் கிடைக்கவில்லை.

சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது 1998 டிசம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை வர்த்தக ஒப்பந்தம் (India-Sri Lanka Free Trade Agreement -ISFTA) முக்கியமானதென்றும் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததாகவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர் டபிள்யு. ஏ விஜயவர்த்தன பிற்.எல்கே (www.ft.lk) என்ற ஆங்கில இணையத் தளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது எழுதிய கட்டுரையில் விபரிக்கிறார்.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் உரிய முறையில் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை மேற்கொண்டிருந்தால், தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்ற தொனியில் அந்தக் கட்டுரையில் அவர் இடித்துரைக்கிறார்.

இந்த ஒப்பந்தம் தற்போதும் செயற்படுகின்றது. ஆனாலும் ஒப்பந்ததிற்குரிய உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் விஜயவர்த்தன தனது கட்டுரையில் பரிந்துரைத்திருந்தார்.

இந்திய - இலங்கை பிராந்திய மற்றும் பலதரப்பு மட்டங்களில் அபிவிருத்தி செய்து ஊக்குவித்தல், மொத்த உற்பத்தி, வருமானம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். வேலை வாய்ப்புகள் மூலம் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்குத் தீவிரமாக பங்களிப்புச் செய்தல் ஆகியவை அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை.

இதன் பிரகாரம் தற்போது ஜனாதிபதி ரணில் மீண்டும் இந்தியாவுடன் வர்த்தக செயற்பாடுகள் பற்றிய பேச்சை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவின் எட்கா மற்றும் சீபா உடன்படிக்கை போன்றவற்றை வேறு வடிங்களில் செயற்படுத்துவது குறித்தே ஆலோசிப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலிலும் ரசிய - உக்ரெகய்ன் போரினால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியிலும் மீண்டும் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை உருவாக்கி விரிவுபடுத்த ரணில் முற்பட்டிருக்கிறார்.

இந்திய ரூபாய்ப் பயன்பாடு சர்வதேச வர்த்கத்தில் முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய சாதகமான நிலை தென்படுவதாலும் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டயச் சூழல் ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூற முடியும்.

இப் பின்னணியில் இலங்கை மற்றும் இந்தியாவின் வர்த்தக வசதிகளின் நிலையை மதிப்பிடுவது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்யும் நடைமுறைகள், ஒழுங்குமுறைகள், தொடர்புடைய ஆவணங்களில் உள்ள இடையூறுகளை கண்டறிதல் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து தற்போது புதிய ஆலோசனைகள் தயாரிக்கப்படுகின்றன.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்கும்போது, தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரம் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற ஏற்பாடுகளுடன், ரணில் தனது உத்தியை வகுக்கிறார். இந்த உத்தி ஏனைய சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இந்தியக் கொள்கை வாகுப்பாளர்களுக்கும் ஏற்புடையது

அதேநேரம் இந்தியா தொடர்பான சிங்கள மக்களின் அச்ச உணர்வுகள் குறித்தும் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளைக் குறிப்பாக தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற விடயங்களில் இலங்கைத் தொழிற் சங்கச் சங்கங்கள், இலங்கை மருத்துவர் சங்கம் ஆகியவற்றின் எதிர்ப்புகளைச் சமாளிப்பது அல்லது புரிய வைப்பது போன்ற அணுகுமுறைகளையும் கையாள சில உத்திகள் வகுக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது பிரச்சினையல்ல. ஏனெனில் இது பொருளாதார மீட்சிக்குரிய இராஜதந்திரகள் மட்டத்திலான நகர்வு

அதேவேளை இந்தியா இப்போது வல்லரசு என்ற தோற்றத்தைக் காண்பித்து வருகிறது. அத்துடன் தமிழ் நாடும் பெரிய மாநிலமாகும். இதன் காரணமாக சிங்கள மக்களுக்கு இந்தியா பற்றிய அச்சம் ஒன்று உள்ளது.

குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா 1983 இல் இருந்து மூக்கை நுழைக்கிறது, சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கிறது என்ற அதிருப்தியும் சந்தேகங்களும் சிங்கள மக்களிடமும் சிங்கள ஊடகங்களிடமும் உண்டு.

இலங்கையில் இந்திய அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக சிங்கள மக்களும் பௌத்த குருமாரும் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சிங்கள மக்களின் இந்தியா தொடர்பான விருப்பமின்மையை அறிந்துகொள்ள சிறந்த உதாரணங்களாகும்.

ஆனால் இக் கடும் எதிர்ப்புகளினால் இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டு இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக வெற்றியடையவில்லை என்று விஜயரட்ணா தனது கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் மேம்படாமைக்கு இலங்கை மருத்துவர் சங்கம் மற்றும் சில தொழிற்சங்க அமைப்புகள் இடதுசாரிச் சிங்கள அமைப்புகள் போன்றவற்றின் மீது விஜயவர்த்தனா குற்றம் சுமத்துகிறார்.

குறுகிய அரசியல் சிந்தனைகள் மற்றும் இந்தியா குறித்த தேவையற்ற அச்சங்களே சீபா மற்றும் எட்கா போன்ற சிறந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தி விளக்கமளிக்கிறார்.

இந்த நிலையில் மீண்டும் இந்தியாவுடன் குறித்த ஒப்பந்தங்களை வேறு வடிவங்களில் மாற்றியமைத்து வர்த்தக உறவை மேற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் ரணில் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

இப் பின்புலத்தில் இலங்கையில் இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் மிலிந்த மொகொட தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட இந்திய வர்த்தக முதலீட்டாளர்களைச் சமீபத்தில் புதுடில்லியில் சந்தித்து இது குறித்துப் பேசியிருக்கிறார்.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உணவு, எரிபொருள், மருந்து கொள்வனவு உள்ளிட்டவற்றுக்காக சுமார் நான்கு பில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா கடந்த ஆண்டு வழங்கியிருந்தது.

ஆகவே இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் பலவீனத்தை இந்தியா மேலும் தமக்குச் சாதகமாக மேலும் பயன்படுத்தலாம்.

அதேநேரம் சிங்கள மக்கள் விரும்புவது போன்று ஈழத்தமிழர் விவகாரம் பற்றி அழுத்தம் கொடுக்காமல், இந்தியாவின் புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் மாத்திரம் புதுடில்லி செயற்படுமானால் சிலவேளை இந்தியா நோக்கிய பார்வையில் ரணில் போன்ற சிங்கள ஆட்சியாளர்களிடம் மாற்றங்களும் ஏற்படலாம்.

அத்துடன் அமெரிக்க - சீன அரசுகளுடன் சிறிய நாடு என்ற நோக்கில் நேரடியாகவும், அதேநேரம் இந்தியாவுக்கும் இந்தோ - பசுபிக் பிராந்தியத்துக்கும் ஆபத்தில்லாமல் இலங்கை தனது பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னெடுத்தால், புதுடில்லிக்கு அதில் பிரச்சினையும் இருக்காது.

தமிழ்த்தேசியக் கட்சிகள், கட்சி அரசியல் வேலைகளுக்கு அப்பால் ஒழுங்கு சீரான அரசியல் திட்டம் ஒன்றைக் கூட்டாக வகுக்க வேண்டும். அதற்காகப் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கேட்பது அரசியல் வேடிக்கை. இந்துத் தமிழீழத்தை இந்தியா பெற்றுத் தருமமென நம்புவதும் தற்கொலைக்கு ஒப்பானது

ஏனெனில் ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் சிறிய நாடுகளையும் அரவனைத்துச் செல்ல வேண்டும் அல்லது சிறிய நாடுகளின் விருப்பங்களுக்கு உடன்பட வேண்டும் என்ற அரசியல் - பொருளாதாரப் பின்னணிக்குள் தற்போது வல்லரசு நாடுகள் சிக்குண்டுள்ளன.

ஆகவே இந்த நெருக்கடிச் சூழலை குறிப்பாக இந்தியாவின் சிக்கலை ரணில் நன்கு அவதானிக்கக் கூடியவர். அதற்கு ஏற்ப இந்தியாவுடன் அணுகினால் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குரிய தீர்வை எட்ட முடியும் என்று ரணில் நம்பக்கூடும்.

ரணில் அடுத்த தோ்தலில் வெற்றிபெற முடியாதுபோனாலும், வரவுள்ள சிங்கள ஆட்சியாளர்களும் ரணில் தற்போது இந்தியாவை நோக்கி வகுக்கும் வியூகத்தை தொடரக்கூடிய நிலை உண்டு.

அதேபோன்று இந்தியாவில் மோடியின் ஆட்சி மாறி காங்கிரஸ் பதவியேற்றாலும் இந்த வியூகம் தொடரக்கூய சந்தர்ப்பங்கள் உண்டு. அதற்குரிய முறையிலேயே இந்திய - இலங்கை வர்த்தக ஏற்பாடுகள் இராஜதந்திரிகள் மட்டத்தில் வகுக்கப்படுகின்றன.

எனவே 2000 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த சர்வதேசப் புவிசார் அரசியல் - பொருளாதாரக் குழப்பங்களைப் பயன்படுத்திக் குறிப்பாக அமெரிக்க இந்திய அரசுகளின் ஒத்துழைப்புடன் 2009 இல் மகிந்த போரை இல்லாதொழித்தார்.

ரசிய - உக்ரெயன் போரினால் தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேசக் குழப்பங்களைப் பயன்படுத்தி இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க, ரணில் 2023 இல் முற்பட்டுள்ளார்.

அவ்வாறு பொருளாதாரத்தை மீட்கும்போது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரம் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற ஏற்பாடுகளுடன், ரணில் தனது உத்தியை வகுக்கிறார். இந்த உத்தி ஏனைய சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இந்தியக் கொள்கை வாகுப்பாளர்களுக்கும் ஏற்புடையது.

எனவே தமிழ்த்தேசியக் கட்சிகளின் 2009 இற்குப் பின்னரான பலவீனமான அரசியல் போக்குகள் இந்தியாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவும் நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றன.

ஆகவே இந்தியாவுடன் தொப்புள்கொடி உறவு உண்டென அடிக்கடி மார்தட்டும் தமிழ்த்தேசியக் கட்சிகள், தமது கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் ஒழுங்கு சீரான அரசியல் திட்டம் ஒன்றைக் கூட்டாக வகுக்க வேண்டும்.

அதற்காகப் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கேட்பது அரசியல் வேடிக்கை. இந்துத் தமிழீழத்தை இந்தியா பெற்றுத் தருமமென நம்புவதும் தற்கொலைக்கு ஒப்பானது. .