தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் தொடுத்த

காசா இன அழிப்புப் போர் குறித்த இடைக்காலத் தீர்ப்புச் சொல்லும் செய்தி

வீற்றோ அதிகாரங்கள் தடுக்கும் என்று கூறி ஒதுங்காமல் ஈழத்தமிழர் காரியமாற்ற வேண்டும்
பதிப்பு: 2024 ஜன. 29 21:38
புதுப்பிப்பு: பெப். 14 08:23
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
காசாவில் நடந்து கொண்டிருக்கும் போரில் இழைக்கப்படும் குற்றங்களை இன அழிப்பைத் தடுப்பதற்கான உலகளாவிய நீதிச் சட்டகத்தின் ஊடாக சர்வதேச நீதிமன்றம் கையாள வேண்டும் என்றும் இன அழிப்பில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பது விசாரிக்கப்படவேண்டியது என்றும் தென்னாபிரிக்கா முன்வைத்த வழக்கின் நியாயாதிக்கம் நம்பத்தகுந்ததாக இருப்பதாகவும் நீதிமன்றம் கருதி, அதன் அடிப்படையில் இடைக்காலத் தடையுத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று சட்ட அறிஞர்களும் மனிதாபிமான சமூகத்தினரும் வரவேற்றுள்ளனர். இஸ்ரேல் தான் செய்வது இன அழிப்பு அல்ல என்று மறுத்துரைத்துள்ளது.
 

பலஸ்தீனத்தில் உடனடி யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவருமாறு பணிக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை மூன்று முறை தனது வீட்டோவைப் பயன்படுத்தித் தடுத்த அமெரிக்காவுக்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத திண்டாட்டத்தை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்

பலஸ்தீனத்தில் உடனடி யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவருமாறு பணிக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை மூன்று முறை தனது வீட்டோவைப் பயன்படுத்தித் தடுத்த அமெரிக்காவுக்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத திண்டாட்டத்தை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

1948 ஆம் ஆண்டு உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட இனஅழிப்புக் குற்றத்துக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற ஐந்து விதமான குற்றங்களை காசாவில் இஸ்ரேலின் படைகள் செய்யாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இஸ்ரேல் அரசுக்குரியது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வாறான குற்றங்கள் எதனையும் இஸ்ரேலின் படைகள் செய்யாது பார்த்துக்கொள்வதற்கு இஸ்ரேல் அரசு கடமைப்பட்டுள்ளது என்றும், இதற்காக இஸ்ரேல் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் அர்த்தமுள்ளவகையில் நடைமுறைப்படுத்தப்படுவதை ஆதாரங்களுடன் ஒரு மாதத்திற்குள் தனது நீதிமன்றின் முன் அறிக்கையிட வேண்டும் என்றும் மட்டுமல்ல குற்றங்கள் தொடர்பான தடயங்கள் எவற்றையும் அழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்றும் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் இஸ்ரேலுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

எனினும் தென்னாபிரிக்கா கோரிய இடைக்காலத் தடை நடவடிக்கையாக உடனடிப் போர் நிறுத்தத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அவ்வாறான உத்தரவைப் பிறப்பிபதற்கான பொருத்தமான இடம் ஐ. நா. பாதுகாப்புச்சபை என்று நீதிபதிகள் கருதியிருப்பதாகவும், சட்டரீதியான விடயத்தை மட்டுமே அவர்கள் கையாண்டிருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும், இஸ்ரேல் தனது வழக்காடலில் இன அழிப்புச் சட்டகத்துக்குள் காசா விடயம் அணுகப்படக் கூடாது என்று முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல், நம்பகமான குற்றச்சாட்டாக தென்னாபிரிக்கா முன்வைத்துள்ள வழக்கை இன அழிப்பு என்ற கண்ணோட்டத்தில் அணுக முடிவெடுத்தமையே இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்டுள்ள பெரிய எச்சரிக்கை என்று சர்வதேச சட்டவல்லுநர்களும் அரசியல் அவதானிகளும் கருதுகின்றனர்.

அதேவேளை, இஸ்ரேலுக்கு தொடர்ந்து உதவும் நாடுகளுக்கும் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது. 1948 இன அழிப்புச் சட்டகத்தின் படி இன அழிப்பு செய்வது மட்டுமல்ல அதற்கு உடந்தையாக இருப்பதும் அதற்கு நிகரான சர்வதேசக் குற்றமாகும்.

அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் இன அழிப்புக்கு உடந்தைக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறது என்ற ஒரு வழக்கு அமெரிக்காவிலும் தொடரப்பட்டுள்ள இத்தருணத்தில் வெளியாகியுள்ள உலக நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவும் இன அழிப்புச் சட்டகத்தின் ஊடாக தொடர்ந்தும் இஸ்ரேல் விசாரணைக்கு உள்ளாக இருப்பதும் பல தாக்கங்களை எழுப்பப் போகின்றன. உடந்தைக் குற்றம் தொடர்பாகவும் தனிவேறான வழக்குகள் சர்வதேச நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலைப் போல இலங்கை பலமுள்ள நாடு அல்ல. மிகச் சிறிய நாடான அதுவும் பொருளாதாரப் பலவீனமுள்ள இலங்கை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சூழல் தோன்றினால் ஈழத்தமிழர் விவகாரத்துக்கான அரசியற் தீர்வும் விரைந்து எட்டப்படும் நிலை நிச்சயம் உருவாகும்

பதினேழு நீதிபதிகளில் பதினைந்து நீதிபதிகள் தீர்ப்பில் வழங்கப்பட்ட பல விடயங்களில் ஒருமிதித்த குரலில் செயற்பட்டிருக்கின்றனர். இந்தப் பதினேழுபேரில் இஸ்ரேல் நியமித்த ஒரு நீதிபதி அடங்கலாக மேற்கு நாடுகள் நியமித்த நீதிபதிகளும் உள்ளடங்குகின்றனர். இந்த இடைக்காலத் தீர்ப்புக்குத் தலைமை தாங்கிய நீதிபதி ஒரு அமெரிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காசாவில் நடப்பது இன அழிப்பு என குற்றம் சுமத்திக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி தென்னாபிரிக்க அரசு தாக்கல் செய்த மனு மீதான முதற்கட்ட விசாரணை இந்த ஜனவரி மாதம் பதினொராம் பன்னிரெண்டாம் திகதிகளில் நெதர்லாந்து நாட்டில் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை பற்றிய இடைக்காலத் தீர்ப்பு சென்ற 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

இடைக்காலத் தீர்ப்பில் உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவில்லை. ஆனாலும் ஒரு மாதத்திற்குள் காசாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உயிரிழப்புகள், அழிவுகளைத் தவிர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் இஸ்ரேல் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் முக்கியமான தடையங்களை அழிப்பதற்கான முயற்சிகள் எதனையும் முன்னெடுக்கக் கூடாது என்றும் உத்தரவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு மாததிற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்குமானால் இஸ்ரேல் அரசுக்கு மேலும் ஆபத்துக்கள் நேரலாம் என்ற எச்சரிக்கைத் தொனி சர்வதேச நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத் தீர்ப்பு சுமார் நாற்பத்து ஐந்து நிமிடம் வாசிக்கப்பட்டது. இத் தீர்ப்பை ஏற்க முடியாதென இஸ்;ரேல் உடனடியாக நிராகரித்துள்ளது. ஆனாலும் விசாரணை நடைபெறும் காலத்தில் இஸ்ரேல் தொடரும் முயற்சிகளை ஒரு மாதத்திற்குள் அறிக்கையிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதன் மூலம், அக் குற்றங்கள் போர்க் குற்றங்களாகப் பார்க்கப்படாமல் இன அழிப்புக் குற்றங்களாகப் பார்க்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை நீதிமன்றம் ஒத்துக் கொண்டுள்ளது.

இத் தீர்ப்பை ஏற்க முடியாதெனவும் தாங்கள் இனஅழிப்புச் செய்யவில்லை என்று கூறிய அதேவேளை சர்வதேசச் சட்டத்துக்குத் தாங்கள் மதிப்பளிப்பதாகவும இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு கூறியநிலை இஸ்ரேல் எதிர்கொள்ளும் இரட்டை நிலையை வெளிப்படுத்தியுள்ளது. தாங்கள் இன அழிப்புச் செய்யவில்லை என்றும் காமாஸ் என்ற பயங்கரவாதக் குழுவே இனஅழிப்புச் செய்வதாகவும் அவர் வியாக்கியானம் செய்துள்ளார்.

தென்னாபிரிக்கா மனுத்தாக்கல் செய்தபோது அதனை நிராகரித்திருந்த இஸ்ரேல் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் நாள் சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்று தனது தரப்பு நியாயங்களை முன்வைத்திருந்தது. இதனைப் போலவே ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தையும் அதை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

உயிரிழப்புகள் காசாவில் நாளுக்கு நாள் அதிகரித்து போரும் தொடருமானால், உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் தீர்மானம் முன்னெடுக்கப்படவேண்டிய சூழல் ஏற்படும்.

இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடர்ந்துள்ள இன அழிப்புத் தொடர்பான வழக்கு உலக நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

காசாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் போல 2009 இல் ஈழத்தமிழர் மீது இலங்கை அரசு நடத்திய போர் இன அழிப்புக்கானது. ஆகவே இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடுத்தது போன்று சர்வதேச நீதிமன்றத்திடம் முன்னெடுக்க ஏதேனும் ஒரு நாடு முன்வரவேண்டும்.

அதற்கான வியூகங்களை ஈழத்தமிழ் தரப்பு நன்கு திட்டமிட்டு வகுக்க வேண்டும். வீற்றோ அதிகாரங்கள் தடுக்கும் என்று கூறி ஒதுங்காமல் விரைவாகக் காரியமாற்ற வேண்டிய காலமிது.

இஸ்ரேலைப் போல இலங்கை பலமுள்ள நாடு அல்ல. மிகச் சிறிய நாடான அதுவும் பொருளாதாரப் பலவீனமுள்ள இலங்கை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சூழல் தோன்றினால், ஈழத்தமிழர் விவகாரத்துக்கான அரசியற் தீர்வும் விரைந்து எட்டப்படும் நிலை நிச்சயம் உருவாகும்.