ஆனாலும் அதனைக்கூட செய்யாமல், அதற்கான முயற்சிகளைக் கூட எடுக்காமல் முன்னைய அரசாங்கங்கள் எவ்வாறு செயற்பட்டதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையை அநுர அரசாங்கம் கடந்த ஒரு வருடமாகக் கையாண்டு வருகின்றது. இது டில்லிக்கும் தெரியும்.
இப் பின்னணியில் தான் கடந்த நவம்பர் மாத இறுதியில் டித்வா புயல் ஏற்பட்டு இலங்கைத்தீவில் பெரும் உயிரழிப்புகளும் பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டன.
இதனைப் பயன்படுத்தி இந்தியா உடனடி உதவிகளை செய்துள்ளது. அமெரிக்காவும் நிவாரணங்களை வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளும் உதவி செய்திருந்தாலும் இந்திய உதவி என்பது இலங்கைக்குப் பெரும் ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது.
முதற் பொறுப்பாளி (First Responder) என்ற அடைமொழியுடன் உடனடியாக இலங்கைக்கு வந்து ஒப்பரேசன் சகர் சிந்து (Operation Sagar Bandhu) என்ற பெயரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா ஈடுபட்டது.
இந்திய உதவிகளின் பின்னால் அமெரிக்க செல்வாக்கு அல்லது அமெரிக்க ஆதரவு இல்லாமலில்லை. இச் சூழலில் தான் சீனா, இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் என்ற ஒரு திட்டத்தை வெளியிட்டிருக்கிறது.
ஆனாலும், அநுர அரசாங்கத்தைப் பொறுத்தவரை சீன உதவி முக்கியமானது என்று கருதினாலும், அமெரிக்க - இந்திய உதவிகள் உள்ளூர் அரசியல் நிலைமைகளை சமாளிக்க அவசியம் தேவை என்பதை முன் நிறுத்திச் செயற்படுகிறார்.
உள்ளூர் அரசியல் நிலைமை என்பது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு மாத்திரமல்ல, ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் இருந்து மற்றாக நீக்கம் செய்ய குறிப்பாக மீள் நல்லிணக்கம் என்ற சொல்லாடலைக் கூட தவிர்ப்பதற்கான பின்னணியில் அமெரிக்க இந்திய உதவிகள் தேவை என்ற நிலைப்பாடு அநுர அரசாங்கத்துக்கு உண்டு. நம்பிக்கையும் உண்டு.
இந்த நிலைப்பாட்டையே ரணில், மகிந்த, கோட்டாபய ராஜபக்ச, சந்திரிகா ஆகியோரும் முன் நிறுத்தியிருந்தனர்.
ஆனால், அநுர, அதனை முன் நிறுத்தியிருப்பதன் பின்னணி என்பது, ஈழத்தமிழர் விவகாரத்தை தனது பதவிக் காலத்திலேயே உள்ளூர் விவகாரமாக மாற்றி, அந்த விவகாரத்தில் இருந்து முற்றாக அமெரிக்க - இந்திய அரசுகளின் அழுத்தங்களை தவிர்ப்பது பிரதான நோக்கமாக உள்ளது.
இது தங்கள் பிரதான அணுகுமுறை என்ற கோணத்தில், ரில்வின் சில்வா ஜேவிபியின் தேசிய சபைக் கூட்டத்தில் பல தடவைகள் சொல்லியிருக்கிறார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் கொழும்புக்கு வந்த போது அநுரவை சந்தித்தார். அப்போது டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளை ஈடு செய்ய இந்திய வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அநுர, இலங்கைத்தீவின் பொருளாதார நிலைமைகள் பற்றியும் விளக்கிக் கூறியிருந்தார்.
இந்த இடத்திலேதான். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த பத்து பில்லியன்கள் தேவை எனவும், உடனடியாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என்ற தொனியிலும், ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, டித்வா புயல் அழிவுகளினால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் - அதிக நிதி இழப்புகள் பற்றி பிரதமர் ஹரிணி ஜெய்சங்கரிடம் எடுத்து விளக்கியுள்ளார்.
ஆனால், இலங்கைக்கான உதவிகள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பான அதிகாரபூர்வமான உரையாடலில், 13 பற்றியோ மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றியோ எதுவும் பேசப்படவில்லை என்றே உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
பரிமாறப்பட்ட செயற்திட்ட அறிக்கை ஒன்றிலும் 13 பற்றி இல்லை என்றே உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்பது இந்தியாவின் மென் போக்கான அழுத்தம். ஆனாலும், தமது தேவைகளை இலங்கை பூர்த்தி செய்தால் போதும் என்பது இந்திய அரசின் பிரதான நிலைப்பாடு.
இதற்காகவே இலங்கையின் இறைமையில் இந்தியா தலையிடாது என்ற வார்த்தையை டில்லி அடிக்கடி பிரயோகித்து வருவதை அவதானிக்க முடியும். ஆகவே, ஈழத்தமிழர் விவகாரம் என்பது இந்தியாவுக்குப் பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் ஆகிவிட்டது.
இப் பின்புலத்தில்தான், டித்வா புயலினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உதவிகளை வழங்குதல் என்ற பெயரில், முழுமையாக இலங்கையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது இந்தியா என்ற அவதானிப்புகள் சிங்கள அரசியல் மட்டங்களில் உண்டு.
அதேநேரம், தமிழ்த் தேசியக் கட்சிகளை சந்தித்தபோது 13 ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் என்றெல்லாம் பேசியிருந்தாலும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் பலவீனம், ஒருமித்த செயற்பாடு அற்ற காரண காரியங்களினால், அநுர அரசாங்கத்திற்கு உதவி வழங்கி, தமது நோக்கத்தை நிறைவேற்றுதல் என்ற கோணத்தில் ஜெய்சங்கர் தனது கொழும்பு பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.
ஏறத்தாள கடந்த பத்து வருடங்களில் 14 தடவைகள் கொழும்புக்கு வருகை தந்த ஜெய்சங்கர், இந்தோ பசுபிக் பிராந்திய விவாரத்தில் இலங்கை எந்த வகையிலும் இந்திய நலன்களுக்கு ஏற்ற முறையில் ஆதரவு வழங்க வேண்டும் என்பதும், சீனாவின் பொருளாதார உதவிகளை இலங்கை பெற்றாலும், பிராந்திய விவகாரத்தில் அதுவும் இராணுவ செயற்பாட்டு முறைகளில் இலங்கை, இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கம் பிரதானமாக அமைந்துள்ளது.
அதேநேரம், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில், பாதுகாப்பான கடல் வழித்தடங்கள், வர்த்தகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், போன்ற விவகாரங்களில் இலங்கை அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் உண்டு. அதற்கான பேச்சுக்களும் நடக்கின்றன.
டித்வா புயலுக்குப் பின்னர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அநுரவை சந்தித்து பேசியிருக்கிறார்.
அமெரிக்க உதவிகள் மற்றும் அமெரிக்க விமானம் யாழ் பலாலி விமானத் தளத்தில் தரையிறங்கி நிவாரண பொருட்களை கையளித்தமை உள்ளிட்ட விவகாரங்கள், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஸ்திரத்தன்மைக்கு ஏற்றதான அணுகுமுறைகள் என்பதை அமெரிக்கா அநுரவுக்கு உணர்த்தியிருக்கிறது.
அத்துடன், பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் தடுப்பு, பேரிடர் நிவாரணம் போன்ற செயற்பாடுகளில் இலங்கை அமெரிக்காவுடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்றும் அநுரவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதவும் வகையில் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல், மற்றும் வர்த்தக உறவுகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது,
இப் பின்னணியில், 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப சீனாவின் முழுமையான ஒத்துழைப்பு' என்ற வாசகங்களுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், தன்னாட்சி பிராந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வோங் யுன்சங் (Wang Junzheng) உள்ளிட்ட சீனத் தூதுக் குழு அநுரவை சந்தித்திருக்கிறது.
ஆனாலும், அநுரவைப் பொறுத்தவரை தற்போதைக்கு அமெரிக்க - இந்திய சார்புத் தன்மையுடன் செயற்பட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை நோக்கிய அமெரிக்க வியூகங்கள் இந்தியாவுக்கு சிறிய எச்சரிக்கையாக இருந்தாலும், சீன இராணுவ ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கிலான இந்தோ பசுபிக் பிராந்திய விவகாரத்தில், அமெரிக்கா இந்தியாவுடன் விரும்பியோ விரும்பாமலோ இணைந்து செய்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உண்டு என்பது புதுடில்லிக்கு ஆழமாக தெரியும்.
அதன் பின்னணியில் அமெரிக்காவைவிடவும் சீனா ஆதிக்கம் இலங்கையில் வேரூன்றிவிடக் கூடாது என்ற இலக்கு இந்தியாவுக்குப் பிரதானமானது. அதற்காக என்ன விலைகொடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே, டித்வா புயல் பாதிப்புகளுக்காக இலங்கைக்கு.4,032 கோடி இந்திய ரூபாவை நிவாரணமாக ஜெய்சங்கர் கொழும்பில் அறிவித்திருக்கிறார். இதற்கு அநுர மனதார நன்றியும் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் 4032 கோடியில், 895 கோடி இந்திய ரூபா இலங்கைக்கு மானியமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த தொகையை இலங்கை மீள செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மீதி 3,133 கோடி இந்திய ரூபா இலகு கடனாக வழங்கப்படுகிறது.
ஆகவே, அநுர அரசரங்கம், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது என்று கூறும் அதேநேரம், அமெரிக்க செல்வாக்கும் இலங்கை மீது அதிகரித்துள்ளது எனவும் யாரும் கூறினால், அதில் மாற்றுக் கருத்தில்லை.
அதேநேரம், ரசிய - இந்திய உறவு, இந்திய - சீன வர்த்தகம் போன்ற நகர்வுகளில் அமெரிக்கா, இந்தியாவுடன் முரண்படுகிறது என்பதும், அமெரிக்காவுடனான இந்திய வெளியுறவுக் கொள்கையில், புதுடில்லி இரட்டைத் தன்மையை பின்பற்றி வருவதும், அநுரவுக்குச் சாதகமான ஒன்று.
இதனை அவதானித்த நிலையில் தான் அநுர, அமெரிக்க - இந்திய அரசுகளை கையாளுகிறார் என்பதையும் இங்கே அவதானிக்க வேண்டும். இது ரணில் விக்கிரமசிங்கவின் உத்தி எனலாம்.
இப் பின்னணியில்தான், 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற தமிழ்த்தேசியக் கட்சிகளின் கோரிக்கைகளை இந்தியா ஏற்றிருந்தாலும், அநுர கூறுகின்ற காரண காரியங்களையும் இந்தியா நம்புகின்றது. அல்லது நம்புவது போன்ற காண்பித்து தமது புவிசார் நலன்களை இந்தியா நிறைவேற்றுகின்றது எனவும் கூறலாம்.
அதாவது, தேர்தலை நடத்த நிதியில்லை என்பதும் புதிய அரசியல் யாப்பில் அதிகாரப்பரவலாக்கம் என்ற அநுரவின் சொல்லாடல்களையும் இந்தியா மெருகூட்டிப் பார்க்கிறது. நம்புகிறது.
இலங்கை அரசு கூறுகின்ற அத்தனை விடயங்களையும் சர்வதேச அரசுகள் நிச்சயமாகச் செய்யக் கூடிய சந்தர்ப்பங்களே அதிகம். அதனையே கடந்த 16 வருடங்களில் செய்துமிருக்கின்றன.
இவை, 2009 மே மாதத்துக்குப் பின்னரான 16 வருடங்களில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் நேரடியாகக் கண்டு வரும் அனுபவங்கள். ஆனால் பட்டறிவு இதுவரை ஏற்படவில்லை.
அதேநேரம், ரணில் - மகிந்த அணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கம் தற்போதைக்கு அமெரிக்க - இந்திய அரசுகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை..
