வடக்கு கிழக்கு

தமிழர் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்படும் சதிக் கோட்பாடுகள்

கத்தோலிக்க திருஅவையின் சமயத்துக்கு அப்பாலான ஈழத்தமிழர் அரசியல் விடுதலைப் பணி
பதிப்பு: 2026 மே 14 18:24
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 14 19:28
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#tamils
#mannar
#bishop
#house
தனிப்பட்ட உள்ளக அரசியல் (Internal Politics) நோக்கங்களுக்காக திரு அவையின் அதிகாரத்தின் மீது அவதூறுகளை பரப்பி, அதனை இழிவுபடுத்த முற்படுபவர்கள், ஒட்டுமொத்த கத்தோலிக்க திருஅவை கட்டமைப்பையே சிதைக்கிறார்கள் என்பதை எச்சரிக்கையோடு நோக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குறிப்பாக, வடக்கு கிழக்கு தமிழ்க் கத்தோலிக்க திருஅவை சமயப் பணிகளைக் கடந்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை சமூக விவகாரங்களில் தேசிய - சர்வதேச மட்டத்தில் செயற்பட்டு வரும் பின்னணியில், மன்னார் மறை மாவட்டத்துக்குப் பெரும் பங்கு உண்டு.


 

1970 களின் பிற்பகுதியில் இருந்து, சமயப் பணி எல்லையை கடந்து, ஈழத்தமிழர்களின் இருப்பு மற்றும் அரசியல் விடுதலை போராட்டத்தின் ஒரு பிரிக்க முடியாத வரலாற்றுப் பங்காளியாக வடக்கு கிழக்குத் திருஅவை விளங்குகின்றது

தனிநபர் தாக்குதல்கள் ஊடாக ஒரு மறை மாவட்டத்தின் ஒட்டுமொத்த சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துவது, விமர்சனங்கள் அல்ல. மாறாக அவை தனிப்பட்ட விருப்பங்களே.

திருஅவையின் படிநிலை அமைப்பு (Hierarchy) என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, அது இயேசுவின் போதனையின் அன்பினால் உருவானது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை லியோ, "திருஅவை என்பது பலவீனங்களும் குறைபாடுகளும் உள்ள மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகமே தவிர, அது மனிதர்களின் குறைகளால் அதன் புனிதத் தன்மையை இழந்துவிடாது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வத்திக்கான் புனித பேதுரு சதுக்கம் (St. Peter's Square) இடம்பெற்ற வழிபாட்டில் திருத்தந்தை 14 ஆம் லியோ,அதை தெளிவாக விபரித்திருந்தார்.

திருத்தந்தை லியோ சமயப் பணிகளைக் கடந்து, சர்வதேச புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் புதிதாக உருவாகி வரும் குழப்பங்களில் தலையிட்டு சமாதான முயற்சிகளை முன்னெடுத்து வரும் பின்னணியில், வடக்கு கிழக்கு தமிழ் கத்தோலிக்க திருஅவையின் பணி பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

1970 களின் பிற்பகுதியில் இருந்து, சமயப் பணி எல்லையை கடந்து, ஈழத்தமிழர்களின் இருப்பு மற்றும் அரசியல் விடுதலை போராட்டத்தின் ஒரு பிரிக்க முடியாத வரலாற்றுப் பங்காளியாக வடக்கு கிழக்குத் திருஅவை விளங்குகின்றது.

ஈழத் தமிழர்களுக்கு நடந்தது வெறும் பயங்கரவாத எதிர்ப்புப் போர் அல்ல, அது ஓர் இனப்படுகொலை போர் (Genocidal War) என்பதை ஆயர் அமரர் இராயப்பு ஜோசப், ஐ நா மற்றும் சர்வதேச சமூகத்திற்கு பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

தமிழ் மக்களின் கூட்டுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் தீர்வை ஆயர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஆயர் இராயப்பு ஜோசப். ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் ஓர் “பாடப் புத்தகம்”.

அதாவது, ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றை அடுத்த தலைமுறை எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயரின் வாழ்வும், துணிச்சலான செயற்பாடுகளும் காரண - காரியம் என்பதுதான் இதன் பொருள்.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம், சர்வதேச இராஜதந்திரம், மனித உரிமை ஆவணப்படுத்தல், தார்மீகத் தலைமைத்துவம் ஆகியவற்றின் மொத்தத் திரட்டு என்பதையும் “பாடப் புத்தகம்” என்பது குறித்து நிற்கிறது.

இந்த நிலையில், தமிழர் பிரதேசங்களில் விதைக்கப்பட்ட பல சதிக் கோட்பாடுகள், உள்ளக முரண்பாடுகள் - மோதல் போன்றவற்றை தோற்றுவித்து, தமிழர்களின் நியாயமான அரசியல் விடுதலை பற்றிய மையக் கோட்பாடுகளை (Core Principles) திசை திருப்பி வருகின்றன.

இத் திசைதிருப்பல் நகர்வுகளின் தீய நோக்கங்களை கிறிஸ்தவர்கள் மாத்திரமல்ல, தமிழர்கள் அனைவருமே நன்கு அறிவர்.

தமிழர் பிரதேசங்களில் விதைக்கப்பட்ட பல சதிக் கோட்பாடுகள், உள்ளக முரண்பாடுகள் - மோதல் போன்றவற்றை தோற்றுவித்து, தமிழர்களின் நியாயமான அரசியல் விடுதலை பற்றிய மையக் கோட்பாடுகளை (Core Principles) திசை திருப்பி வருகின்றன

அதேநேரம், அருட்பணியாளர்களின் ஒழுக்கம் மற்றும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் உரிமை கிறிஸ்தவ மக்களுக்கு உண்டு. ஆனால், அவமதிப்பு, சேறு பூசும் செயற்பாடுகளை திருஅவை ஒருபோதும், அனுமதிக்காது.

முறையிடும் முறைமை (Complaints System) குறித்து விவிலியம் மற்றும் திருஅவை சட்டங்களின் அடிப்படையில் விரிவான விளக்கங்கள் உண்டு. அதன் பிரகாரம் தவறுகளை சுட்டிக்காட்ட முடியும்.

அருட்பணியாளர்கள் அல்லது திருஅவை பொறுப்பாளர்கள் ஒழுக்கக் குறைபாடுகளில் ஈடுபடும் போது, அவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றி புனித பவுல் திமோத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

"மூப்பருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் முறைப்பாட்டை இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருந்தாலன்றி ஏற்றுக்கொள்ளாதே. பாவம் செய்பவர்களை எல்லார் முன்னிலையிலும் கடிந்து கொள்; அப்போது மற்றவர்களுக்கும் அச்சம் உண்டாகும்." (1 திமோத்தேயு 5:19

மத்தேயு 18:15 இன் படி, முதலில் சம்பந்தப்பட்டவரிடம் தனிப்பட்ட முறையில் பேசிப் பார்ப்பதே கிறிஸ்தவ அறமாகும். கண்ணியம், திருத்தம் என்பது அன்போடும், ஒருவரை நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடும் இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் விமர்சனமாகவோ அல்லது வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாகவோ, பழிவாங்கும் செயற்பாடாகவோ இருக்கக்கூடாது.

கத்தோலிக்க திருஅவை, அருட்பணியாளர்களுக்கான ஒழுக்க முறைகள் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் உள்ள மறை மாவட்டங்களில் தத்தமது ஆயர்களின் வழிகாட்டலின் கீழ் சில பொதுவான - குறிப்பிட்ட ஒழுக்கக் கோவைகள் (Code of Canon Law) கையாளப்பட்டு வருகிறது.

அவை பின்வருமாறு --

1) அருட்பணியாளர்கள் தங்களுக்குரிய தனித்துவமான ஆடைகளை (Clerical Dress) அணிந்து, தமது நிலைக்குப் பொருத்தமற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

2) ஆலய நிதிகள் - நன்கொடைகள் விடயத்தில் கணக்கு வழக்குகளை முறையாகப் பேணுவதும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையுடன் இருப்பதும் மிக முக்கியமான ஒழுக்க விதியாகும்.

3) சிறுவர்கள், பெண்களுடனான தொடர்புகளில் எச்சரிக்கையாகவும், எவ்வித துஷ்பிரயோகத்திற்கும் இடமளிக்காத வகையிலும் வரையறைகளை (Boundaries) பேண வேண்டும்.

4) சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்ந்து குரல் கொடுப்பது சமகாலச் சூழலில் அவசியமாகக் கருதப்படுகிறது.

ஆகவே, ஏதேனும் தீவிரமான ஒழுக்கக் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதற்கு முன், அந்தந்த மறை மாவட்டத்தின் ஆயருக்கு (Bishop) ஆதாரங்களுடன் முறையிடுவதே திருஅவையின் சட்டப்படியான - முறையான ஏற்பாடாகும் (Legal – Formal Arrangement)

இது, தவறு செய்யும் அருட்பணியாளர் பற்றி சமூக ஊடகங்களில் நேரடியாகப் பதிவிடுவதற்கு முன்பாக, திருஅவை அங்கீகரிக்கும் நாகரிகமான - நீதியான வழிமுறைகள் தான் இவை.

1981 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மன்னார் மறை மாவட்டத்தின் மாண்பும், வரலாறும், திருஅவை பணிகளும். சமய செயல்முறைகளைக் கடந்து, ஈழத்தமிழர் வரலாற்றில் தடம் பதித்து உள்ளது என்பதை எவரும் மறந்துவிட முடியாது

ஒவ்வொரு அருட்பணியாளர்களுக்கும் ஆயர் தான், பொறுப்பானவர்.

ஆகவே, வெறும் குற்றச்சாட்டாக இல்லாமல், சாட்சியங்கள் அல்லது ஆவணங்கள் இருப்பின் அவற்றை ஆயரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆயரும் தவறு செய்கிறார் அல்லது பக்கச் சார்புடன் செயற்படுகிறார் என்று உணர்ந்தால், ஆதாரங்களுடன், திருத்தத் தந்தையின் கொழும்பு வதிவிட பிரதிநிதியிடம் எழுத்து மூலம் முறையிட முடியும். அதற்கான ஏற்பாடுகளும் உண்டு.

ஆகவே, கத்தோலிக்க திருஅவை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற நல்ல நோக்கில் செயற்படும் மாற்றுச் சிந்தனை கொண்ட கிறிஸ்தவர்கள், இந்த விடயத்தை பிரதான கருப்பொருளாக ஏற்று திருத்தங்கள் - தவறுகள் தொடர்பான தங்கள் மனுக்களை முன்வைக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடும் போது, திருஅவையின் போதனைகளுக்கும், அருட்பணியாளர் என்ற குருத்துவ நிலைக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் பொறுப்புடன் செயல்படவும் வேண்டும்.

1981 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மன்னார் மறை மாவட்டத்தின் மாண்பும், வரலாறும், திருஅவை பணிகளும். சமய செயல்முறைகளைக் கடந்து, ஈழத்தமிழர் வரலாற்றில் தடம் பதித்து உள்ளது என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

ஒரு சில அருட்பணியாளர்கள் மீதான தனிப்பட்ட குரோதங்களுக்காக கத்தோலிக்க மறை மாவட்டம் ஒன்றின் மீது சேறு பூசி, தரம் இறக்குவது எளிதானது, அது தற்காலிக மனத் திருப்தியைத் தரலாம்.

எனினும், அது இழந்துபோன தமக்கான சுயமரியாதையை மீண்டும் மீட்டுத் தராது என்பதை இங்கே உணர்தல் அவசியம்.

மன்னித்தலும், சகிப்புத்தன்மையும் நிறைந்த, சாதி - சமய வேறுபாடுகள் அற்ற ஒரு புண்ணிய பூமியாக மன்னார் மறைமாவட்டம் திகழ்கிறது.

ஒல்லாந்தர் காலத்தில், கொடூரமான மதத் துன்புறுத்தல்களுக்கு அஞ்சி, மாந்தையில் இருந்து தப்பி ஓடிவந்த கத்தோலிக்க தமிழர்களுக்குப் புகலிடம் வழங்கி, சமத்துவத்தை விதைத்த வரலாற்றுப் பெருமை, மன்னார் நிலத்துக்கு உண்டு என்பதை கருத்தில் கொள்வோம்.