முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், கற்றுத் தரும் பாடம்

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சர்வதேச நீதி

இலங்கை ஒற்றையாட்சி முறைமையை பாதுகாக்கும் உத்தியே உள்ளகப் பொறிமுறை
பதிப்பு: 2026 மே 18 11:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 18 15:48
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#tamils
#un
#sl
உள்ளக பரிகாரங்கள் அனைத்தும் ஏமாற்று வித்தைகள் என்பதை உணர்ந்து, தமக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு சர்வதேசப் பொறிமுறையையும் உலகளாவிய நீதியையுமே, ஈழத்தமிழர்கள் இன்று முதன்மை நியாயமாக முன்வைக்கின்றனர். இந்த நியாயத்தின் பின்னால் தட்டிக்கழிக்க முடியாத புவிசார் அரசியல் உண்மைகளும், நீதிக்கான தர்க்கங்களும் பலமாக உண்டு. இந்த அரசியல் யதார்த்தத்தையே முள்ளிவாய்க்காலின் உதிரம் தோய்ந்த நினைவுகள் தமிழர்களுக்குக் கோட்பாட்டுப் படிப்பினையாக கற்பிதம் செய்துள்ளன.
 
1980 களில் இருந்து, இலங்கையின் உள்நாட்டு பரிகாரங்கள் அனைத்தும் முற்றாகத் தோல்வியடைந்த சூழலில், 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த 2026 ஆம் ஆண்டு வரையும் நிறைவேற்றப்பட்ட ஐ நா மனித உரிமை சபை தீர்மானங்கள் கூட உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை

1980 களில் இருந்து, இலங்கையின் உள்நாட்டுப் பரிகாரங்கள் அனைத்தும் முற்றாகத் தோல்வியடைந்த சூழலில், 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த 2026 ஆம் ஆண்டு வரையும் நிறைவேற்றப்பட்ட ஐ நா மனித உரிமை சபை தீர்மானங்கள் கூட உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை.

இப் பின்னணியில் தான், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம் போன்ற பொறிமுறைகள் ஊடாக மட்டுமே தமக்கான நீதியையும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வையும் பெற முடியும் என்ற பலமான முடிவுக்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு உட்பட நீதித்துறை, பொலிஸ் மற்றும் சட்டக் கட்டமைப்பு எல்லாம் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக அல்ல.

மாறாகக் குற்றமிழைத்த இலங்கை அரச தரப்பு என்ற கட்டமைப்பை காப்பாற்றுவதற்கான "காலத்தை இழுத்தடிக்கும் உத்தி" (Delaying Tactic) என்பது 40 வருட கால பட்டறிவு.

1983 ஆம் ஆண்டில் இருந்து அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் - அதன் அறிக்கைகள், ஏமாறிய வரலாற்றை நிரூபிக்கிறது.

இலங்கைத் தேசிய பாதுகாப்பு - பேரினவாத அரசியல் காரணங்களை முன்னிறுத்தி குற்றவாளி என்று சுட்டிக்காட்டப்பட்ட இராணுவத்துக்கும், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பலருக்கும் பதவி உயர்வுகளும் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டன.

ஆணைக்குழுக்கள் பற்றிய வரலாற்றை விரிவாக அவதானித்தால்

1) இனக் கலவரத்திற்கான ஜனாதிபதி உண்மை ஆணைக்குழு (1983 Presidential Truth Commission) - கறுப்பு ஜூலை வன்முறைகள் மற்றும் 1981-1984 காலப்பகுதியில் மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், சொத்தழிவுகள் குறித்து ஆராயவும், இழப்பீடுகளைப் பரிந்துரைக்கவும் நியமிக்கப்பட்டது.

2) காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய மாகாண ஆணைக்குழுக்கள் (1994 Three Regional Commissions) - ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில், வடக்கு - கிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களிலும் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிக்க மூன்று பிராந்திய ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

3) அகில இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழு (1998 All-Island Commission) - முன்னைய மாகாண ஆணைக்குழுக்களின் தொடர்ச்சியாக, இலங்கைத்தீவு முழுவதிலும் விசாரணைகளை நடத்த இது நிறுவப்பட்டது.

4) மகாநாம திலகரத்ன ஆணைக்குழு (2006 Tillekeratne Commission) - கிழக்கு மாகாணம் மூதூர் பகுதியில் 'அக்சன் பாம்' (Action Faim) தொண்டு நிறுவனத்தின் 17 தமிழ் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் படுகொலை குறித்து ஆராய அமைக்கப்பட்டது.

5) உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரமுகர்கள் அடங்கிய ஆணைக்குழு (2006 Udalagama Commission & IIGEP): நீதிபதி உடலகம தலைமையில் 16 முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவைக் கண்காணிக்க சர்வதேச சுயாதீன பிரமுகர்கள் குழு (IIGEP) நியமிக்கப்பட்டது. ஆனால், அரசாங்கத்தின் தலையீடு காரணமாக IIGEP தனது பணியை இடைநடுவில் நிறுத்தி வெளியேறியது.

6) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (2010 LLRC) - போர் முடிவடைந்த பின்னர், சர்வதேச விசாரணையை தடுப்பதற்காக மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் இது அமைக்கப்பட்டது.

7) பரணகம ஆணைக்குழு (2013 Paranagama Commission) - போர்க் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் போர் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க இது அமைக்கப்பட்டது.

இந்த ஏழு ஆணைக்குழுக்களிலும் LLRC எனப்படும் ஆணைக்குழு மாத்திரமே இறுதி அறிக்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட சில அநீதிகளை மறைமுகமாகவும் பகுதியளவிலும் ஒப்புக்கொண்டது.

LLRC ஆணைக்குழுவும் மகிந்த குடும்பத்தையும் அவரது ஆதரவாளர்கள், இராணுவ அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டது என கூறப்பட்டாலும். ஓரளவுக்கு மனசாட்சியோடு இறங்கியிருந்தது.

இந்த ஆணைக்குழுக்களில், 2006 ஆம் ஆண்டு மஹிந்த நியமித்த "உடலகம ஆணைக்குழுவை" (Udalagama Commission) கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன பிரமுகர்கள் குழுவின் (IIGEP - International Independent Group of Eminent Persons) தலைவராக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி. என். பகவதி (P. N. Bhagwati) பணியாற்றினார்.

ஆனால், மகிந்தவின் தலையீடு, அச்சுறுத்தல் காரணமாக பகவதி அப் பணியில் இருந்து வெளியேறினார். குறிப்பாக பாதுகாப்புத்துறை இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நேரடியாகத் தலையிட்டதாக பகவதி குற்றம் சுமத்தினார்.

சாட்சியம் வழங்க வந்த தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளில் தலையிட்டதால், இது ஒரு "நலன் முரண்" (Conflict of Interest) என்று நீதிபதி பகவதி அப்போது சுட்டிக்காட்டினார்.

இதனால் பகவதி மீது அரசியல் குற்றச்சாட்டுக்களை மகிந்த அரசாங்கம் சுமத்தியது.

நீதிபதி பகவதியின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெளியேற்றம், "இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது" என்ற ஈழத்தமிழர்களின் வாதத்திற்கு 2008 ஆம் ஆண்டிலேயே சர்வதேச அரங்கில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

2009 ஆம் ஆண்டு இன அழிப்பு போர், சாட்சியங்கள் எதுவும் இன்றி நடைபெற்றது. 2008 இல் இந்திய முன்னாள் நீதியரசர் பகவதி, இலங்கை விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பின்னர் தான், கிளிநொச்சியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா அலுவலகம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டன

ஆனால், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் இறுதிப் போர் சாட்சியங்கள் எதுவும் இன்றி நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு பகவதி இந்த ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பின்னர் தான், கிளிநொச்சியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா அலுவலகம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டன.

அப்போது சம்பந்தன் , நாடாளுமன்றத்தில் இது சாட்சியமற்ற போர் என்று கடுமையாக எச்சரித்திருந்தார். ஆனால், இறுதிப் போரின் போது சர்வதேசம், ஒரு கண்டன அறிக்கையோடு மாத்திரம் அமைதியாக இருந்தது.

சர்வதேச பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டு தமிழினப் படுகொலை அரங்கேறிய போது, அமெரிக்காவும் இந்தியாவும் மௌனம் சாதித்ததற்குப் பின்னால் அவர்களுடைய பூகோள அரசியல் - பாதுகாப்பு நலன்கள் (Geopolitical Interests) பதுங்கி இருந்தன:

இந்தியாவின் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் புலிகளை இந்திய தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதியது.

அதேநேரம், இலங்கையில் சீனாவின் உளவுத்துறை மற்றும் இராணுவ ஊடுருவலைத் தடுப்பது என்ற போர்வையில் மகிந்த அரசாங்கத்திற்கு திரைமறைவில் முழுமையான இராணுவ மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்புகளை அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கியது.

தமிழ் நாட்டுத் தமிழ் மக்களின் அழுத்தங்களை சமாளிக்க மாத்திரமே இந்தியா வெளியில் அமைதி காத்தது என்பது பகிரங்கமான உண்மை.

ஆகவே, சர்வதேச சாட்சிகளை வெளியேற்றிவிட்டு, அமெரிக்கா - இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளின் மௌனத்தின் நிழலில் இலங்கை அரசு நடத்திய முள்ளிவாய்க்கால் பேரவலம், ஐநாவின் 2010 ஆம் ஆண்டு நிபுணர் குழு அறிக்கையில் மிகத் தெளிவாகப் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அமைப்புகள் வெளியேற்றப்பட்டதால், 3,30,000 இற்கும் அதிகமான தமிழ் மக்களின் உயிருக்கும் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் போனது" என நிபுணர் குழு அறிக்கையின் பக்கம் ii இல் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இப்பின்னணியில் அநுர அரசாங்கத்தில் மிகத் தீவிரமாக பேசப்படும், உள்நாட்டுப் பொறிமுறைகள் என்பது இந்த உலகப் பெரும் துரோகத்தை மூடிமறைக்கும் கபட நாடகங்களே தவிர வேறில்லை.

இலங்கையின் ஒற்றையாட்சி அரச முறைமையையும் (Unitary State) அது பாதுகாக்கிறது.

ஆகவே, ஐ நா தனது சொந்த அறிக்கைகளின் அடிப்படையிலாவது தமிழர்களுக்கு சர்வதேச நீதியை பெற்றுத் தர வேண்டும் என்ற யதார்த்தம் இன்றைய வரலாற்று முழக்கமாகும்.

ஆனால். அந்த வரலாற்றை ஆவணப்படுத்தி, உயிரோட்டமான ஏற்பாடாக செய்யக் கூடிய ஆற்றல் அற்ற சமூகமாக, தற்போதைய ஈழத்தமிழ் இளம் தலைமுறை மாறி வருகிறது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் இளம் தமிழ் தலைமுறையிடம் கூட அந்த உயிரோட்டம் இருப்பதாக தெரியவில்லை.

ஆகவே, அறிவுசார் கோட்பாடுகளை விடுத்து, வெறும் தற்காலிகக் கவர்ச்சி - உணர்ச்சி அரசியலை மாத்திரம் தாரக மந்திரமாக நம்பும் இளைய தமிழ்த் தலைமுறையின் குறுகிய காலப் பார்வைக்கு, தமிழ்த் தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்களுமே முன்னுதாரணங்களாக நின்று வழிநடத்தி வரும் பிரதான காரண-காரியம் என்றால் அது மிகையாகாது.