
2009 இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியாத நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டதைப் போல தற்போதும் ஈழத்தமிழர் மீதான கட்டமைப்பு இன அழிப்பைத்; தடுத்து நிறுத்த முடியாத நிலையில் தமிழகம் ஒற்றுமையின்றி இருந்த வலுவும் இழந்த நிலையில் இன்னமும் தாழ்ந்து கிடக்கிறது என்று கூர்மை செய்தி இணையத்திற்கு கொழும்பிலிருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் விசனத்தோடு தெரிவித்தார்.
தமிழர் கடல் என்று பெயரளவில் கூறுவதில் பெருமைப்படும் அளவுக்கு விஞ்ஞானபூர்வமாக ஒரு கடற் கொள்கையை வகுக்க முடியாத நிலையில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது.
இந்த நிலை தொடர்ந்தால் ஒரு பெரும் கட்டமைப்பு இன அழிப்பை எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் நிலைகூடத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஏற்படலாம்.
சோழர்களின் கடற்பாய்ச்சலுக்கான சில வருடங்களையும், ஈழத் தமிழரின் கடல் எழுச்சிக்குரிய சில வருடங்களையும் தவிர தமிழர் கடல் சார்ந்த வெளியுறவுக்கொள்கை தமிழகத்திலும் சரி ஈழத்திலும் சரி தமிழர் மையப்பட்டதாக வரலாற்றின் பெரும்பகுதியில் இருக்கவில்லை.
இந்தக் குறையை ஆழமாக விளங்கிய நிலையில் ஓர் அடிப்படைச் சிந்தனை மாற்றம் வராமல், தமிழர்களுக்கான வெளியுறவுக் கொள்கை தென்னாசியப் பிராந்தியத்தில் உருவாகமுடியாது.
பாய்ச்சலும் வேண்டாம் எழுச்சியும் வேண்டாம் என்று இருந்தாலும் கூட தமிழர்கள் தமிழர்களாகத் தமது இருப்பைக் காப்பாற்றுவதற்குக் கூட கடல் சார்ந்த வெளியுறவுக்கொள்கை தேவையாகிறது.
அமெரிக்காவின் பென்ரகன் தனது பசிபிக் கொமாண்ட் என்கிற பிராந்திய இராணுவ வியூகத்தை மே மாதம் 30ம் திகதியோடு இந்தோ-பசிபிக் கொமாண்ட் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டிருக்கிறது.
அதேவேளை, மோடி தலைமையிலான இந்திய அரசோடு தென்னாசியக் கடற்படை விவகாரங்கள் தொடர்பான நெருக்கமான உறவை வளர்ப்பதில் அமெரிக்கா அதீத நாட்டம் காட்டிவருகிறது.
ரசியாவின் இராணுவத் தொழிநுட்பத்தில் தங்கியிருக்கும் இந்திய இராணுவக் கட்டுமானங்களை படிப்படியாக அமெரிக்க இராணுவத் தொழிநுட்பததை வழங்குவதன்மூலம் தனது அரவணைப்புக்குள் கொண்டுவந்து, ஈரானிடமிருந்தும் ரசியாவிடமிருந்தும் இராணுவ மற்றும் பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் இருந்து இந்தியாவைத் தந்திரமாகப் பிரித்தெடுத்து நேட்டோவின் அறிவிக்கப்படாத அங்கத்துவம் போன்ற ஒரு பொறிக்குள் இந்தியாவைக் கொண்டுவருவது அமெரிக்காவின் இராணுவ வியூகம்.

இதற்கான நடைமுறைப் பயிற்சிகளுக்கான களத் துறைமுகமாக திருகோணமலை தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதே இங்குள்ள சூட்சுமம்.
ஏன் திருகோணமலை என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை.
இருந்தாலும் இதற்கான விளக்கத்தை மீண்டும் ஒரு முறை இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கடந்தமாதம் வியட்நாமில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் இந்தியப் பத்திரிகையாளாரான நித்தின் கோகுலே என்பவருக்கு வழங்கிய பேட்டியில் சொல்லியிருந்தார்.முதலாவது தென்கிழக்காசியாவுக்கான இராணுவக் கட்டளை மையம் இலங்கையிலேயே இருந்தது என்பதை அவர் வெளிப்படையாகவே சொன்னதோடு அமெரிக்காவின் இது தொடர்பான சிந்தனை இசைவாக்கத்தையும் பாராட்டும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.
சீனாவுக்கு பொருளாதார உறவுகளின் தேவை அடிப்படையிலேயே அம்பாந்தோட்டை துறைமுகம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அதற்கு எந்த விதமான இராணுவப் பரிமாணமும் இல்லை என்றும் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்று அவர் குறிப்பிட்ட விடயத்துக்கு எதிராக இந்திய மண்ணின் எந்தப்பகுதியும் இலங்கை அரசுக்கு எதிராக எவ்விதத்திலும் பயன்படுத்தப்பட இந்திய அரசு ஒவ்வாதோ, அதேபோல இலங்கை அரசும் இந்திய நலனுக்கு எதிராக இலங்கையின் எப்பாகமும் பயன்படுத்தப்பட ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, சீனாவுடனான நீண்டகால ஒப்பந்தங்களை தான் நினைத்த எக்கணத்திலும் காலாவதியாக்கக்கூடிய வகையிலேயே இந்த உடன்படிக்கைகளை சீன அரசுடன் செய்திருப்பதாகவும் ரணில் குறித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த மாநாட்டுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சரான சுஸ்மா ஸ்வராஜும் சென்றிருந்தார். கடந்த வருடம் இந்த மாநாடு கொழும்பில் நடந்திருந்தது.
இதேவேளை, பல காலமாகப் பிற்போடப்பட்டிருந்த 2+2 என்ற அமெரிக்க இந்திய அமைச்சர்களின் சந்திப்பு செப்ரம்பர் 6ம் திகதி வியாழனன்று இடம்பெற்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சரும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சரும் தனித்தனியாகவும், இந்திய பாதுகாப்பு அமைச்சரும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரும் தனித்தனியாகவும், பின்னர் அனைவரும் கூட்டாகவும் இந்த மாநாட்டில் பல இராணுவ விவகாரங்களில் இணக்கம் கண்டிருக்கிறார்கள். அதில் கடற்படை சார்ந்த விவகாரங்கள் அதிமுக்கியத்துவம் பெறுகின்றன.



கட்சி பேதங்கள் இருந்தாலும் ஒருவர் விட்ட இடத்தில் இருந்து மற்றவர் தொடரும் போக்கையும் இங்கு காணலாம்.
ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் செய்து அழித்த பின்னர் அனுபவம் பெற்ற முப்படை ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், இலங்கைத் தீவின் கேந்திர முக்கியம் கருதி கடற்படையை மேலும் நவீனமயப்படுத்தி இந்து சமுத்திரத்தில் இலங்கைத் தீவை வெளிச்சக்திகளுக்கான ஒரு இராணுவத் தளமாக மாற்றி, இந்தியாவோடு ஏதோ ஒரு வகையில் தன்னையும் சமாந்தரமான நிலையில் இருந்து பேரம் பேசத் தக்க ஒரு சக்தியாக உலக வல்லாதிக்கங்களின் துணையோடு மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கடல் வெளியுறவுக் கொள்கையையே இவர்கள் இருவரும் வலியுறுத்திவந்திருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போரின் பின் தொடர்ந்த கெடுபிடி யுத்தத்தின் போது அணிசேரா நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியிருந்தாலும், சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்தார் இந்திரா காந்தி.
அந்த வெளியுறவுக் கொள்கையை வகுத்தவர் சுதந்திர இந்தியாவின் முதற் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
பிரித்தானியரால் ஆளப்பட்டிருந்தாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் சுதந்திரமடைந்த இந்தியா தனக்கென்ற தனித்துவத்தோடு இயங்க ஆரம்பித்திருந்தது.
மக்கள் சார் இடது சாரியக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவ இந்த அணிசேராக் கொள்கை காரணமாயிருந்தது.
இந்தத் தனித்துவத்துக்கு முதலில் ஆப்பு வைக்க முயன்றவர் மூன்றாம் தலைமுறைக் குடும்பப் பிரதமரான ராஜீவ் காந்தி என்பது வேறு விவகாரம்.
ராஜீவ் காந்தியால் இருந்து செய்து முடிக்க முடியாமற் போன மேற்குச் சார்பு நிலையை இப்போது நரேந்திர மோடி நின்று செய்து முடித்திருக்கிறார்.