இந்தச் சர்வதேச வியூகத்தை ஈழத்தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதை இந்தக் கட்டுரை ஆராய விழைகிறது.
முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட ஜெருசலேம் நகரமே இஸ்ரேலின் தலைநகரம் என்று இஸ்ரேலின் புதிய சட்டம் பறை சாற்றுகிறது.
இவற்றுக்கெல்லாம் இன்னும் ஒரு படி மேலே சென்று சுயநிர்ணய உரிமை என்பது யூதர்களுக்கு மட்டுமே தனித்துவமானது என்றும் அந்தச் சட்டம் வரையறை செய்திருக்கிறது.
யூதர் அல்லாதவர்களுக்கு இஸ்ரேலின் இறைமைக்குட்பட்ட நிலத்தில் சுயநிர்ணய உரிமை இல்லை என்பதே அதன் பொருள்.
உலகெங்கும் வாழும் யூத மக்களின் தேச அரசாக (Nation-State) இஸ்ரேலைப் பிரகடனம் செய்யும் சட்டம் என்று இந்த அடிப்படைச்சட்டத்திற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சர்வதேசச் சட்டங்களுக்கும், மற்றைய நாடுகளின் இறைமைக்கும் முரணான வகையில் அதாவது வேறு நாடுகளின் ஆள்புலங்களுக்குள்ளும் தனது அரசின் இறைமை யூத அரசு என்ற அடிப்படையில் நீண்டிருக்கும் என்பதான தோரணையில் அந்தச் சட்டவாக்கம் வெளிப்பட்டிருக்கிறது.
உலகின் எந்த மூலையிலாயினும் யூதர் அல்லது இஸ்ரேல் குடியுரிமை கொண்டவர்கள் ஆபத்துக்குள்ளாகினால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் இஸ்ரேலிய அரசு ஈடுபடக்கடமையுடையது என்றும் அந்தச் சட்டம் சொல்லிவைத்திருக்கிறது.ஹிட்லரின் நாசி ஜேர்மனியினாலும் ஏனைய சில நாடுகளாலும் யூதர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதை ஈடு செய்வதற்காகவும், அவ்வாறான இன அழிப்பில் இருந்து யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பொறிமுறையாகவும் இரண்டாம் உலகயுத்தத்தின் முடிவில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது.
1948 இல் எழுநூறாயிரம் பாலஸ்தீனியர்களை நாடற்ற அகதிகளாக்கியே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இஸ்ரேலை உருவாக்கியது.
இன்று, 70 வருடங்கள் கழிந்த நிலையில், இஸ்ரேல் வெளிப்படுத்தியிருக்கும் இந்தச் சட்டவாக்கம் எந்த மனுகுல தர்மத்தின் பாற்பட்டது என்ற கேள்விகள் பலமாக எழுப்பப்பட்டிருக்கின்றன.
இந்தக் கேள்விகளை அமெரிக்காவில் வாழும் யூத ரபிகளிற் சிலர் கூட துணிந்து கேட்கின்றனர்.
குறிப்பாக, இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, பல மதத்தினரும் தமது புனித நகராகக் கருதும் ஜெருசலேம் என்ற நகரம் சர்வதேசத்தின் பொறுப்பில் ஒரு பொதுவான நகராகப் பிரகடனப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த முடிவுகளுக்கு மாறாக மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
பாலஸ்தீனியர்கள் தமது தலைநகராகக் கருதும் கிழக்கு ஜெருசலேமும் பின்னாளில் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஒன்றிணைந்த முழுமையான ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் தலைநகர் என்று சட்டவாக்கம் உருவாக்கப்படுவது, பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இரு அரசுகள் என்ற தீர்வை நோக்கிய சர்வதேச அணுகுமுறைக்கே சவால் விட்டிருக்கும் செயல் என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட பல தரப்புகள் கருத்துவெளியிட்டிருக்கின்றன.
யூதர்களுக்கான நாடாக இஸ்ரேல் உருவாகியிருக்கும் அதேவேளை பாலஸ்தீனர்களுக்கென்று ஒரு தனி அரசு உருவாக்கப்படவேண்டும் என்றும் பாலஸ்தீனர்கள் தமக்கான தனித்துவமான சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்றும் ஐ.நாவின் உறுப்புரிமை பெற்ற 193 நாடுகளில் மொத்தம் 134 நாடுகள் அங்கீகரித்திருக்கும் நிலையிலும் இன்னும் முழுமையான தனிநாடாக பாலஸ்தீனம் உருவெடுக்காதவாறு வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா தடுத்துவருவது தெரிந்ததே.

2017 டிசம்பரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெருசலேமுக்கு அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதுவரலாயத்தை மாற்ற இருப்பதாக அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து 2018 மே 14ம் திகதி, குறிப்பாக இஸ்ரேல் அரசு உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தில், அமெரிக்கத் தூதுவராலயம் ஜெருசலேமில் திறந்து வைக்கப்பட்டது.
உலகளாவிய கடும் அதிருப்திக்கும், வெடித்தெழும்பிய பாலஸ்தீனியர்களின் போராட்டங்கள் மீது கனத்த உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்களை நடாத்தியும், இஸ்ரேல் தனது இராணுவ அடக்குமுறையைத் தொடர்ந்தது.
இந்தத் தருணத்திலேயே, பாலஸ்தீனர்களுக்காக பல வருடங்களாக ஆதரவுக் குரல் கொடுத்து, இஸ்ரேல் தொடர்பான ஒருவகைப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்த இந்திய அரசு, தனது கொள்கையை இஸ்ரேல் சார்பு நிலையாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பது நாம் நோக்கவேண்டிய வேதனையான இன்னுமோர் உண்மையாகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2017 இல் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தமையும், 2018 இல் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டமையும் இந்த அடிப்படையிலேயே நடந்தேறின.
20க்கு மேற்பட்டட இராணுவ, பொருளாதார ஒப்பந்தங்களை இந்த இரு நாடுகளும் செய்துகொண்டுள்ளன.
2016 இல் இஸ்ரேலின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் அரைவாசி ஏற்றுமதி இந்தியாவுக்கே சென்றிருக்கிறது என்ற கசப்பான தகவலையும் இங்கு நோக்கவேண்டும்.
இரண்டு நாடுகளும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்குடைய வலதுசாரித் தீவிரவாதத் தலைவர்களால் ஆளப்படுபவை. இந்தப் பின்னணியில் உருவாகியிருக்கும் இராஜதந்திர உறவு பலமான இராணுவ, பொருளாதார உறவாக மாறியிருக்கிறது.
வெறுமனே இனவாத அடிப்படையில் சிந்திக்கும் தலைவர்களைக் கொண்ட நாடுகள் என்பதற்கும் அப்பால், பூகோள அரசியல் மற்றும் இராணுவ நலன்கள் என்பவையே இந்த உறவுப் போக்கைத் தீர்மானித்து வந்துள்ளது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இது அண்மைக்காலத்தில் திடீரென்று நடந்த மாற்றமில்லை என்றாலும். அண்மையில் இது பெரியதோர் இராணுவப் பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும், குறிப்பாக அமெரிக்காவின் வியூகத்திற்குள் இந்தியாவைக் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் ஓர் உத்தி வழியாகப் பயன்படுத்தப்படிருக்கிறது என்பது தெளிவாகிறது.
அமெரிக்காவின் இராணுவ வியூகத்தில் இஸ்ரேலுக்கு இணையாக இந்தியாவும் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.
இலங்கையும் அதே வியூகத்திற்குள்ளேயே உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஈழத்தமிழர் பாரம்பரியத் தாயகத்தின் முக்கிய நகரான திருகோணமலை இந்த வியூகத்தின் பிரதான கடற் தளமாகியிருக்கிறது என்பதையும் கூர்மை இணையம் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரைகளில் தெளிவுபடுத்தியிருந்தது.
ஜப்பானும் இந்த அணுகுமுறையின் மிக முக்கிய பங்குதாரி என்பதும் இங்கு ஒருசேர நோக்கப்படவேண்டியது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடாத்திவந்த போரில் கபீர் ரக போர் விமானங்களையும், சூப்பர் டுவோரா வகைக் கடற்படைக் கலங்களையும் மட்டுமல்ல, புலனாய்வு தொழிநுட்ப விடயங்களிலும் தொடர்ச்சியாக இஸ்ரேல் உதவியளித்து வந்த வரலாற்றையும் இங்கு நினைவிற் கொள்ளவேண்டும். (எவ்வாறு இலங்கை அரசுக்கு இஸ்ரேல் போர்க்காலத்தில் உதவி புரிந்தது என்பது பற்றி மேலதிக தரவுகளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அல்கமைனர் என்ற யூதர்களின் விவகாரங்கள் குறித்த கருத்துக்களை வெளியிடும் சஞ்சிகை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது.)
2009க்குப் பின்னான சூழலில், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்று ஈழத்தமிழர் தரப்புகள் விபரித்துவரும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தன்னை நியாயப்படுத்திக்கொள்வதற்கு இஸ்ரேலின் சியோனிஸத்தையே இனிமேல் முன்னுதாரணமாகக் கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதற்கான சர்வதேசப் புறச் சூழல் தீவிரமாக வீச்சடைந்திருக்கிறது என்பதே யதார்த்தமாக எமக்கு முன் விரியும் உண்மையாகிறது.
மூலநோக்குப் பங்காளிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் இந்தச் சக்திகள் தமக்கிடையே இராணுவ உறவையும் பொருளாதார உறவையும் மேலும் வலுப்படுத்திவருகின்ற சூழலில் இலங்கை அரசு எந்தத் தயவு தாட்சண்யமும் இன்றி இஸ்ரேலைப் பிரதியாக்கம் செய்யும் என்பது வெள்ளிடை மலை.
மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருக்கும் இலங்கையின் சக்திப் பொருளாதாரத்திலும் அடிப்படை மாற்றங்களை அமெரிக்க மூலோபாய வியூகம் ஏற்படுத்த முயல்கிறது என்பதையும் ஆழமாக உற்றுநோக்கவேண்டும்.
அரச காணிகளாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை வனவள, வனவிலங்கு, மகாவலி, கரையோரப் பாதுகாப்பு என்று அமைச்சுகள் மற்றும் அதிகாரசபைகள் மூலமாக தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சுவீகரித்துச் செல்கின்ற இலங்கை அரசு, தனக்கான சிங்களக்குடியேற்றங்களைத் தமிழர் தாயகமெங்கும் நிர்மாணிக்கும் வகையில் இஸ்ரேல் வகுத்திருக்கும் அடிப்படைச் சட்டம் போன்ற அரசியல் யாப்பு மாற்றங்களைக் கொண்டுவந்து மேலும் வேகமாகச் செயலாற்ற முனைந்தால் அதைப் பார்த்து யாரும் அதிசயிக்கப்போவதில்லை.
அடுத்த கட்டமாக இலங்கையின் ஆட்சிக் கட்டிலில் யார் ஏறினாலும், அதாவது, கோதபாயா ஆண்டால் என்ன விக்கிரமசிங்கா ஆண்டால் என்ன, நடக்கப்போவது ஒன்றுதான்.
இலங்கைத் தீவில் சிங்கள மக்களுக்கு மட்டுமே சுய நிர்ணய உரிமை உண்டு என்று கூட இலங்கை அரசு இஸ்ரேல் பாணியில் சட்டமாற்றம் கொண்டுவர விழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பலப்படுத்த இந்திய அரசும் தமிழர்களுக்குத் துணைவரப்போவதில்லை என்பது தெள்ளத் தெளிவு.
ஆகவே, சுயநிர்ணய உரிமை என்ற தளத்தில் மேலும் இறுக்கமான நிலைப்பாட்டை ஈழத்தமிழர்களின் அனைத்துத் தரப்பினரும் எடுத்தாக வேண்டும்.
'அது' இல்லாத 'இது' இல்லாத சுய நிர்ணய உரிமையை நாம் கேட்கிறோம் என்றோ, சுயநிர்ணயம் இல்லாத சமஷ்டி என்ற வேஷ்டியே நாங்கள் கட்டுவோம் என்று அடம் பிடித்தோ, எந்தத் தீர்வை நோக்கியும் ஈழத்தமிழர்கள் நகரப்போவதில்லை. மாறாக, வரலாற்றில் ஈழத்தமிழர்களைப் பின்னோக்கிப் பயணிக்கவைக்கும் பொறியாகவே இந்த அடம் பிடித்தல் அமையும்.
உறுதியாக உரிமை சார்ந்த சுயநிர்ணயம், தனித்துவமான இறைமை என்ற தளத்தை வலுப்படுத்திய கொள்கையை முன்வைத்து ஒன்றுதிரள்வதன் மூலமே சுயநிர்ணய உரிமை சார்ந்த அடுத்த கட்டப் பயணத்தில் ஈழத்தமிழர்கள் திண்ணமாகக் காலூன்றி நகரமுடியும்.
இலங்கைத் தீவில் சலுகைகள் சார்ந்த அரசியல் இனிமேலும் முஸ்லிம்களுக்குச் சார்பாக அமையப்போவதில்லை.
ஈழத்தமிழர்களின் உரிமைகள் சார்ந்த போராட்டம் தீவிரமடைந்தபோது தமிழ் பேசும் முஸ்லிம்களின் சலுகைகள் சார்ந்த அரசியலுக்கு கடந்தகாலத்தில் இருந்த அரசியல்வெளி எதிர்காலத்தில் இருக்கப்போவதில்லை.
ஆகவே, ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு என்ற உரிமை சார்ந்த கோரிக்கையில், ஈழத்தமிழர்களுடன் ஒன்றித்துப் பயணித்தால் அன்றி, சிங்களப் பெருந்தேசியவாதத்தை இலங்கைத் தீவில் முறியடிக்கமுடியாது.
சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு ஆப்படிக்காமல் வேறு எந்த பண்பாட்டு அடையாளமும் இலங்கைத் தீவில் சுயமரியாதையுடன் தன் இருப்பைத் தக்கவைக்கமுடியாது.
இலங்கை ஒற்றையாட்சி அரசு இஸ்ரேலை ஒத்துச் சிந்திக்கிறதென்றால், எந்த நிலைவரினும் தமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பவற்றை விட்டுக்கொடுக்காது போராடிவரும் பாலஸ்தீனியரின் கொள்கை நிலைப்பாட்டை ஒத்தே ஈழத்தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.
இலங்கைத் தீவின் உள்விவகாரங்கள் எமது அரசியல் வெளியையும் கொள்கை நிலைப்பாட்டையும் தீர்மானிப்பதை விட சர்வதேச வெளிவிவகாரங்களே தீர்மானிக்கின்றன.
ஆகவே, சர்வதேச ஓட்டங்களின் திக்குகளை உற்றுநோக்கி, அவற்றின் போக்குகளை உய்த்துணர்ந்த நிலையில் எமது உரிமை சார் அரசியற் தளத்தைக் கெட்டிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
இஸ்ரேல் இலங்கைக்கு முன்னுதாரணம் என்றால், பாலஸ்தீனியர்களின் உரிமைப்போராட்டம் ஈழத்தமிழருக்கான ஒரு முன்னுதாரணம்.
இந்த வகையில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையே ஆழமான உரிமை சார் உறவு தீட்டப்படவேண்டும்.
இதுவே எமக்குரிய மூலோபாயக் கூட்டு என்பதை இரண்டு தரப்புகளும் எவ்வளவு வேகமாகப் புரிந்துகொள்கிறார்களோ அவ்வளவுக்கு அந்தப் புரிதல் அவர்களுக்கு நன்மை பயப்பதாகும்.
ஆனால், தேர்தல் அரசியலில் மூழ்கித் திளைத்திருக்கும் ஈழத்தமிழர்களின் அரசியற் தலைமைகள் எனத் தம்மைக் கூறிக்கொள்வோரும் அந்த இடத்தைப் பிடிக்க ஆசைப்படும் இதர கட்சியினரும் தமிழ் முஸ்லிம் உறவு வலுப்பட அடித்தளம் இடுவதற்குத் தயாராக உள்ளார்களா என்பது கேள்விக்குறியே.
ஆக, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர்களின், தமிழ் பேசும் முஸ்லிம்களின் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் விழிப்போடு விரைந்து செயலாற்றவேண்டிய காலம் இது என்பதே இஸ்ரேல் சார்ந்த சர்வதேச அரசியல் எமக்குச் சொல்லித் தரும் இன்றைய அரசியற் பாடமாகிறது.
