வடக்கு - கிழக்கு தாயகப் பிரதேசங்களில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட

ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்க மைத்திரி ஏற்பாடு - ராவண பலய என்ற பௌத்த அமைப்பு கூறுகின்றது

மகிந்த தரப்பு அமைச்சர்களும் அழுத்தம்
பதிப்பு: 2018 நவ. 20 16:47
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 20 20:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்து வருவதாக ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்தார். பௌத்த பிக்குகளை மையமாகக் கொண்ட பொதுபலசேனா, ராவண பலய ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது ஞானசாரதேரரை விடுதலை செய்ய இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இத்தானந்தே சுகத தேரர் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
 
இலங்கைச் சட்ட மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளோடு கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாக மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாகவும் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரர், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் நெருக்கிய நண்பர் என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார்.

கடந்த ஒக்ரோபர் 26 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற நாள் முதல் அத்தே ஞானசார தேரரரின் விடுதலை தொடர்பாக பௌத்த பிக்குமார் பேச்சு நடத்தி வந்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, பொதுபலசேன, ராவண பலய ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு பேச்சு நடத்தி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்திருந்தார்.

மகிந்த தரப்பு அமைச்சர்கள் பலரும் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ராவண பலய என்ற பௌத்த அமைப்பின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் புத்தர் சிலை வைப்பது, இலங்கை இராணுவ முகாம்களை புதுப்பிப்பது மற்றும் இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஞானசார தேரர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், ஞானசார தேரரும் அவருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிலரையும் விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு ஆறு வருட சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் நேற்று பௌத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.