
இது முற்றுமுழுதாக அமெரிக்காவின் இராணுவ கேந்திர நலன்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு நகர்வே என்றார் அவர்.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் முதலீட்டு அபிவிருத்திச் சபை, மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகளுடன் குறித்த அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் குழு ஒன்று கடந்த சில வாரங்களாக கலந்துரையாடிவந்ததன் தொடர்ச்சியாகேவ இந்த உடன்படிக்கை கைச்சாத்தானதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டாலும், இலங்கையில் ஏற்படக்கூடிய அரச மாற்றங்களுக்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்க அரசியல், இராணுவத் தரப்புகளில் இருந்து அண்மைக்காலமாக அதிகரித்திருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கிழக்குக் கடலின் J5, J6 என்று அடையாளப்படுத்தப்படும் பகுதிகளுக்கான ஒப்பந்தமே இது என்ற தகவலை கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC என்ற நிறுவனம் மத்தியகிழக்கில் டுபாயில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனமாகும்.
இந்த நிறுவனமே தமிழர் தாயக பிரதேசமான கிழக்கில் வடக்கையும் கிழக்கையும் உள்ளடக்கிய கிழக்குக் கடலில் பல இடங்களில் எண்ணை மற்றும் ஏனைய எரிவாயு தொடர்பான ஆய்வுகளை நடத்தவுள்ளது.
இந்த ஆய்வுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டு கிழக்கு கடலில் எண்ணெய வள ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியாக, Total என்ற பிரெஞ்சு நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தது. ஆனாலும் பல்வேறு வெளிச்சக்திகளின் அழுத்தங்களினால் அந்த உடன்படிக்கை கைவிடப்பட்டது.
2009 ஆம் ஆண்டுக்கு முந்திய அரசியல் சூழலில் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான கேந்திர நிலையங்களைத் தம்வசப்படுத்தும் நோக்கில் இந்திய அரசும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் பேச்சுக்கைள நடத்தியிருந்தது. சீன அரசும் ஏட்டிக்குப் போட்டியாக இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டது.
தமிழர் தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்கள் தமது இறைமையுடன் கூடிய சுயநிர்யண உரிமையை வலியுறுத்தி வரும் நிலையில், கிழக்குப் பிரதேசத்தை வெளிச் சக்திகளின் ஆளுகைக்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் ஜே.ஆர் ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டன.
ஆனாலும், தொடர்ந்து வந்த போர்க்கால சூழல் அதற்கு இடமளிக்கவில்லை.
இரண்டாம் உலகயுத்தகாலத்தின்போது திருகோணமலையைத் தனது தளமாகக் கொண்டு பிரித்தானிய காலனித்துவ அரசு இயங்கியதும், தொடர்ந்தும் திருமலையை விமானத்தளமாகப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கையை டி.எஸ் சேனநாயக்காவுடன் ஏற்படுத்திக்கொண்டதும் வரலாறு.
இதே பாணியிலேயே ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப் போரின் போதும் அதன் தொடர்ச்சியாகவும் அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவும் செயற்பட்டுவந்துள்ளன.
தற்போது முல்லைத்தீவும் மட்டக்களப்பும் இந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாகக் கட்டமைப்பு இன அழிப்பை எதிர்நோக்கவுள்ளன என்று திருகோணமலை வாழ் தமிழ் அவதானிகள் கூர்மை செய்தித்தளத்திற்குச் சுட்டிக்காட்டினர்.
இந்திய முனைப்பால் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையும் வடக்கு கிழக்கு வாழ் ஈழத்தமிழர்களின் இறைமை, சுயநிர்ணயம் குறித்த அங்கீகாரமற்ற ஒன்றாக ஒற்றையாட்சிக்கு முண்டுகொடுப்பதாகவே வெளிப்பட்டது.
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரின் பின்னர் கிழக்கு பிரதேசத்தை அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய வல்லரசுகளின் போட்டிக்களமாக மாற்றி, தமிழர்களின் தாயக பிரதேசத்தைக் கூறுபோட இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்ச்சியாக முயன்றுவந்திருக்கிறது.
மேற்குலகின் போட்டிக்களமாக கிழக்குப் பிரதேசத்தை இலங்கை அரசு கையாள்வதாக இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண செய்தியாளர் மாநாடுகளில் கூறி வருகின்றார்.
2000 ஆம் ஆண்டுகளில், திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தில் இல்மனைற் கனியவளத்தை அகழ்ந்து எடுப்பதற்கான அனுமதியை ஜப்பான் நாட்டிற்கு இலங்கை அரசு வழங்கியபோதும் விக்கிரமபாகு கருணாரட்ண இவ்வாறு தெரிவித்திருந்தார்.
புல்மோட்டைவாழ் தமிழ்பேசும் முஸ்லிம்களும் கடும்போக்கு பௌத்த சிங்கள ஊடுருவலைப் பலமுனைகளிலும் எதிர்கொள்கிறார்கள்.
புல்மோட்டைக்கு வடக்கே, நாயாறு-கொக்கிளாய்-முகத்துவாரம் உள்ளடங்கிய வடமாகாணத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேசம் அண்மைக்காலமாகக் கடுமையான சிங்கள மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுவருவதும் இங்கு அவதானிக்கப்படவேண்டும்.
அதேவேளை ஈழத்தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் இணைந்து சிங்களமயமாக்கலுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தமிழர்களுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையையயும் முஸ்லிம்களுக்குள் தமிழர் விரோத மனநிலையையும் சில சக்திகள் நன்கு திட்டமிட்டு ஏற்படுத்திவருகின்றன. இதற்கு இரண்டு தரப்பினரும் எடுபடுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதும் இத்தருணத்தில் ஆழமாக நோக்கப்படவேண்டும்.