கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு புத்தாண்டுப் பணிகள் ஆரம்பம்
சிங்கள மயமாக்கும் நோக்கில் அம்பிட்டிய சுமணரெட்ண தேரர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததாக அதிகாரிகள் விசனம்
பதிப்பு: 2019 ஜன. 02 12:23
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு:
ஜன. 02 20:49
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு நிகழ்ச்சியில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வைத்தியசாலையில் கடமை புரியும் தமிழ் பேசும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிருப்பதியடைந்துள்ளனர். வைத்தியசாலையை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையா எனவும் தமிழ் வைத்தியர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க காலத்திலிருந்து மட்டக்ககளப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவர், தாதியர், சிற்றூழியர்கள் என அனைவரும் சிங்கள மொழி பேசுவர்கள் நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சிங்கள மயமாக்க வேண்டும் என்பதில் மும்முரமாக செயற்பட்டு வரும் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெட்ண தேரர், புதுவருட ஆரம்ப நாளில் பௌத்த கலாசார முறைப்படி சிங்கள மொழியில் தேசிய கீதத்தை இசைத்து பணிகளை ஆரம்பித்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது.99 வீதம் தமிழ் பேசும் பகுதியில் சிங்கள பௌத்த துறவி ஒருவர் இவ்வாறு சிங்களப் பாரம்பரியமான நிகழ்வுகளை தமிழ் பகுதியில் நடாத்துவது கொழும்பு அரசாங்கத்தின் அடக்குமுறையை வெளிக்காட்டுவதாக அங்கு பணிபுரியும் தமிழ் பேசும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குரல் எழுப்ப வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.